தேவன் _______மாதிரி

God Is _______

6 ல் 5 நாள்

தேவன் சத்தியமுள்ளவர்

கர்த்தர் அவனுக்கு முன்பாக கடந்துபோகிற போது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியை குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும், மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். யாத்திராகமம் 34:6-7

நாம் இதுவரை தேவனுடைய சில பண்புகளை குறித்து படித்தோம். ஆனால், வேதத்தை முழுவதுமாக வாசித்தால் இன்னும் தேவனை குறித்து அநேக காரியங்களை நம்மால் கற்றுக்கொள முடியும். இன்றைக்கு நாம் வாசித்த யாத்திராகமம் 34ஆம் அதிகாரத்தில், தம்மை குறித்து 5 காரியங்களை தேவனே மோசேயிடம் வெளிப்படுத்தியதை பார்க்கிறோம்: தேவன் இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர், நீடிய சாந்தமுள்ளவர், மகா தயையுள்ளவர், சத்தியமுள்ளவர் .

எந்த ஒரு அக்கிரமத்தையும் அவர் தண்டியாமல் விடுவதில்லை என்று வாசித்த இதே வேதபகுதியில், அவர் நீடிய சாந்தமுள்ளவர் என்றும் வாசித்தோம். தேவனை குறித்த இரண்டு முரணான காரியங்கள் உங்களை குழப்புகிறதா? தேவன் இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும் உடையவர் தான். ஆனாலும், தேவன் எந்த ஒரு பாவத்தையும் தண்டியாமல் விடார் என்று அவருடைய பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அப்படியானால், பாவம் செய்தவர்கள் தேவனுடைய கோபத்தில் இருந்து தப்பித்து அவருடைய அன்பை பெற்றுக்கொள்வது எப்படி?

தேவனை புரிந்துக்கொள்ள முயற்சிக்கும் அநேகர், தேவனை கருப்பு வெள்ளையாக பார்க்க முயற்சிக்கிறார்கள். ஒன்று அவர் அன்புள்ளவராக இருக்கவேண்டும், அல்லது அவர் தண்டிக்கிறவராக இருக்கவேண்டும் என்ற ஒரு புரிந்துக்கொள்ளுதல். ஒரே பெட்டிக்குள் தேவனுடைய தன்மையை நம்மால் அடைத்துவிட முடியாது. அவர் அன்புள்ளவர் தான், ஆனால் அதே நேரத்தில் அவர் நீதியுள்ளவர். அதனால் தான், அவர் குற்றவாளியை அவர் குற்றமற்றவனாக விடமாட்டேன் என்கிறார். சில தலைமுறைகளை அவர் தண்டித்திருந்தாலும், அநேக ஆயிரங்களுக்கு அவருடைய அன்பை கொடுத்து அனுபவிக்க செய்து, அவர் இரக்கமுள்ளவர் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேவனுடைய அன்பு, நீதி - இரண்டுமே வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சத்தியமுள்ளவர் என்ற அவருடைய தன்மையில் இந்த இரண்டுமே முக்கிய பங்கு வகிக்கிறது.

அவரோடு கூடிய நம்முடைய உறவை சீர்படுத்தும் அவருடைய திட்டம், ஆதியாகம புஸ்தகத்தில் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் அவர் கொடுத்த வாக்குத்தத்திலிருந்து துவங்குகிறது. பூமியின் வம்சங்களெல்லாம் அவர்களுடைய சந்ததிக்குள் ஆசீர்வதிக்கபட்டிருக்கும் என்ற தேவனுடைய வாக்குத்தத்தம், பிற்காலத்தில் இயேசுவின் மூலமாக நிறைவேறுகிறது.

ஆனால் மனிதர்கள் தரப்பில் உண்மையற்ற தன்மையும் பாவமும் பெருகிக்கொண்டே இருந்தது. இவைகளையெல்லாம் தேவன் மோசேயோடு கூட பேசிக்கொண்டு இருக்கும்போதே, மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு பொன் கன்றுக்குட்டியை செய்வித்து அதனை ஆராதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்து அவர்கள் அனைவரையும் முற்றிலுமாக அழித்துவிடவில்லை.

மாறாக, தொடர்ந்து பாவம் செய்து, தேவனை விட்டு விலகி சென்றவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். மனம் திரும்பி தேவனிடம் வந்தவர்கள், மன்னிப்பை பெற்றுக்கொண்டார்கள்.

மனிதர்களின் பலவிதமான தோல்விகளிலும் கூட, தேவனுடைய அன்பும், இரக்கமும் மாறாததாய் இருக்கிறது. எனவே தான், இயேசு நமக்காக கொடுக்கப்பட்டார். அவர் இன்றும் சத்தியமுள்ளவராய் இருக்கிறார்.

எனவே ஒவ்வொரு முறை நாம் நம்முடைய வாழ்வில் தவறும்போதும், தேவனிடம் தைரியமாக ஓடி வரலாம். தேவன் உங்கள் மீதுள்ள தம்முடைய அன்பிலும், இரக்கத்திலும், தமது வாக்குத்தத்தத்திலும் சத்தியமுள்ளவராக இருக்கிறார். உங்களுடைய தடுமாற்றங்கள் எந்தவிதத்திலும் அவருடைய தன்மையை மாற்றுவது இல்லை.

ஜெபம்: அன்புள்ள தகப்பனே, நீர் என்னுடைய வாழ்க்கையில் உண்மையுள்ளவராகவும் சத்தியமுள்ளவராகவும் இருக்கிறபடியினால் உமக்கு நன்றி. நான் தடுமாறி விழும்போதும், நீர் என்னை கைவிடாமல் இருக்கிறபடியினால் உமக்கு நன்றி. உம்முடைய கிருபைக்காக உம்மை துதிக்கிறேன். நீர் உம்முடைய செயல்களில் சத்தியமுள்ளவர் என்பதை நான் இன்னும் கண்டு அறிந்துக்கொள்ள எனக்கு உதவி செய்யும். உம்மை பற்றும் விசுவாசத்திலும் நான் வளர எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

சவால்: உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எந்தெந்த பகுதிகளில் தேவனை சத்தியமுள்ளவராக அனுபவித்து இருக்கிறீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். முடிந்தால், நினைவில் வருபவற்றை ஒரு காகிதத்தில் எடுத்து எழுதுங்கள். இதனை அடிக்கடி செய்யுங்கள்.

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

God Is _______

தேவன் யார்? எப்படிபட்டவர்? என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களை சொல்லுவோம். நமக்கே ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பதில்கள் நம்முடைய எண்ணங்களில் தோன்றும். ஆனால், இவைகளில் எவை உண்மை, எவை உண்மை அல்லவென்று எப்படி அறிந்துகொள்ளுவோம்? நீங்கள் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட அனுபவத்தை உடையவராய் இருந்தாலும், எந்த திருச்சபையை சேர்ந்தவராக இருந்தாலும், தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் உங்கள் அருகில் இருக்கிறார், அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக போதகர் கிரேக் க்ரோஷல் அவர்களுடைய 'தேவன் _______' என்கிறதான இந்த 6 நாள் வேத தியான திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.