தேவன் _______மாதிரி

God Is _______

6 ல் 6 நாள்

தேவன் உங்களுக்கு யார்?

உடன்பிறந்த இரு பிள்ளைகள் தங்களுடைய தகப்பனை விவரிப்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு பிள்ளை தகப்பனுடைய அன்பையும், அக்கறையையும், விளையாட்டுத்தனத்தையும் விவரிக்கலாம். மற்றொரு பிள்ளை தகப்பனுடைய ஒழுக்கத்தையும், கடின உழைப்பையும், பொறுமையையும் குறித்து விவரிக்கலாம். இரண்டு பிள்ளைகளுமே ஒரே தகப்பனை தான் விவரித்தார்கள். ஆனால், அவரவர் கண்ணோட்டத்தில் இருந்து விவரித்தார்கள். அவர்கள் தங்கள் தகப்பனிடம் அதிகமாக அனுபவித்த பகுதிகளை வைத்து விவரித்தார்கள்.

இதேபோலத்தான், தேவனுடைய பிள்ளைகளும் தேவனை வெவ்வேறாக அனுபவித்திருக்கிறோம். நம்முடைய அனுபவத்திருக்கு ஏற்றாற்போல அவரை புரிந்து வைத்திருக்கிறோம். சிலர் தேவனை பரிசுத்தமுள்ளவராகவும், வல்லவராகவும் அனுபவித்து புரிந்திருப்பார்கள். சிலர் தேவனை அன்புள்ளவராகவும், மன்னிக்கிறவராகவும் அனுபவித்து புரிந்திருப்பார்கள். எந்த வகையில் பார்த்தாலும், அவர் எந்த ஒரு குறைவும் இல்லாத ஒரு பூரணமான நல்ல தகப்பன். அவருடைய வார்த்தையை போலவே அவருடைய தன்மையும் நிகரற்றது.

மாத்திரமல்ல. தேவன் நம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக தம்மை வெளிப்படுத்திருக்கிறார். எனவே தான், நீங்கள் தேவனை விவரிக்கும் வார்த்தைகள், மற்றொருவர் தேவனை விவரிக்கும் வார்த்தைகளோடு ஒத்துப்போவதில்லை. ஆனால், அது பரவாயில்லை. ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதை விட, வேதத்தோடு நம்முடைய புரிந்துக்கொள்ளுதல் ஒத்துப்போவதே முக்கியம்.

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் தேவனை அனுபவித்து அறிந்திருப்பதால், நாம் அனைவரும் கூடி வரும்போது, தேவனை குறித்த முழுமையான புரிந்துக்கொள்ளுதலுக்கு நம்மால் வர முடியும். உங்களுடைய வியாதியின் நேரத்தில், நீங்கள் தேவனை சுகமளிக்கிறவராக அனுபவித்திருப்பீர்கள். உங்களுடைய நண்பர் அவருடைய சூழ்நிலையில் தேவனை தேவைகளை சந்திக்கிறவராக அனுபவித்திருப்பார். இருவரும் ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும்போது, இருவருடைய புரிந்துக்கொள்ளுதலும், விசுவாசமும் வளர்கிறது.

சங்கீதக்காரன் இதற்கு நல்ல ஒரு உதாரணம். சங்கீத புஸ்தகத்தில் துதியின் சங்கீதங்கள், புலம்பலின் சங்கீதங்கள் என்று இரண்டு விதமான சங்கீதங்களை நம்மால் பார்க்கமுடியும். வெவ்வேறு சூழ்நிலைகளில், தேவனின் வெவ்வேறு தன்மைகளை அவர் அனுபவித்ததை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். நாமும் தேவனை தேற்றுகிறவராகவும், ஆபத்துக் காலத்தில் நம்முடைய அடைக்கலமாகவும், நம்முடைய மகிழ்ச்சிக்கு ஆதாரமாகவும் புரிந்துக்கொண்டு அனுபவிக்கிறோம்.

நம்முடைய பிரச்சனைகளின் மத்தியிலும் தேவனை பார்த்து புரிந்துக்கொள்வதற்கு பதிலாக, தேவன் யாரென்பதை சூழ்நிலைகளை பார்த்து புரிந்துக்கொள்ள முயற்சிக்கும்போது தான், பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. நம்முடைய உணர்வுகளின் அடிப்படையில் தேவனை புரிந்துக்கொள்ள முயற்சிப்போமானால், நிச்சயமாக தேவனையும் நம்மை போல் ஒருவராகவோ, அல்லது நம்முடைய எண்ணப்படி செயல்படுகிற ஒருவராகவோ தான் புரிந்திருப்போம்.

ஆனால், நம்முடைய சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவனுடைய உண்மைத்தன்மையோடு புரிந்திருப்போமானால், நிச்சயம் நம்பிக்கையையும், ஆறுதலையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வோம்.

இப்போது சொல்லுங்கள், தேவன் உங்களுக்கு யார்?

இந்த கேள்விக்கு நீங்கள் வாழ்க்கை முழுவதிலும் பதில் அளித்துக்கொண்டே இருக்கலாம். உங்களுடைய சிந்தனைக்கு இது மிகவும் முக்கியமான ஒரு கேள்வி.

ஜெபம்: அன்புள்ள ஆண்டவரே, நீர் பெரியவராயிருந்தும், எங்களுக்கு மிக நெருக்கமாய் இருப்பதற்காய் உமக்கு நன்றி. நான் உம்மை ______ ஆக அறிந்திருக்கிறேன். மற்றும் _____ ஆக விசுவாசிக்கிறேன். உம்மை குறித்த என்னுடைய புரிந்துக்கொள்ளுதலில் நான் எங்கேயாவது தவறியிருந்தால், அதை எனக்கு வெளிப்படுத்தும். உம்மை சரியாகவும் ஆழமாகவும் அறிந்துக்கொள்ளக்கூடிய அனுபவங்களை எனக்கு தந்தருளும். என்னுடைய சூழ்நிலைகளின் அடிப்படையில் நான் உம்மை புரிந்துக்கொள்வதை நிறுத்த எனக்கு உதவி செய்யும். கடினமான சூழ்நிலைகளிலும், உம்மை சரியான புரிந்துக்கொள்ளுதலோடு பார்த்து அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன். ஆமென்.

சவால்: நாம் முதல் நாளிலிருந்து கற்றுக்கொண்டதை திரும்பி பாருங்கள். தேவன் யார், எப்படிபட்டவர் என்று இதுவரை நாம் தியானித்ததோடு வேறு எவைகளை உங்களால் சேர்க்க முடியும் என்று சிந்தியுங்கள். உங்கள் தனிப்பட்ட அனுபவங்களில், தேவனை எவ்வாறாக அனுபவித்து அறிந்திருக்கிறீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். அவைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவனுடைய தன்மையை நீங்கள் சந்தேகப்படும் தருணங்கள் எதிர்காலத்தில் வந்தால், அந்த குறிப்புகள் உங்களுக்கு உதவி செய்யும்.

இந்த வேத தியானத்திட்டம் போதகர் கிரேக் க்ரோஷல் அவர்கள் Life.Church –இல் கொடுத்த பிரசங்கத் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது. மேலும் தகவல் அறிய இந்த வலைத்தள இணைப்பை பயன்படுத்தவும் www.life.church/Godis

நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

God Is _______

தேவன் யார்? எப்படிபட்டவர்? என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களை சொல்லுவோம். நமக்கே ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பதில்கள் நம்முடைய எண்ணங்களில் தோன்றும். ஆனால், இவைகளில் எவை உண்மை, எவை உண்மை அல்லவென்று எப்படி அறிந்துகொள்ளுவோம்? நீங்கள் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட அனுபவத்தை உடையவராய் இருந்தாலும், எந்த திருச்சபையை சேர்ந்தவராக இருந்தாலும், தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் உங்கள் அருகில் இருக்கிறார், அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக போதகர் கிரேக் க்ரோஷல் அவர்களுடைய 'தேவன் _______' என்கிறதான இந்த 6 நாள் வேத தியான திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.