பணமும் முதலீடும் - க்வாக் சகோதர்களுடன்மாதிரி

Money and Investing with the Kwak Brothers

7 ல் 2 நாள்

பணத்தை கையாளுதல்

இரண்டாம் நாள் தியானத்திற்கு உங்களை வரவேற்கிறேன்! பொருளாதாரத்தைக் கையாளுவதைக் குறித்து, கர்த்தர் நமக்கு கற்றுக் கொடுப்பது என்ன? (நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எல்லா பணமும் கர்த்தருடையது.) கிறிஸ்துவை மையப்படுத்தின சிந்தையோடு நாம் பொருளாதாரத்தை எப்படிக் கையாளுவது என்பதை தான் இன்றைக்கு நாம் கற்றுக்கொள்ள போகிறோம். பொருளாதாரத்தைக் கையாளுவதைக் குறித்து, பலவித உலக பிரகாரமான தந்திரங்களையும் யுக்திகளையும் உங்களுக்கு காண்பித்து, என்னால் உங்களை வியப்பில் ஆழ்த்த முடியும். ஆனால், பணத்தை கையாளுதலில் அடித்தளமான காரியங்களையே உங்களுக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் எடுத்து வைக்கும் முதல் படி சரியாக இருக்கும்போது, அடுத்தடுத்த படிகளை கண்டுகொள்வது உங்களுக்கு எளிமையாக இருக்கும். உங்கள் ஆரோக்கியமான பொருளாதார வாழ்க்கைக்கு நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டிய "தூண்" போன்ற ஒரு காரியத்தை தான் உங்களுக்கு காண்பிக்க இருக்கிறேன்.

அந்த முக்கியமான முதல் படி என்னவென்றால், திட்டமிடல். உங்களுடைய திட்டமிடலில், எப்பொழுதும் கர்த்தரை கனப்படுத்துவதை முதன்மைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும், உங்களை வழிநடத்தும் ஆவியானவருடைய மெல்லிய சத்தத்திற்கு செவிகொடுங்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள், சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமானால், அதற்கு இதுவே அடித்தளம் என்று நம்புகிறேன். கர்த்தர் நம்முடைய நெருக்கமான உறவை விரும்புகிறார். எனவே தான், நம்மை அவரோடுக் கூட ஒப்புரவாக்கும்படி அவருடைய ஒரேபேறான குமாரனையே இந்த பூமிக்கு அனுப்பினார்.

இப்போது உங்களுக்கு ஒருவேளை, "இதற்கும் பணத்தை கையாளுவதற்கும் சம்மந்தம் என்ன? இதற்கும் உக்கிராணத்துவத்திற்கும் சம்மந்தம் என்ன? இதற்கும் ஆரோக்கியமான பொருளாதார வாழ்வுக்கும் சம்மந்தம் என்ன?" என்பது போன்ற கேள்விகள் வரலாம்.

சம்மந்தம் உண்டு. 

உக்கிராணத்துவம் என்ற வார்த்தை நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் அதிகம் உலா வருகிற வார்த்தையாக இருந்தாலும், அதைக் குறித்த தெளிவான புரிதல் இன்றைக்கு அநேகருக்கு இல்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் ஒருவேளை, கர்த்தர் உங்களுக்கு தரும் பணத்தில் பெரும்பகுதியை காணிக்கையாக கொடுப்பது தான் உக்கிராணத்துவம் என்று நினைத்துக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் பெரிய தொகை காணிக்கைகளில் கர்த்தர் ஈர்க்கப்படுகிறவர் அல்ல. எனவே தான், திரளாய் காணிக்கை கொடுத்த ஐசுவரியவான்களை காட்டிலும், ஏழை விதவை கொடுத்த இரண்டு காசு காணிக்கையையே இயேசு மெச்சி பேசுகிறார். இதன் மூலம், தேவன் விரும்புகிற உக்கிராணத்துவம் என்பது காணிக்கைகளை அள்ளிக் கொடுப்பது அல்ல என்று நமக்கு புரிகிறது அல்லவா? அப்படியென்றால், தேவன் விரும்புகிறது என்ன என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால், நான் முன்னமே சொன்னதை மறுபடியும் நினைவுப்படுத்துகிறேன். நீங்கள் அவரோடு கூட நெருக்கமாக உறவு கொள்வதையே அவர் விரும்புகிறார். மாத்திரமல்ல, உங்கள் கரங்களில் கர்த்தர் கொடுக்கிற பணங்களுக்கு நீங்கள் முதலாளிகள் அல்ல என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உங்களிடத்தில் கொடுக்கப்பட்டவைகளுக்கு நீங்கள் கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்து போகக்கூடாது.

இதனால் தான், என்னுடைய செலவுகளையும், பண முதலீடுகளையும் நான் தீர்மானிப்பதற்கு முன்பாக, கர்த்தருடைய ஞானத்திற்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் ஜெபிப்பதை என்னுடைய வழக்கமாக கொண்டுள்ளேன். எந்த ஒரு உறவையும் போல, பரிசுத்த ஆவியானவருடைய உறவிலும் கூட, நாம் நம்பிக்கையிலும், புரிதலிலும் வளர்வதற்கு சில காலம் எடுக்கும். அவரோடு கூட நாம் நெருங்கும்போது, சில நேரங்களில் கர்த்தர் "சரி" என்றும், சில நேரங்களில் "வேண்டாம்" என்றும், சில நேரங்களில் "இப்போது வேண்டாம்" என்றும் சில நேரங்களில் "சந்தோஷமாக அனுபவி!" என்றும் கர்த்தர் சொல்லும் சத்தத்தை நம்மால் உணர முடியும்.

வரவு செலவு பட்டியலை தீர்மானிப்பதற்கும், அந்த தீர்மானத்தில் உறுதியாக நிற்பதற்கும் நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் சார்ந்த அடிப்படை காரியங்களை கற்றுக்கொள்வதையும், வரவை காட்டிலும் செலவுகளை குறைவாக திட்டமிடுதலையும் நீங்கள் கற்றுக்கொள்வதை அறிவுறுத்துகிறேன். கர்த்தர் உங்களுக்கு தரும் வருமானத்தில் நீங்கள் கர்த்தருக்கு செலுத்தவேண்டிய தசமபாக பங்கை செலுத்துவதும் மிகவும் அவசியம். இதனால், உங்கள் பொருளாதாரத்தின் மேல் கர்த்தரே ஆளுநராக இருக்கிறார் என்பதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள்.

இவைகளை பின்பற்றுகிற அதே நேரத்தில், நம்முடைய செயல்களையும், தீர்மானங்களையும் உந்துகிற அடித்தளத்தை நாம் புறக்கணித்துவிடக் கூடாது. ஆம், கிறிஸ்துவோடு கூட நம்முடைய நெருக்கமான உறவில் வளர்வதை குறித்தே பேசுகிறேன். அவரோடுக் கூட நாம் நெருங்க நெருங்க, பணத்தை கையாளுகிற திறனையும் ஞானத்தையும் கர்த்தர் நமக்கு தருவார்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Money and Investing with the Kwak Brothers

உங்களுக்குத் தெரியுமா? புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லிய நாற்பது உவமைகளில், பதினோரு உவமைகளில் இயேசு பணத்தைக் குறித்து பேசியிருக்கிறார். அதாவது, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் போதனைகளில் இது 27.5 சதவீதம். பணத்தைக் குறித்த நம்முடைய மனநிலை எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். பணத்தைக் குறித்த நம்முடைய எண்ணங்களும் மனநிலையும் எப்படி உருவாகிறது என்பதை நாம் அறிந்துகொண்டால் தான், கிறிஸ்துவை மையப்படுத்தின ஒரு புரிதலுக்கு நாம் வர முடியும்.

More

இந்த திட்டத்தை எங்களுக்கு வழங்கிய க்வாக் (Kwak) சகோதரர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய https://thekwakbrothers.com என்ற இணைய பக்கத்திற்குச் செல்லவும்