ஆபாச வாழ்விலிருந்து விடுதலையை நோக்கி - ஜான் பெவரேயுடன்மாதிரி
மனம் புதிதாகுதல்
இன்றைக்கு ,ஆபாச அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறும் அனுபவத்தின் நுணுக்கங்களுக்கு நேராக நான் உங்கள் கவனத்தை கொண்டு செல்ல விரும்புகிறேன். இது ஆபாச அடிமைத்தனத்திற்கு மட்டுமல்ல, எல்லாவித அடிமைத்தனங்களுக்கும் இது பொருந்தும்.
நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள் என்றால், உங்கள் பழைய அடையாளம் இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. பாவத்தை நேசிக்கும் பண்புகளும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் அடையாளத்தை நாம் தரித்துக்கொள்ளும் வண்ணமாக, பாவத்திற்கு மரித்த நாம், அவரோடே கூட எழுப்பப்பட்டிருக்கிறோம். அவரோடே கூட எழும்பின நமக்கு அவருடைய பண்புகள் இருக்கும்படியாகவே பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளாக அருளப்பட்டிருக்கிறார்.
இந்த சத்தியத்தை நாம் அறியும்பொழுதே, நமக்குள் ஒரு கேள்வி எழும்பலாம்: பாவ பண்புகளுக்கு நான் மறுத்துவிட்டேன் என்றால், நான் ஏன் இன்னும் பாவம் செய்கிறேன்? அதிக வாய்ப்புள்ள ஒரு பதில் என்னவென்றால், உங்கள் மனம் இன்னும் புதிதாகவில்லை. மனம் புதிதாகிற அனுபவத்திற்குள் நாம் வந்தால் மட்டுமே, நம் எண்ணங்கள் மாறும். உலகத்தார் போன்றோ, மாம்சத்திற்கேற்றார்போலோ நாம் யோசிக்க மாட்டோம்.
ஆபாச அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்பது நமது சிந்தையில் நடைபெறுகிற போராட்டம். எனவே தான் ரோமாபுரியருக்கு பவுல் எழுதுகிறார், "நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையையும் பிரியமும் பரிபூரணமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ரோமர் 12:2
சரி, மனம் புதிதாகி மறுரூபமாகுவது எப்படி? தேவனுடைய சத்திய வசனங்களால் நம் சிந்தையை நிரப்புவதால் மட்டுமே. அதினால் தான் பவுல் சொல்கிறார், "அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்." 2 கொரிந்தியர் 10:5
எப்பொழுதெல்லாம் வேதவசனத்திற்கு மாறான எண்ணங்கள் உங்கள் சிந்தையில் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த பாவ எண்ணங்களை சத்திய வசனங்களால் விரட்டி அடிக்கவேண்டும். உங்கள் சிந்தைகள் வேத வசனங்களால் நிரம்பட்டும். எப்படியென்றால், வேதத்தில் நேரத்தை நீங்கள் அதிகமாக செலவழித்து, தேவனை குறித்த அறிவில் பெருக வேண்டும். இயேசுவும் இதையே தான் செய்தார். 40 நாட்கள் உபவாசத்திற்கு பின்பதாக அவருக்கு வந்த சோதனைகள் அனைத்தையுமே வேத வசனத்தாலேயே எதிர்கொண்டு ஜெயித்தார்.
சிந்தையில் நடக்கும் போராட்டங்களில் நீங்கள் வெற்றி வாகை சூடவேண்டுமானால், நீங்கள் வேதவசனத்தை தான் உபயோகிக்க வேண்டும். மற்றொரு வேத பகுதியில் பவுல் சொல்கிறார், "வேதவசனமாகிய ஆவியின் பட்டயம்" என்று. (எபேசியர் 6:17)
ஆம், ஆவியின் போராட்டங்களை நீங்கள் ஆவியின் பட்டயத்தை கொண்டு தான் ஜெயிக்க வேண்டும். நீங்கள் வசன அறிவினால், பிசாசின் பொய்களை அடையாளம் கண்டு அவனை ஜெயிக்க முடியும். நீங்கள் வசனத்தோடு வாழ துவங்கும்போது, பிசாசால் உங்களுக்கு எதிர்நிற்க முடியாது. நீங்கள் விடுதலையின் பாதையில் கெம்பீரமாக நடந்து தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் இலக்கை சுலபமாக அடையலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த தியானம் உங்களை குற்றப்படுத்துகிற ஒன்றோ ஆக்கினைக்குள்ளாக்கி பேசுகிற ஒன்றோ அல்ல. உங்கள் சுயமுயற்சியை சார்ந்து வெளிவர முயற்சித்து நீங்கள் தோற்றிருக்கலாம். நீங்கள் இருக்கும் நிலைமைக்கே உங்களிடம் வந்து, அன்பாய் உங்கள் கரங்களை பிடித்து, கிருபையும் சாத்தியமுமாம் இயேசுவினிடத்தில் உங்களை அழைத்து வந்து விடுதலையை அனுபவிக்க செய்வதே இந்த தியானத்தின் நோக்கம்.
More