தேவன் _______மாதிரி

God Is _______

6 ல் 1 நாள்

தேவன் யார்?

தேவன் _______.

தேவன் என்று சொன்னவுடன் உடனடியாக உங்களுடைய சிந்தையில் வருவது என்ன? உங்களில் சிலர் தேவனை உங்களுடைய நேச பிதாவாக அறிந்திருப்பீர்கள். சிலர் அவரை சுகமளிக்கிறவராகவும் தேவைகளை சந்திக்கிறவராகவும் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருப்பீர்கள். இன்னும் சிலர் ஒருவேளை தேவனை தொலைவில் இருக்கிறவராகவோ, கோபப்படுகிறவராகவோ, குற்றம் பிடித்து தண்டிக்கிறவராகவோ நினைத்துக்கொண்டு இருக்கலாம்.

நீங்கள் தேவனை உங்களுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்டவராக அறிந்திருக்கிறீர்களோ, அந்த அறிவு நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. "நீங்கள் தேவனை எப்படிப்பட்டவராக அறிந்திருக்கிறீர்கள் என்பதே உங்களைக் குறித்த மிக முக்கியமான காரியம்" என்று உலக புகழ்பெற்ற எழுத்தாளர் A.W. டோசர் அவர்கள் தங்களுடைய ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள்.

நாம் நம்மை எப்படி பார்க்கிறோம், மற்றவர்களை எப்படி பார்க்கிறோம், நம்மை சுற்றிலும் இருக்கிற உலகத்தை எப்படி பார்க்கிறோம் என்பதெல்லாம், நாம் தேவனை எப்படி பார்க்கிறோம் என்பதை பொருத்தே இருக்கிறது. எனவே தான், நிலையில்லாத நம்முடைய உணர்வுகளின் அடிப்படையில் இல்லாமல், என்றும் மாறாத தேவனுடைய வார்த்தையின் அடித்தளத்தில் தேவன் எப்படிபட்டவர் என்பதை நாம் சரியாக புரிந்து வைத்திருப்பது அவசியம்.

சில நேரங்களில் நீங்கள் சந்தித்த கஷ்டங்களும், ஏமாற்றங்களும், இழப்புகளும் ஒருவேளை தேவன் மீது உங்களுக்கு கோபத்தையோ அதிருப்தியையோ ஏற்படுத்தி இருக்கலாம். ஒருவேளை நீங்கள் சந்தித்த சில கிறிஸ்தவர்கள் உங்களை வேதனைப்படுத்தினதாலேயும் குற்றப்படுத்தினதாலேயும், தேவனும் அப்படிபட்டவராய் தான் இருப்பாரோ என்ற எண்ணத்தை உங்கள் மனதில் விதைத்திருக்கலாம். நீங்கள் ஜெபிக்க முயற்சித்தும், தேவ சமுகத்தில் நேரம் செலவிட்டும், எதுவுமே மாறாதது போல உணரலாம். தேவன் தொலைவில் இருக்கிறார், அவருக்கு உங்கள் மீது அன்போ இரக்கமோ இல்லை என்ற எண்ணங்கள் கூட உங்களுக்கு இருக்கலாம்.

இப்படிப்பட்ட உங்களுடைய அனுபவங்களும், உணர்வுகளும் உண்மை தான் என்றாலும், உங்களுடைய உணர்வுகளும் சூழ்நிலைகளும் தேவனுடைய தன்மையை உங்களுக்கு முழுமையாகவோ சரியாகவோ வெளிப்படுத்த முடியாது.

தேவனை குறித்த நமது புரிந்துகொள்ளுதலை சிதைப்பதென்பது, உலக தோற்றத்தின் முதலே பிசாசானவன் பயன்படுத்துகிற ஒரு யுக்தி. தேவன் படைத்த ஆதி மனிதர்களாகிய ஆதாமும் ஏவாளும், தேவன் கொடுத்த அழகான வளமிக்க ஏதேன் தோட்டத்திலே தேவனோடு கூட சஞ்சரித்தார்கள். ஒரேயொரு கட்டுபாட்டை தான் தேவன் அவர்களுக்கு கொடுத்திருந்தார்: நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்ற கட்டுப்பாடு. ஆனால், பிசாசானவன் வந்து ஏவாளிடம், தேவன் அந்த விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம் என்று சொன்னது உண்டோ என்ற கேள்வியை எழுப்பி, கடைசியில் மனிதர்களுக்கு தேவையான ஏதோ ஒன்றை தேவன் கொடுக்காமல் விலக்கி வைத்திருக்கிறார் என்ற பொய்யான புரிந்துகொள்ளுதலை கொடுத்து அவர்களை நம்பவைத்துவிட்டான்.

அதன் விளைவாக, அவள் அந்த கனியை புசித்து, தேவனோடு கூட இருந்த அந்த நல்ல உறவை கேடுக்கும்வகையில், இந்த உலகத்திற்குள் பாவத்தை அனுமதித்துவிட்டாள்.

இவைகள் சம்பவித்தும், தேவனுடைய தன்மையோ குணமோ மாறவில்லை. நிர்வாணிகள் என்ற உணர்ந்த அவர்களுடைய சரீரங்களை தேவனே ஆடைகளை கொடுத்து உடுத்துகிறார். அவர் அன்றைக்கு அவர்களுடைய சரீரத்தை மூடியது, பின்னாட்களில் நம்முடைய பாவங்களை, தம்முடைய அன்பினாலும், தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவின் தியாக சிலுவை மரணத்தினாலும் மூடியதின் முன்னோட்டமே. மாத்திரமல்ல, பாவத்தினால், மனிதன் இழந்துபோன மனிதனுக்கும் தேவனுக்குமான உறவையும் சீர்ப்படுத்துகிறார்.

பழைய ஏற்பாட்டில் கண்டிப்பானவராகவும், கடுமையானவராகவும், தண்டிக்கிறவராகவும் தெரிகிற தேவன், புதிய ஏற்பாட்டில் அன்புள்ளவராகவும் மன்னிக்கிறவராகவும் மாறியது போல சில நேரங்களில் நமக்கு தோன்றலாம். ஆனால், உண்மையில் தேவனுடைய தன்மை / குணம் பழைய ஏற்பாட்டில் இருந்தே அன்பு தான்! பாவிகளை தம் பக்கமாக இரட்சிக்கும் மனதுடையவராகவே அவர் பழைய ஏற்பாட்டின் காலத்திலும் இருந்தார். தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறதில் அவர் உண்மையுள்ளவராகவே இருந்திருக்கிறார். எப்போதுமே அவர் நீதியுள்ளவராகவும், அன்புள்ளவராகவும், பரிசுத்தமுள்ளவராகவும், வல்லமையுள்ளவராகவும் மாராதவராகவுமே இருந்திருக்கிறார், இருக்கிறார்.

தேவனுடைய தன்மை என்பதை மனிதர்களுடைய அறிவுக்கு எட்டாத உயரத்தையும், ஆழத்தையும் உடையது. அதை முற்றிலும் விளக்குவது கடினம் தான் என்றாலும், நம்முடைய புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவருடைய தன்மைகள் ஆங்காங்கே வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தேவனை குறித்த உங்களது புரிந்துகொள்ளுதல் எதன் அடிப்படையில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்து பாருங்கள். வேத வசனங்களின் அடிப்படையில் இருக்கிறதா? அல்லது உங்களுடைய தனிப்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் இருக்கிறதா?

அடுத்த சில நாட்களில், நாம் தேவனுடைய தன்மைகள் சிலவற்றை வேதத்தினுடைய வெளிப்பாட்டிலிருந்து தியானிக்க இருக்கிறோம். இந்த தியானத்தின் மூலம், தேவன் தமது உண்மை தன்மையை உங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று அவரிடம் கேளுங்கள். நீங்கள் சந்தித்த மனிதர்களால், சூழ்நிலைகளால், கிறிஸ்தவர்களால், சபை அங்கத்தினர்களால், எப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தாலும், ஒன்றை மாத்திரம் உங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: உங்களை படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன், உங்களை நேசிக்கிறார். உங்கள் மீது ஆவலுள்ளவராய் இருக்கிறார். உங்களை பின்தொடர்ந்து வருகிறார்.

ஜெபம்: அன்புள்ள தேவனே, அநேக நேரங்களில் உம்மை என்னுடைய அனுபவங்களின் அடிப்படையில், தவறாகவே புரிந்திருக்கிறேன். உம்மை குறித்த புரிந்துக்கொள்ளுதலில் நான் எங்கெல்லாம் தவறாய் இருக்கிறேனோ, நீர் எனக்கு அவைகளை சுட்டிக்காட்டி, உம்மை குறித்த சரியான புரிந்துக்கொள்ளுதலுக்கு நேராக என்னை வழிநடத்தும். உம்முடைய சத்தியத்தினால் இன்னும் உம்மை குறித்து நான் அறிந்துகொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். அமென்.

சவால்: கோடிட்ட இடத்தை நிரப்பவும்: தேவன் _______. கோடிட்ட இடத்தில் என்ன வார்த்தைகளெல்லாம் உங்களுக்கு தோன்றுகிறதோ, அவைகள் அனைத்தையும் எழுதுங்கள். பின்னர், நீங்கள் எழுதிய வார்த்தைகளுடன் ஒத்துப்போகிற வேத வசனங்களையோ, பகுதிகளையோ தேடி கண்டுபிடியுங்கள்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

God Is _______

தேவன் யார்? எப்படிபட்டவர்? என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களை சொல்லுவோம். நமக்கே ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பதில்கள் நம்முடைய எண்ணங்களில் தோன்றும். ஆனால், இவைகளில் எவை உண்மை, எவை உண்மை அல்லவென்று எப்படி அறிந்துகொள்ளுவோம்? நீங்கள் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட அனுபவத்தை உடையவராய் இருந்தாலும், எந்த திருச்சபையை சேர்ந்தவராக இருந்தாலும், தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் உங்கள் அருகில் இருக்கிறார், அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக போதகர் கிரேக் க்ரோஷல் அவர்களுடைய 'தேவன் _______' என்கிறதான இந்த 6 நாள் வேத தியான திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

சம்பந்தப்பட்ட திட்டங்கள்