புனித வாரம்மாதிரி
ஒருவரையொருவர் நேசியுங்கள்!
வியாழக்கிழமையாகிய இன்றைய தியானத்திற்கு உன்னை வரவேற்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து ஜெபிப்போம்.
“இயேசுவே, இன்று உமது ஊழியக்காரராகிய இயேசுவினுடைய விசுவாசத்தின் முன்மாதிரியையும் உமது இருதயத்தின் திட்டத்தையும் கொண்டாடுகிறோம். இன்று நீர் என் நண்பர்களுக்காக வைத்திருக்கும் ஒவ்வொரு அற்புதத்தையும் அவர்கள் முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது ஜெபமாகும். இயேசுவே, உம்மைப்போல அன்பு செய்வது எப்படி என்பதை எங்களுக்குக் கற்றுக் கொடுப்பீராக! ஆமென்.”
அன்று இரவு ஓய்வெடுத்த பிறகு, இயேசு பேதுருவையும் யோவானையும் பஸ்கா விருந்துக்கு ஆயத்தம் செய்யும்படி முன்னதாக அனுப்பிவைத்தார். அன்று மாலை, இயேசு தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு அதிசயமான ஊழியத்தைச் செய்தார். இந்த மனத்தாழ்மையான ஊழியத்தைச் செய்து அவர் எதைக் காட்டினார்? விசுவாசிகள் ஒருவரையொருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை இயேசு மாதிரியாக செய்து காட்டினார்.
நண்பனே/தோழியே, இப்போது நீ யாருடைய கால்களைக் கழுவ வேண்டியுள்ளது? இன்று ஒருவரின் கால்களைக் கழுவுவது என்பது அவர்களுக்கு உணவைக் கொண்டு செல்லுதல், ஊக்கமளிக்கும் ஒரு வார்த்தையை எழுதுதல் அல்லது அவர்களது அன்றைய நாளையோ அல்லது உன்னுடைய அன்றைய நாளையோ மாற்றும் ஒரு இரக்கம் காட்டும் செயலைச் செய்தல் போன்றவையாக இருக்கலாம்! தேவன் யாரை உனக்கு நினைவுபடுத்துகிறாரோ, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி இன்று அவர்களுக்கு ஊழியம் செய்!
"அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொல்லி, இயேசு தம்முடைய சீஷர்களுடன் பஸ்கா உணவைப் பகிர்ந்துகொண்டார். (லூக்கா 22:15-16)
இந்த பஸ்கா நாட்களில், களங்கமற்ற தேவனுடைய ஆட்டுக்குட்டியாக, இயேசு தமது சரீரத்தை நொறுக்கப்படுதலுக்கு அர்ப்பணித்து, தமது இரத்தத்தை சிந்தி தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் உன்னை விடுவித்து பஸ்காவின் அர்த்தத்தை நிறைவேற்ற அவர் ஆயத்தமாய் இருந்தார். இந்த போஜனத்திற்குப் பிறகு, இயேசு தமது நெருங்கிய தோழர்களுடன் திருவிருந்து ஐக்கியத்தைப் பகிர்ந்துகொண்டு, "என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நண்பனே/தோழியே, இயேசுவின் வேதனைகளை நினைவுகூரும்படி இந்தத் தருணத்தை நீ பயன்படுத்துவாயாக. அவருடைய அன்பையும் அவருடைய வாழ்க்கையையும் நினைவுகூரு. அவரது பாடு மரணத்தையும் ஜெபத்தையும் நினைவுகூரு. அவருடைய இரட்சிப்பையும் அவரது ஆதரவையும் நினைவில் வைத்துக்கொள். உன் வாழ்க்கையில் தேவன் உனக்காகச் செய்த அனைத்தையும் நினைவுகூர்ந்து நன்றி சொல்ல இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள். இயேசு செய்ததையும் அவர் யார் என்பதையும் நினைவுகூரும்போது நமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டாகிறது!
அன்று இரவே, இயேசுவும் அவரது சீஷர்களும் புறப்பட்டு கெத்சமனே தோட்டத்திற்குச் சென்றனர், அங்கு இயேசு தம்முடைய பிதாவை நோக்கி மிகுந்த வேதனையுடன் ஜெபம் செய்தார். யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுத்த துரோகத்தையும், பேதுரு தன்னை மறுதலித்ததையும், சகல ஜனங்களுக்காகவும் அவர் மரிக்கப்போகிறதையும் நினைத்து இயேசு வேதனைப்பட்டார். லூக்கா எழுதின சுவிசேஷம் கூறுகிறது: "அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது." (லூக்கா 22:44)
இது மிகவும் கடினமான சூழ்நிலை என்பது எனக்குத் தெரியும், இருப்பினும், அவர் அடைந்த வேதனையினால் நாம் அனைவரும் ஒரு எதிர்கால குறிக்கோளையும் நம்பிக்கையையும் பெற முடியும். "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" என்பதை நாம் உண்மையாக அறிந்துகொண்டால், ஒரு அதிசயத்திற்கான முதல் தேவையே சாத்தியமற்ற ஒரு சூழ்நிலைதான் என்பதை அறிந்து, நம்பிக்கையுடன் வலியைத் தாங்கிக்கொள்ளவோம்.
நீயும் நானும் இரட்சிப்பு என்னும் அற்புதத்தையும் நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தையும் அனுபவிப்பதற்காக இயேசு சிலுவையில் மிகுந்த வேதனையை ஏற்றுக்கொண்டார்!
இந்த சம்பவம் தியானிப்பதற்குக் கடினமான ஒன்றாக இருக்கலாம், ஆனால் நம்பிக்கையையும் இயேசு அளித்திருக்கும் வாக்குத்தத்தத்தையும் பற்றிக்கொள். நாம் கிட்டத்தட்ட உயிர்த்தெழுதல் நாளுக்கு மிக அருகில் வந்துவிட்டோம்!
நீ ஒரு அதிசயம்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜீவனுள்ள தேவன், தம்மோடு உறவை வைத்துக்கொள்ளும்படியான ஒரு சந்தர்ப்பத்தை மனுக்குலத்துக்கு வழங்கியபோது நடந்த நிகழ்வுகளைத் தெரிவிக்கும் சம்பவங்களை இந்நாட்களில் நினைவுகூர்ந்து, ஜெபத்தோடு சிந்தனை செய்து இப்புனித வாரத்தை செலவிடும்படி உனக்கு அறைகூவல் விடுக்கிறேன். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நாம் அவரிடமிருந்து புதிய ஜீவனைப் பெறுகிறோம்! ஆம், அவர் உயிர்த்தெழுந்தார்!
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=holyweek