புனித வாரம்மாதிரி
விசுவாசத்தின் முக்கியத்துவம்
செவ்வாய் கிழமை காலை, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்குத் திரும்பினர். அவர்கள் கடந்து சென்ற பாதையில், காய்ந்து பட்டுப்போயிருந்த ஒரு அத்தி மரத்தைக் கண்டனர், இயேசு தம்முடைய சீஷர்களிடம் விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் ஒருமுறை பேசினார்.
இன்று உனக்கு எவ்வளவு விசுவாசம் இருக்கிறது? சிறிது நேரம் ஒதுக்கி, இந்தக் கேள்வியை சற்று ஆழமாக சிந்தித்துப் பார், இன்னும் அதிக விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், நீ தேவனிடத்தில் கேட்கும்படி ஜெப நேரத்திற்குள் பிரவேசி!
தேவாலயத்தில், தம்மை ஒரு ஆவிக்குரிய அதிகாரம் கொண்ட நபராகக் காட்டிக்கொண்டதற்காக யூத மதத் தலைவர்கள் இயேசுவின் மீது எரிச்சலுற்றனர். அவரை கைது செய்யும் நோக்கத்துடன் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த அவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் இயேசு அவர்களின் சர்ப்பிணைகளுக்கு நீங்கலாகி, கடுமையான நியாயத்தீர்ப்பை அவர்கள் மீது விதித்தார். கீழ்க்கண்ட வாக்கியத்தில் அவற்றைக் காணலாம்:
"குருடரான வழிகாட்டிகளே! ... உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். ... சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?" (மத்தேயு 23:24-33)
சகோதரனே/சகோதரியே, சற்று நேரம் ஒதுக்கி, உன் வாழ்வில் ஆண்டவருக்கு உண்மையில்லாமல் இருக்கும் எந்த ஒரு காரியத்தையும் அறிக்கையிடுமாறு உன்னை அழைக்கிறேன். உன் இருதயத்தை மரணத்துக்கு ஏதுவான இடமாக அல்லாமல், ஜீவனுக்கு ஏதுவான இடமாக மாற்றும்படி இயேசுவிடம் மன்றாடு.
நாம் தொடர்ந்து தியானிப்போம். அன்றைய தினம் பிற்பகலில், இயேசு நகரத்தை விட்டு வெளியேறி, எருசலேமுக்கு எதிரான ஒலிவ மலைக்குத் தமது சீஷர்களுடன் சென்றார். அங்கே, இயேசு காலத்தின் முடிவைப் பற்றிய செய்தியைக் கூறினார். அவர் வழக்கம்போல், தமது இரண்டாம் வருகை மற்றும் இறுதி நியாயத்தீர்ப்பு உட்பட கடைசி கால நிகழ்வுகளைப் பற்றி உவமைகள் மூலம் பேசினார்.
அந்த நேரத்தில் இயேசு சொன்னவற்றிலிருந்து நீ என்ன அறிந்துகொள்கிறாய்? இந்த உண்மையின் மூலமும் வாக்குத்தத்தத்தின் மூலமும் இயேசு திரும்பி வருவார் என்பதை நீ அறிந்துகொள்ளலாம். அவர் வருவார் என்கிற இந்த ஆனந்தபாக்கியத்தை நீ இன்று பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே எனது ஜெபமாகும்!
இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி அன்றைய மதத் தலைவர்களுடன் யூதாஸ் காரியோத்து பேச்சுவார்த்தை நடத்திய நாள்தான் இந்த செவ்வாய் கிழமை தினம் என்று வேதாகமம் போதிக்கிறது. (மத்தேயு 26:14-16)
இன்று, யூதாஸ் காரியோத்து செய்த தவறை அப்படியே செய்வதாகத் தோன்றும் உன் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளுக்குள்ளும் இயேசுவை அழை. காட்டிக்கொடுத்தலை நீ முறியடித்து, இயேசுவின் தூய்மையானதும் அற்புதமானதுமான பாதையைத் தேர்ந்தெடு. இயேசுவின் அன்பிற்கும் தியாகத்திற்கும் எதிராகச் செயல்படும் எந்த ஒரு துரோகச் செயலையும் செய்ய மாட்டேன் என்று உன் இருதயத்தில் நீ தீர்மானிப்பாயானால், என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடு.
“இயேசுவே, ஒலிவ மலையில் அனுபவித்த அமைதியான தருணங்களுக்கான உமது பயணத்திற்கு நன்றி. உமது வெற்றிகரமான வருகையின் ஆனந்தபாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காகவும் நான் உமக்கு நன்றி சொல்கிறேன். இப்போது நான் சங்கீதம் 139ல் கூறப்பட்டுள்ளதை ஜெபமாக ஏறெடுக்கிறேன்:
தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து,
நித்திய வழியிலே என்னை நடத்தும்."
(சங்கீதம் 139:23-24)
நிந்தனை உன்னை மேற்கொள்ள அனுமதிக்காதே! நீ நிந்திக்கப்படுவதை இயேசு அனுமதிப்பதில்லை. மாறாக, கிறிஸ்து இயேசுவில் இருப்பவர்களுக்கு எந்த ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை என்று வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஏற்றுக்கொள்! துரோகம் பண்ணுதலுக்குப் பதிலாக விசுவாசிப்பதைத் தெரிந்துகொள், தொடர்ந்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைப் பற்றிப் பிடித்துக்கொள்வாயாக!
நீ ஒரு அதிசயம்!
இந்த திட்டத்தைப் பற்றி
ஜீவனுள்ள தேவன், தம்மோடு உறவை வைத்துக்கொள்ளும்படியான ஒரு சந்தர்ப்பத்தை மனுக்குலத்துக்கு வழங்கியபோது நடந்த நிகழ்வுகளைத் தெரிவிக்கும் சம்பவங்களை இந்நாட்களில் நினைவுகூர்ந்து, ஜெபத்தோடு சிந்தனை செய்து இப்புனித வாரத்தை செலவிடும்படி உனக்கு அறைகூவல் விடுக்கிறேன். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நாம் அவரிடமிருந்து புதிய ஜீவனைப் பெறுகிறோம்! ஆம், அவர் உயிர்த்தெழுந்தார்!
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=holyweek