புனித வாரம்மாதிரி
இரட்சிப்பிற்கான சாத்தியம்!
உண்மையிலேயே, மரித்தவர் மீண்டும் ஜீவனைப் பெறுவார் என்ற ஒரு வாக்குறுதியை, மரித்தவருக்காக அழுது புலம்புபவர்கள் பெற்றுக்கொள்ளாத வரைக்கும்... ஒரு இறுதிச் சடங்கு நடைபெறும் நேரத்தில் நம்பிக்கை என்ற ஒன்றைக் கொண்டிருப்பது என்பது மிகக் கடினமானதுதான்! அந்த நம்பிக்கைதான் இந்த வாரம் நமக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது. இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டபோதும், இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மற்றும் அவரது மரணத்திலும் கூட நன்மை இருப்பதாக நமக்கு நம்பிக்கை உண்டு, ஏனென்றால் அதற்குப் பின்பு நடந்த அற்புதங்கள் இந்த நம்பிக்கையை நமக்கு உருவாக்குகின்றன.
திங்களன்று கிடைத்த நம்பிக்கையினால் உன்னை ஊக்குவிக்கும் முன், 24 மணிநேரம் பின்னோக்கிச் செல்வோம்.
தம்முடைய மரணத்துக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையன்று, நம்முடைய பாவங்களுக்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தவராகிய இயேசு எருசலேம் நகரத்தை நோக்கித் தமது பயணத்தைத் தொடங்கினார். இயேசு கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து, மெதுவாகவும் பணிவுடனும் எருசலேமுக்குள் பிரவேசிக்கும் தமது வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு, அதை நிறைவேற்றினார்.
"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்." (சகரியா 9:9)
திரளான மக்கள் பனைமரக் கிளைகளைத் தங்கள் கைகளில் ஏந்தி அவற்றை அசைத்து, "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர், உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்து இயேசுவை வரவேற்றனர். எத்தனை மகிழ்ச்சி! ராஜா வந்துவிட்டார், அவர் இன்றும் ஆட்சி செய்து, நம்மை ஆளுகை செய்துகொண்டிருக்கிறார்! நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது! "ஓசன்னா" என்றால் "தேவன் இரட்சிப்பவர்" என்று அர்த்தம், அவர் நம் இரட்சிப்புக்கு ஒரு வழியை உருவாக்கிவிட்டார் என்பதை இப்போது நாம் அறிந்திருக்கிறோம்!
மறுநாள் காலை, இயேசு தம் சீஷர்களுடன் எருசலேமுக்குத் திரும்பினார். அவர் திரும்பிச் செல்லும் வழியில், கனி தராமல் இருந்த ஒரு அத்தி மரத்தைக் கண்டு, அதைச் சபித்தார். இங்கே இயேசு நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறார் : ஒரு நபர் கொண்டிருக்கும் உண்மையானதும் ஜீவனுள்ளதுமான விசுவாசமானது அவரது வாழ்வில் ஆவிக்குரிய கனிகளைத் தர வேண்டும் என்பதே அந்தப் பாடமாகும். இன்று, நீ இயேசுவை உண்மையாகப் பின்பற்றும்போது, உன் அத்தி மரத்தின் கனி ஆரோக்கியமாகவும், இயேசு உன்னை மாற்றவும் நிலைநிறுத்தவும் வல்ல இரட்சகராகவும் இருப்பார் என்ற நம்பிக்கை உனக்கு உண்டாயிருப்பதை நீ காணலாம்!
சகோதரனே/சகோதரியே, சிறிது நேரம் ஒதுக்கி, உன் வாழ்க்கையில் நீ பெற்றிருக்கிற ஆவியின் கனிகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்து! அவர் உன்னில் கிரியை செய்யும் விதத்தை எண்ணி தேவனுக்கு நன்றி சொல்வாயாக. இன்று அவர் உனக்குக் கொடுத்திருக்கும் வல்லமை மற்றும் குறிக்கோள் மூலம் உன் வாழ்வில் நல்ல கனிகளைக் கொடுப்பாயாக.
இயேசு தேவாலயத்திற்கு வந்தபோது, தேவாலய முற்றமானது கள்ள பணத்தை மாற்றும் காசுக்காரர்களால் நிறைந்திருந்ததைக் கண்டார். அவர் அவர்களின் மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு, "என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள்" என்று சொல்லி தேவாலயத்தை சுத்திகரிக்கத் தொடங்கினார். (லூக்கா 19:46)
தேவாலயத்தின் நிலை மனதை உடைக்கிறது என்றாலும், ஜெபம் என்னும் வீட்டின் கதவுகள் இன்றும் நமக்குத் திறந்தே இருக்கின்றன என்ற உண்மை எனக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தப் புனித திங்கட்கிழமை அன்று நாம் சிறிது நேரம் ஒதுக்கி, இந்த ஜெப வீட்டிற்குள் நுழைவோம்:
“இயேசுவே, நான் உம்மை என் ராஜாவாக கனம்பண்ணுகிறேன். நீர் மனத்தாழ்மையும் வல்லமையும் உள்ளவர்; இன்றும் நீர் என்னை ஆளுகை செய்து வருகிறீர் என்பதை எண்ணி உம்மைப் போற்றுகிறேன். நல்ல கனிகளைத் தர எனக்கு உதவுமாறு மன்றாடுகிறேன்! என் வாழ்வில் நான் கொடுக்கிற கனியானது மற்றவர்களை இயேசுவை அறியும் அறிவிற்கு நேராகக் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசுவே, இப்போதும் நான் ஜெப வீட்டிற்குள் வர வாய்ப்பளித்ததற்கு உமக்கு நன்றி. நான் ஜெப வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது, என் இருதயம் நன்றியுடனும் நம்பிக்கையுடனும் நிறைந்திருக்கட்டும்! இந்தப் புனித திங்கட்கிழமை தினம் அன்று நான் உம்மைப் போற்றித் துதிக்கிறேன். ஆமென்.”
நீ ஒரு அதிசயம்!
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜீவனுள்ள தேவன், தம்மோடு உறவை வைத்துக்கொள்ளும்படியான ஒரு சந்தர்ப்பத்தை மனுக்குலத்துக்கு வழங்கியபோது நடந்த நிகழ்வுகளைத் தெரிவிக்கும் சம்பவங்களை இந்நாட்களில் நினைவுகூர்ந்து, ஜெபத்தோடு சிந்தனை செய்து இப்புனித வாரத்தை செலவிடும்படி உனக்கு அறைகூவல் விடுக்கிறேன். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நாம் அவரிடமிருந்து புதிய ஜீவனைப் பெறுகிறோம்! ஆம், அவர் உயிர்த்தெழுந்தார்!
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=holyweek