தேவன் _______மாதிரி

God Is _______

6 ல் 2 நாள்

தேவன் இரக்கமுள்ளவர்

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயம் செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையில் சேரக்கடவோம். எபிரெயர் 4:16

நாம் நேற்றையதினம் தியானித்தது போலவே, தேவன் நம்மை பின்தொடர்ந்து வருகிறவர். அவர் நம்மை பின்தொடர்வதற்கு நமக்கு சிறிதும் தகுதியில்லை என்றாலும், அவர் நம்மேல் வைத்த இரக்கத்தினாலே நம்மை பின் தொடர்ந்து வருகிறார். இது தான் தேவனுடைய இரக்கத்தின் தனிச்சிறப்பு

நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்கள் ஆனோம். நம்முடைய பாவமே, பரிசுத்தமுள்ள தேவனுக்கும் நமக்கும் நடுவாக பெரிய தடுப்புசுவராக நின்றது. ஆனால், தேவன் நம் மேல் வைத்த தமது இரக்கத்தினாலே, தமது ஒரே குமாரனான இயேசுவை, நம்முடைய பாவங்களுக்கான தண்டனைகளை அனுபவிக்கும்படியாக இந்த உலகத்திற்குள் அனுப்பினார். நமக்கு தகுதியான ஆக்கினையை, நம் சார்பில் அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தபடியினாலே, அவர் மூலமாக நாம் பிதாவாகிய தேவனோடு மீண்டும் உறவுகொண்டு, நித்திய ஜீவனை சுதந்தரிக்க தகுதியுள்ளவர்கள் ஆகிறோம்.

நமக்கு தகுதியில்லாததையும் தேவன் நமக்கு இலவசமாக தருவது தான் தேவ இரக்கம். ஆனால், இது அத்துடன் முடியவில்லை. தேவ இரக்கமானது, நம்மை பாவத்திலிருந்து வெளியே கொண்டுவந்ததோடு முடியவில்லை. தேவனையும் நமக்குள்ளாக கொண்டு வந்தது. நம்முடைய பாவத்தை நீக்கியது மாத்திரம் அல்ல, அவருடைய குமாரனாகிய இயேசுவை நம்மிடத்தில் அனுப்பினார். நாம் எங்கே இருக்கிறோமோ, அங்கேயே தம்முடைய குமாரனை நம்மிடத்தில் அனுப்பினார்.

இயேசு இம்மானுவேலாக வந்தார்: தேவன் நம்மோடு இருக்கிறார். அவர் நம்மேல் வைத்த அன்பிற்கும் இரக்கத்திற்கும் நிருபணமாக, ஒரு மனிதன் என்னென்ன கஷ்டங்கள் எல்லாம் அனுபவிப்பானோ, அவைகளை எல்லாவற்றையும் இந்த உலகத்தில் அவர் அனுபவித்தார். நம்மை பிதாவோடு கூட இணைக்கும்படியாக. அவர் நம்மிடத்தில் சமீபமாக வந்த அந்த தருணத்தில், தேவ இரக்கத்தை நாம் பார்க்கிறோம்.

சுவிசேஷ புஸ்தகங்களில் வாசிக்கும்போது, இயேசுவிடம் வந்து "எங்கள் மேல் இரக்கமாயிரும்" என்று வேண்டிகொண்ட அநேகரை நாம் பார்க்கமுடியும். அதிலே முக்கியமான ஒரு சம்பவம் லூக்கா 17 ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. குஷ்டரோகி ஒருவன் இயேசுவினிடத்தில் வருகிறான்.

அன்றைய காலங்களில், குஷ்டரோகம் உடையவர்கள் தீண்டப்படாதவர்களாய் பார்க்கப்பட்டு, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டார்கள். லேவியராகம முறைமையின்படி, குஷ்டரோகம் உடையவர்கள் தீட்டுள்ளவர்கள். அவர்களை தொடுகிற / அவர்களால் தொடப்படுகிற எவரும் தீட்டுள்ளவர்களாவார்கள்

ஆனால், இயேசுவோ மனித உருவம் எடுத்த கடவுள். அவர் பிறப்பிலேயே பரிசுத்தமானவர். அவரில் எவ்வளவேனும் தீட்டில்லை. குஷ்டரோகிகள் அவரிடம் வந்து, இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள். இயேசு அவர்களை, நியாயப்பிரமாண முறைமையின்படி தங்களை ஆசாரியர்களுக்கு காண்பிக்க சொல்லி அனுப்புகிறார். போகிற வழியிலே அவர்கள் சுத்தமானார்கள்.

இயேசு நியாயப்பிரமாண விதியை எதிர்திசையில் செயல்படுத்துகிறார். குஷ்டரோகிகளின் தீட்டு இயேசுவை தீட்டுப்படுத்தவில்லை. மாறாக, இயேசுவின் பரிசுத்தம் குஷ்டரோகிகளை சுத்தமாக்குகிறது.

இந்த சம்பவத்தில் இயேசுவின் பரிசுத்தம் எப்படி அவர்களுடைய அசுத்தத்தை நீக்கி அவர்களை சுத்திகரித்ததோ, அதை தான் இயேசுவின் சிலுவை மரணமும் உயிர்த்தெழுதலும் நமக்கு செய்கிறது. தேவன் நம்முடைய பாவங்களை, சாபங்களை, வியாதிகளை, பெலவீனங்களை நம்மைவிட்டு அகற்றியது மாத்திரமல்ல, இயேசுவின் மூலமாக நம் அருகில் வந்து நம்மை சந்திக்கிறார். கிறிஸ்துவுக்குள்ளான இரட்சிப்பை நம்முடைய வாழ்க்கையில் எப்போது பெற்றுக்கொள்கிறோமோ, அப்போதே இயேசுவின் மூலமாக தேவனுடைய இரக்கத்தையும் பெற்று அனுபவிக்கிறோம்.

ஆனால், இன்னும் இது முடியவில்லை. தேவனுடைய இரக்கத்தை நம்முடைய ஆத்தும இரட்சிப்பில் மாத்திரமல்ல, நம்முடைய வலி வேதனைகளுள்ள சூழ்நிலைகளில், வியாதியின் நேரங்களில், இழப்புகளின் தருணங்களில் அந்த குஷ்டரோகிகளை போல நம்மால் அனுபவிக்க முடியும். தேவனுடைய இரக்கத்தை உங்களுடைய ஆத்தும மீட்பில் மாத்திரமல்ல, உங்களுடைய சரீரத்திலும், உலக வாழ்க்கையிலும் நீங்கள் பெற்று அனுபவிக்க முடியும். இதை வாசித்துகொண்டிருக்கிற நீங்கள், ஒருவேளை தற்போது கடினமான சூழ்நிலையில் நடுவில் கடந்துபோய் கொண்டிருப்பீர்களானால், தேவ இரக்கத்திற்காக இயேசுவை நோக்கி பாருங்கள். அவர் உங்களோடு கூடவே இருக்கிறார். உங்களை விடுதலையாக்க, சுகமாக்க, ஆறுதல்படுத்த, உற்சாகப்படுத்த அவர் வல்லவராக இருக்கிறார்.

ஜெபம்: அன்பு தகப்பனே, எங்கள் மீது நீர் கொண்டிருக்கிற உம்முடைய அளவுக்கடந்த இரக்கத்திற்காக நன்றி செலுத்துகிறேன். உம்முடைய இரக்கத்தை வெளிப்படுத்த இயேசுவை எங்களுக்கு தந்ததற்காக நன்றி. எங்களுடைய கடினமான சூழ்நிலைகளில் நீர் எங்களை விட்டு விலகாமல், எங்களை கைவிடாமல் இருக்கிறதற்காக நன்றி. சிறிதும் தகுதியில்லாத எங்கள் மீது நீர் பொழிகிற உமது இரக்கத்திற்காக நன்றி. நான் இப்போது கடந்து போய்க்கொண்டிருக்கிற இந்த கடினமான சூழ்நிலையிலும் உம்முடைய இரக்கத்தை பற்றிக்கொண்டு அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம். அமென்.

சவால்: உங்கள் வாழ்க்கையில் தேவ இரக்கத்தை எவ்விதத்தில் அனுபவிக்கலாம், அதை மற்றவரிடம் எப்படி வெளிப்படுத்தலாம் என்று சிந்தியுங்கள்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

God Is _______

தேவன் யார்? எப்படிபட்டவர்? என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களை சொல்லுவோம். நமக்கே ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பதில்கள் நம்முடைய எண்ணங்களில் தோன்றும். ஆனால், இவைகளில் எவை உண்மை, எவை உண்மை அல்லவென்று எப்படி அறிந்துகொள்ளுவோம்? நீங்கள் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட அனுபவத்தை உடையவராய் இருந்தாலும், எந்த திருச்சபையை சேர்ந்தவராக இருந்தாலும், தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் உங்கள் அருகில் இருக்கிறார், அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக போதகர் கிரேக் க்ரோஷல் அவர்களுடைய 'தேவன் _______' என்கிறதான இந்த 6 நாள் வேத தியான திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.