பணமும் முதலீடும் - க்வாக் சகோதர்களுடன்மாதிரி
கடனை கையாளுதல்
பொதுவாக அநேகர், நீதிமொழிகள் 22:7 வசனத்தை கடன் வாங்குவதற்கு எதிராக பயன்படுத்துவார்கள். அந்த வசனம் என்னவென்றால், "ஐசுவரியவன் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை". பொதுவாக பார்த்தால், கடன் வாங்குவதை பரிசுத்த வேதாகமம் அனுமதிக்கவில்லை. ஆனால், நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கடனில் இருப்பது பாவமல்ல. "உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல, உன் சகோதரனிடத்திலும் அன்பு கூறுவாயாக" என்ற வேத கட்டளைக்கு கீழ்ப்படிந்து, வாங்கிய கடனை உண்மை மனதுடனும், பொறுப்புடனும் திருப்பி செலுத்துவோம் என்றால், கடன் வாங்குவதை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரியமாகவே பார்க்கிறேன்.
கடன் வாங்குவதை எதிர்க்கக்கூடிய பல வியாக்கியானங்கள் நீதிமொழிகள் 22:7 வசனத்திற்கு உண்டு. ஆனால், கடன் வாங்குகிறோமா இல்லையா என்பதை விட, கடன் என்ற காரியத்தை ஞானத்தோடும், புரிதலோடும் நாம் கையாளுகிறோமோ என்பதே முதலிடத்தில் முக்கியம் என்று நான் எண்ணுகிறேன்.
கடனைக் குறித்த என்னுடைய புரிதலை விளக்க எனக்கு அனுமதி கொடுங்கள். வேதாகம பின்னணியில், 'அடிமை' என்னும் வார்த்தை, நம்முடைய நவீன கால புரிதலைக் காட்டிலும் சற்று வித்தியாசமானது. நான் ஒரு வேதாகம பண்டிதர் இல்லை. என்றாலும், பழைய ஏற்பாட்டு நாட்களில், ஒருவருக்கொருவர் கடன் கொடுத்து வாங்குவது சகஜமான ஒன்றாக இருந்தது. வாங்கிய கடனை திருப்பி தர முடியாத பட்சத்தில், கடன் வாங்கியவர், கடன் கொடுத்தவரிடம் அடிமையாக வேலை செய்து, வாங்கிய கடனை கழிக்கும் நடைமுறையும் அக்காலத்தில் இருந்து வந்தது. கடன் கழிந்தபின், அடிமைத்தனமும் முடிந்து போகும். இது மாத்திரமல்லாது, வேறு விதமான அடிமைத்தனங்களும் அந்த நாட்களில் இருந்து வந்தது என்பதை சந்தேகமில்லாமல் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பிரசங்கியார்கள் இந்த வசனத்தை விளக்கும்போது, எந்த விதமான அடிமைத்தனத்தைக் குறிப்பிடுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
ஞானத்தோடும், சரியான புரிதலோடும், திரும்ப கொடுக்கும் எண்ணத்துடனும் கையாளப்படும் என்றால், 'கடன்' வாங்குவதில் எந்த தவறும் இல்லை என்பதாகவே பார்க்கிறேன். உதாரணமாக, நல்ல லாபத்தை கொடுக்கும் உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக நீங்கள் ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாயை கடன் வாங்குவீர்கள் என்றால், அந்த கடன் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், ஒரு லட்சம் ரூபாயை கடனாக வாங்கி, நமக்கு எந்த பொருளாதார லாபத்தையும் தராத பொருளிலோ, வாகனத்திலோ நாம் முதலீடு செய்வோமென்றால், அது முட்டாள்தனம். உங்களுக்கு வருமானத்தை கொடுக்காத ஒன்றிற்காக நீங்கள் கடன் பெறுவீர்கள் என்றால், அந்த பணம் உங்களுக்கு பிரயோஜனமற்றதாக இருக்கும்.
ஆனாலும், பரிசுத்த வேதாகமம் கடனை குறித்த பொதுவான எச்சரிப்பை கொடுப்பதன் காரணம் என்னவென்றால், அநேகர் பொருளாசையினாலும், பேராசையினாலும், கடன் சுமைக்கு ஆளாகிவிடுகிறார்கள் என்பதால். சரியான திட்டமிடலுடனும், ஞானவான்களின் ஆலோசனைகளோடும், தெளிவான சிந்தனையோடும், ஜெபத்தோடும் நீங்கள் செயல்படுவீர்கள் என்றால், கடன் உங்கள் வருமானத்தையும், சொத்தையும் அதிகரிப்பதில் உங்களுக்கு மிகவும் பிரயோஜனமான கருவியாகவும் இருக்கக்கூடும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்களுக்குத் தெரியுமா? புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லிய நாற்பது உவமைகளில், பதினோரு உவமைகளில் இயேசு பணத்தைக் குறித்து பேசியிருக்கிறார். அதாவது, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் போதனைகளில் இது 27.5 சதவீதம். பணத்தைக் குறித்த நம்முடைய மனநிலை எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். பணத்தைக் குறித்த நம்முடைய எண்ணங்களும் மனநிலையும் எப்படி உருவாகிறது என்பதை நாம் அறிந்துகொண்டால் தான், கிறிஸ்துவை மையப்படுத்தின ஒரு புரிதலுக்கு நாம் வர முடியும்.
More