தேவன் _______மாதிரி
தேவன் நம்பத்தகுந்தவர்
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். எபிரெயர் 13:8
எவரேனும் உங்களிடம் பொய் சொல்லியிருக்கிறார்களா? துரோகம் செய்திருக்கிறார்களா? உங்கள் நம்பிக்கையை உடைத்திருக்கிரார்களா? நாம் அனைவருக்குமே இப்படிப்பட்ட ஓரிரு அனுபவங்களாவது நிச்சயம் இருக்கும். எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். ஏன் தெரியுமா? மனிதர்கள் எவருமே குறையில்லாதவர்கள் இல்லை.
நாம் என்னதான் பிறரிடம் நம்முடைய வார்த்தையில் உண்மையாயிருக்க, நம்பத்தகுந்தவர்களாயிருக்க முயற்சித்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அதில் தவறிவிட வாய்ப்பிருக்கிறது. குறித்த நேரத்திற்குள் ஒரு வேலையை முடிக்கமுடியாமல் போகலாம். ஒருவரிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகலாம். உறவுகளிலும் கூட ஆங்காங்கே சில கட்டங்களில் மற்றவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாய் இல்லாமல் போகலாம்.
நம்பிக்கை உடைக்கப்படுகிற தருணம் நிச்சயமாகவே வலியும் வேதனையும் நிறைந்தது. அதனுடைய தாக்கம் சிலநேரங்களில் வாழ்க்கை முழுவதிலும் கூட நம்மை பின்தொடரலாம். நம்பிக்கை முறிக்கப்படுவதின் தாக்கம் ஒருவருடைய உறவுகளில் மட்டுமல்லாது, ஒருவருடைய சரீரத்திலும் சிந்தையிலும் கூட பாதிக்கும் என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்லுகிறது.
பிறரை நம்பும் வகையிலேயே நம்முடைய மூளை நரம்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் யாரையாவது நம்பும்போது, ஆக்சிடோசின் என்ற ஒரு இரசாயனத்தை நம்முடைய மூளை சுரக்கிறது. இதனை 'காதல் இரசாயனம்' அல்லது 'நம்பிக்கையின் அமுதம்' என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த இரசாயனத்தை நம்முடைய மூளை சுரக்கும்போது, அது பிறரை நம்ப நம்முடைய மூளையை உற்சாகப்படுத்துகிறது, நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. நம்முடைய நம்பிக்கையை சிலர் காப்பாற்றும்போது, நம்முடைய நம்பும் தன்மையும் அதிகரிக்கிறது.
அதே நேரம், இது எதிர்மறையாகவும் வேலை செய்கிறது. நம்முடைய நம்பிக்கை ஒருவரால் முறிக்கப்படும்போது, நம்முடைய நம்பும் தன்மையும் குறைந்து, பிறரை கண்டு பயப்படும் தன்மையும், பிறரை சந்தேகிக்கும் தன்மையும் அதிகரிக்கிறது. இதனால், எதிர்காலத்தில் எவரையுமே நம்புவதற்கு நம்முடைய மூளை தயங்கும்.
எனவே தான், நாம் தேவனை நம்புகிற காரியத்திலும், மனிதர்களோடு கூடிய நம்முடைய கடந்த கால அனுபவங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்களிடம் நாம் அனுபவித்த நம்பிக்கை முறிவுகள், பரிபூரணமான தேவனையும் நம்பவிடாமல் நம்முடைய சிந்தையை தடுக்கிறது அல்லது சந்தேகிக்க வைக்கிறது.
உங்கள் பெற்றோர் அல்லது உங்கள் மேலதிகாரிகளோடு ஏற்பட்ட மனவலியினால், உங்களுக்கு தேவனை நம்புவதும் கடினமாக இருக்கலாம். அல்லது கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த சில கசப்பான அனுபவங்களால் உங்களுக்கு தேவனை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். இதனாலேயே உங்களுடைய ஜெபங்கள் கேட்கப்படவில்லை என்பது போலவும் தேவனுக்கு உங்கள் மீது அக்கறை இல்லை என்பது போலவும் உங்களுக்கு தோன்றுகிறது. நீங்களும் தேவனை நம்புவதை, ஜெபிப்பதை நிருத்திவிடுவீர்கள்.
உங்கள் கசப்பான அனுபவங்கள் தந்த மனவலிகள் நிஜமானவை என்றாலும், அவைகள் தேவனுடைய நிஜத்தன்மையை மாற்றுவது இல்லை. முற்றிலும் நம்பத்தகுந்தவர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர் தேவன் ஒருவரே! ஏன் தேவன் நம்பத்தகுந்தவர் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிக்கிற காரியங்களை நாம் இப்போது பார்க்கலாம்:
- அவர் மாறாதவர். நேரத்திற்கு தகுந்தாற்போல தங்களுடைய எண்ணங்களை மாற்றுகிற மனிதர்களை போல அல்லாமல், தேவன் எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் மாறாதவராய் இருக்கிறார். உங்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்பிலும், அக்கறையிலும், இரக்கத்திலும், உங்களுக்காக அவர் வைத்திருக்கும் அவருடைய நல்ல எதிர்கால திட்டங்களிலும் அவர் மாறுவதே இல்லை. அவருடைய இருக்கிறவராகவே இருக்கிறார். அவருடைய அன்பும் என்றுமுள்ளது. (மல்கியா 3:6, எபிரெயர் 13:8 வசனங்களை வாசித்துப் பாருங்கள்.)
- அவர் நம்மைவிட்டு விலகுவதுமில்லை, நம்மை கைவிடுவதுமில்லை. உங்களை விட்டு தேவனை முகம் திருப்பச் செய்ய உங்களால் என்றுமே முடியாது. நமக்கு என்ன நேரிட்டாலும், நாம் எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும், நாம் என்ன செய்தாலும், அவருடைய பிரசன்னம் நம்மோடு கூடவே இருக்கிறது. எந்த சூழலிலும் அவர் நம்மோடு கூடவே இருக்கிறார். (எபிரெயர் 13:5, ரோமர் 8:39 வசனங்களை வாசித்து பாருங்கள்.)
- அவர் நம்முடைய நன்மைக்காகவே செயல்படுகிறார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த வலி வேதனைகளையும், அவர் உங்களுக்கு நன்மையாக பயன்படுத்த முடியும். தப்புவித்து, மறுசீரமைப்பதில் அவருக்கு நிகர் அவரே! மனிதர் உங்களுக்கு செய்த தீமைகளையும் உங்களுக்கு நன்மையாக மாற்ற அவர் ஒருவரால் மாத்திரமே முடியும். (ரோமர் 8:28, ஏசாயா 61:1-3 வசனங்களை வாசித்து பாருங்கள்.)
பலமுறை நீங்கள் மனிதர்களால் கைவிடப்படிருக்கலாம். ஆனால், தேவன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களை கைவிடுவதுமில்லை. அவரே உங்கள் நம்பிக்கைக்குரியவர்.
ஜெபம்: அன்புள்ள ஆண்டவரே, _________ காரணங்களால் இதுவரை நான் உங்கள் மீது முழுமையான நம்பிக்கையை வைக்க முடியாமல் தடுமாறி இருக்கிறேன். இந்த தடுமாற்றங்களில் இருந்து மீண்டு வர நீர் எனக்கு உதவி செய்வீரா? நீர் ஒருவரே என்னுடைய வாழ்க்கையில் நம்பத்தகுந்தவாராக இருக்கிறபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம் மீது என்னுடைய விசுவாசத்தை அதிகரிக்க செய்யும். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்கும் கடினமான சூழ்நிலைகளிலும்யும் கூட, நீர் என்னுடைய நன்மைக்கு எதுவாக செயல்படுகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
சவால்: உங்கள் வாழ்க்கையில் எந்தெந்த பகுதிகளில் உங்களால் தேவனை முழுமையாக நம்பமுடியவில்லை என்று சிந்தியுங்கள். பின்பு அவைகளை தேவ சமுகத்தில் ஒப்ப்புக்கொடுங்கள். நீங்கள் அவைகளை ஒரு காகிதத்தில் எழுதி, அதனை ஒரு பாட்டிலில் அடைத்து, தேவனிடம் கொடுப்பது போல கரங்களை நீட்டி, அடையாளத்துடன் ஜெபிக்கலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி
தேவன் யார்? எப்படிபட்டவர்? என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களை சொல்லுவோம். நமக்கே ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பதில்கள் நம்முடைய எண்ணங்களில் தோன்றும். ஆனால், இவைகளில் எவை உண்மை, எவை உண்மை அல்லவென்று எப்படி அறிந்துகொள்ளுவோம்? நீங்கள் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட அனுபவத்தை உடையவராய் இருந்தாலும், எந்த திருச்சபையை சேர்ந்தவராக இருந்தாலும், தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் உங்கள் அருகில் இருக்கிறார், அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக போதகர் கிரேக் க்ரோஷல் அவர்களுடைய 'தேவன் _______' என்கிறதான இந்த 6 நாள் வேத தியான திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
More