இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி

The Final Lessons: A Holy Week Plan

10 ல் 9 நாள்

உயிர்த்தெழுதல்

இன்று நாம் இயேசு சிலுவையில் மரித்ததை மட்டுமல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததையும் கொண்டாடுகிறோம்! தண்டிக்கும்படியாகவும், மௌனமாக்கும்படியாகவும் செய்யப்பட்ட காரியம் (சிலுவையின் மீதான இயேசுவின் மரணம்) நமது விடுதலையானது, ஏனெனில் பாதாளத்தால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

யோவான் 20:1-29 வசனங்களை வாசியுங்கள்.

அவர் உயிரோடிருக்கிறார். அவர் மரிக்கவில்லை. இது பயித்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறதா? ஒரு நாளுக்கு முன்புதான் அவர் மரித்து, துணிகளால் சுற்றப்பட்டு, கல்லறைக்குள்ளே வைக்கப்பட்டார்.

இங்குதான் கிறிஸ்தவம் ஒரு நல்ல போதகரின் நல்ல கருத்துகள் என்பதிலிருந்து வாழ்வை மாற்றும் விசுவாசம் என்ற நிலைக்குச் செல்கிறது. இயேசுவின் வாழ்க்கையானது அவருடைய போதகம், மற்றவர்களில் அன்புகூறுதல், வியாதியஸ்தர்களை குணமாக்குதல் இவைகளைப் பற்றி மட்டுமே இருக்குமானால், அந்தக்காரியங்களுக்காக மட்டுமே அவர் நினைவுகூறப்பட்டிருப்பார். அப்படி நடக்கவில்லை. முழு உலகமும் மாறியது, ஏனெனில் அவர் மரித்துப்போகவில்லை. அவர் சொன்னது, மற்றும் அவரைக்குறித்து தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகள் எல்லாம் உண்மையாயின, உண்மையாகின்றன! இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தது நம்முடைய பாவத்தின் சாபத்தை முற்றிலுமாக முறியடிக்கிறது!

இது முட்டாள்தனமாகத் தோன்றுகிறது, இல்லையா? நாம் நம்முடைய சொந்தபலத்தில் நிற்போமானால், அநேகமாக இதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பவுல் அப்போஸ்தலன் 1 கொரி 2:4 இல், “உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்தினாலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,” என்று நமக்குப் புத்திசொல்கிறான்.

மனிதனின் பார்வையில், இயேசு சிலுவையில் மரித்தார், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், மனுக்குலமனைத்தும் பாவ பாரத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது என்பன போன்றக் காரியங்கள் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். ஆனால் தேவன்(நான் இந்த இரண்டு வார்த்தைகளை விரும்புகிறேன்), நம்முடைய தேவன் சிலுவையில் மரித்த வெறும் மனிதனல்ல, அவர் இயேசுவானவர். முழுமையான தேவன், மற்றும் முழுமையான மனிதன். அவர் வெறும் மனிதனாக இருந்தால், அவருடைய சிலுவை மரணம், வல்லமைவாய்ந்த ஒரு போதகரின் இழப்பு, மற்றும் ஏழைகள், வியாதியஸ்தர்களை ஆதரிக்கும் ஒரு பிரதிநிதியின் இழப்பாக மட்டுமே இருந்திருக்கும்.

அவர் முழுமையான மனிதன் மட்டுமல்ல; முழுமையான கடவுளுமாவார், அவர் தேவனுடைய சொந்தக் குமாரன்!

கலாச்சார முறையில் நாம் உருவாக்கி வைத்திருப்பதைக் காட்டிலும் இதுவே ஈஸ்டர் பண்டிகையை அதிக அர்த்தமுள்ளதாக்குகிறது. இயேசு உங்களுக்காக மரித்தார், அவர் உங்களுக்காக உயிரோடும் எழுந்தார். அவர் நம்முடைய பாவங்களுக்காக மட்டும் விலைக்கிரயம் செலுத்தவில்லை; அவர் நமக்குப் புதுவாழ்வையும் கொண்டு வந்தார்!

சிலுவை, மற்றும் அந்தக் காலியான கல்லறையை நாம் விசுவாசிப்போமானால், கிறிஸ்து நமக்காக செய்திருக்கும் காரியம் இதுவே: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” (2 கொரி 5:17)

இயேசு உங்களுக்காக செய்தவைகளை, உங்கள் வழியில் கொண்டாட, இன்று சற்று நேரத்தைச் செலவிடுங்கள்!
நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

The Final Lessons: A Holy Week Plan

இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக சேக்ரெட் ஹாலிடேஸ்-உடன் பெக்கி கைசர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.sacredholidays.com ஐ பார்க்கவும்.