இது உங்கள் திருப்புமுனை ஆண்டு: இந்தப் புதிய வருடத்தை உத்வேகத்துடன் துவங்க உதவும் 5 நாட்கள் தியான வாசிப்புத் திட்டம்மாதிரி
நாள் 3 - விடுதலை
கிரேக்கத் தேசத்தில் உள்ள மிகப் பழமையான நகரமான பிலிப்பு நகரத்திற்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இது அப்போஸ்தலனாகிய பவுல், ஐரோப்பாவின் முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை நிறுவிய இடமாகும். ஐரோப்பாவில் கிறிஸ்துவைப் பின்பற்றிய முதல் நபர் இங்குதான் வாழ்ந்தார். அவள் பெயர் லிடியா. அவள் இரட்சிக்கப்பட்டு பின்னர் ஞானஸ்நானம் பெற்றாள். அவள் ஞானஸ்நானம் பெற்ற அந்த மாபெரும் புண்ணிய நதியை என்னால் உண்மையில் பார்க்க முடிந்தது
பவுல் பிலிப்பு நகரத்திற்கு இரண்டு முறை பயணம் செய்தார். ரோமிலிருந்து, அவர் இந்த திருச்சபை மக்களுக்காக பிலிப்பியர் நிருபத்தை எழுதினார். திருமறையின் மிகப் பிரபலமான சில வசனப் பகுதிகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன (1:6, 2:5-11, 3:12-14, 4:13). பிலிப்பு திருச்சபை மக்களைக் குறித்த பவுல் மிக மகிழ்ச்சி அடைந்தார். அது அவரது கடிதத்தில் தெளிவாகத் தெரிகிறது. அந்த நிருபத்தில், அவர்கள் ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழும்படியாக ஊக்குவிக்கிறார்.
பிலிப்பு பட்டணத்தில் தான் பவுலும் சீலாவும் அநேக அடிகள் அடிக்கப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறைச்சாலையையும் நான் பார்த்தேன். ஒரு குறி சொல்லும் பெண்ணிடம் இருந்த அசுத்த ஆவியை பவுல் வெளியேற்றினார். அவளுடைய எஜமானர்கள் இனி அவளை வைத்துப் பணம் சம்பாதிக்க முடியாது என்பதை உணர்ந்தபோது, அவர்கள் பவுலைப் பிடித்து இழுத்துச் சென்று, அதிகாரிகளிடம் ஒப்புவித்து, இந்த நகரத்தில் அவர்கள் கலகம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.
நள்ளிரவில் பவுலும், சீலாவும் ஜெபம் செய்து பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போஸ்தலர் 16:26, “திடீரென்று ஒரு பெரிய நிலநடுக்கம் உண்டானதினால் சிறைச்சாலையின் அஸ்திவாரங்கள் அசைந்தன: உடனே எல்லாக் கதவுகளும் திறக்கப்பட்டன, எல்லாருடைய சங்கிலிகளும் அவிழ்க்கப்பட்டன.” அந்த இடத்தில் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது. கர்த்தரின் வல்லமை அவர்களைச் சிறையிலிருந்து விடுவித்தது!
இது நடந்தபோது, கைதிகள் தப்பித்துச் சென்று விட்டார்கள் என நினைத்து, அந்தச் சிறையின் அதிகாரி தற்கொலை செய்து கொள்ள வாளை உருவினார். ஆனால் பவுல் அவரைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றினார். உடனே அந்தச் சிறைக் காவலர் பவுலிடம், “நான் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு பவுல், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும், உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று பதிலளித்தார்.
இன்றும் அதே கர்த்தரின் வல்லமை, அதை விருப்பத்தோடு தேடுகிற எவருக்கும் கிடைக்கிறது. இன்றும் சிறையில் உள்ளவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். உண்மையில், சிறையில் இருக்கும்போதே ஊழியத்திற்காகப் பயிற்றுவிக்கப்படும் மனிதர்களின் பெரும் இயக்கம் இருக்கிறது.
இப்போதும் கர்த்தர் மக்களை எல்லாவிதமான அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கிறார். இன்று பலர் பலவிதமான போதைகளுக்கு அடிமையாக உள்ளனர். இது மதுபானம் அல்லது போதைப்பொருளாக இருக்கலாம். ஆபாச காட்சிகள் பார்ப்பதாக இருக்கலாம். வீணாகச் செலவு செய்வதாக இருக்கலாம். இவை எல்லாவற்றிலுமிருந்து கர்த்தரால் உங்களை விடுவிக்க முடியும். ஒருவர் இரட்சிக்கப்படும்போது, அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து, கர்த்தர் அவர்களை உடனடியாக விடுவிக்கிறார் என்பது பற்றிய பல உண்மைக் கதைகள் எனக்குத் தெரியும்.
கர்த்தரின் வல்லமை உண்மையானது. மேலும் இது அனைவருக்கும் கிடைக்கும். நீங்கள் பல ஆண்டுகள் அடிமை சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தாலும், கர்த்தரால் உங்களை விடுவிக்க முடியும். பவுலுக்கும் சீலாவுக்கும் செய்ததைத் தேவன் உங்களுக்காகவும் செய்வார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்தப் புதிய வருடம் உங்களுக்கு ஓர் திருப்புமுனைஆண்டாக இருக்கலாம். கடந்த ஆண்டு நீங்கள் எதிர்கொண்ட தடை முடிந்து விட்டது. உங்கள் முன்னேற்றம் இப்போது அதன் மறுபக்கத்தில் உள்ளது. இறுதியாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விரும்பிய முன்னேற்றத்தை அடையக்கூடிய வருடம், இந்த ஆண்டாக இருக்கலாம். உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைவதற்குத் தேவையான ஊக்கத்தையும், உத்வேகத்தையும், இந்த வாசிப்புத் திட்டம் உறுதியாக அளிக்கும்.
More