பணமும் முதலீடும் - க்வாக் சகோதர்களுடன்மாதிரி
பணமும் இராஜ்ஜியத்தின் மனநிலையும்
ஏதோ சில காரணங்களுக்காக குடும்பத்தை விட்டுச் செல்ல முடிவெடுத்து, தன்னுடைய தகப்பனுடைய ஆஸ்திகளில் தன் பங்கை எடுத்துக் கொண்டு, தன் வீட்டை விட்டு தூர தேசத்திற்கு ஓடிப்போன ஒரு மகனுடைய கதையை என்றோ ஒரு நாள் நான் வாசித்த ஞாபகம் வருகிறது.
எனக்கும் ஒரு சகோதரன் உண்டென்பதால், இந்த கதை என் கவனத்தை ஈர்த்தது. இது என்னவாக முடியும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. அந்த பணத்தை அவன் மிகவும் ஊதாரித்தனமாக செலவழித்துப் போட்டதை அறிந்தபோது, ஏமாற்றமடைந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவன் அத்தனை பணத்தையும் இழந்து போனான்.
தன் வாழ்க்கையே இருண்டு போன சூழ்நிலையில், மறுபடியும் தன் தகப்பன் வீட்டிற்கே திரும்பும்படி முடிவெடுக்கிறான் - மகனாக அல்ல, தன் தகப்பனுடைய வேலைக்காரர்களில் ஒருவராக சேர்ந்து கொண்டு, மூன்று வேளையும் பசியாற ஆசைப்பட்டான்.
இந்த கதையின் முடிவு நாம் அனைவரும் அறிந்ததே. அந்த தகப்பன் அவனை கட்டித் தழுவி அவனை வீட்டிற்குள் வரவேற்கிறார். அவன் திரும்பி வந்தபடியால், தன் வீட்டில் ஒரு பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணுகிறார். வயலில் தான் வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்த அவனுடைய மூத்த சகோதரனோ, இந்த விருந்து ஆயத்தங்களை கண்டு எரிச்சலடைகிறான்.
எனது வாழ்நாளில், இந்த வேதப்பகுதியிலிருந்து நான் பிரசங்கம் பண்ணி கேட்ட அத்தனை பிரசங்கியார்களும், திரும்ப வந்த இளைய குமாரன் மீது தகப்பன் காண்பித்த அன்பையும், மன்னிப்பையும் குறித்தே பிரசங்கித்தார்கள். பாவங்களை விட்டு மனம்திரும்பி தேவனிடம் வருவதின் மேன்மையை பிரசங்கித்தார்கள். இந்த இரண்டு வகையான தியானங்களுமே மிகவும் சத்தியமானவை, அழகானவை. உண்மையை சொல்லவேண்டுமானால், நான் இந்த வேதப்பகுதியை வாசித்தபோது, வேறொரு கோணத்தில் தான் பார்த்தேன்.
அந்த இரண்டு குமாரர்களுமே, தங்கள் தகப்பனுடைய உறவை முக்கியப்படுத்தவில்லை என்பதை கவனித்தேன். இருவருடைய செயல்களை மாத்திரம் பார்க்காமல், அவர்களது செயல்களுக்கு பின்னால் இருக்கும் உந்து சக்தி எதுவென்று கவனித்துப் பாருங்கள். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால், அவர்கள் இருவருக்கும், தங்கள் தகப்பனின் உறவின் மீது அல்ல, அவர் வைத்திருந்த ஆஸ்திகளின் மீதே அவர்களுடைய முழு கவனமும் இருந்தது.
உண்மையில் நாம் பணத்தை இராஜ்ஜியத்தின் சிந்தையோடு அணுகவேண்டும் என்றால், பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் நித்தியமானவை அல்ல என்றும், நித்தியமான ஆசீர்வாதங்கள் பூமிக்குரியவைகள் அல்ல என்றும் நாம் புரிந்திருக்க வேண்டும். ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், நாம் இந்த பூமிக்கு அந்நியராய் வெளிநாட்டவராய் இருக்கிறோம். பண விவகாரங்களில், நாம் இந்த சிந்தையோடு அணுகவேண்டும்.
நில விற்பனை தொழில் ஆலோசகராக, நான் எப்போதும் எல்லாருக்கும் கொடுக்கும் ஒரு ஆலோசனை, இன்றைக்கென்று யோசிக்காமல், இன்றிலிருந்து 10, 20, அல்லது 30 வருடங்களுக்கு அப்பால் யோசித்து முடிவெடுக்க வேண்டும். இந்த தியானத்தின் முதல் நாளில் என்னோடு இணைந்திருக்கிற உங்களுக்கு முன்பாகவும் நான் வைக்கும் ஆலோசனை இதுவே. நித்திய ஜீவ வாழ்வை மையப்படுத்தும் சிந்தையுடன், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலோடு, பண விவகாரங்களில் முடிவுகளை எடுக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்களுக்குத் தெரியுமா? புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லிய நாற்பது உவமைகளில், பதினோரு உவமைகளில் இயேசு பணத்தைக் குறித்து பேசியிருக்கிறார். அதாவது, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் போதனைகளில் இது 27.5 சதவீதம். பணத்தைக் குறித்த நம்முடைய மனநிலை எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். பணத்தைக் குறித்த நம்முடைய எண்ணங்களும் மனநிலையும் எப்படி உருவாகிறது என்பதை நாம் அறிந்துகொண்டால் தான், கிறிஸ்துவை மையப்படுத்தின ஒரு புரிதலுக்கு நாம் வர முடியும்.
More