இயேசுவின் உயிர்த்தெழுதல் உணர்த்தும் சத்தியம்!மாதிரி
அனைவருக்கும் தேவ கிருபை!
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பிறப்பையும் வாழ்வையும் குறித்து முன்னறிவிக்கப்பட்டார் ஒருவர்! அவரது மரணமும் முன்னறிவிக்கப்பட்டது. மிக முக்கியமாக, அவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார் என்பதும் முன்னறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் முன்னறிவிக்கப்பட்டபடியே நடந்தேறியது!
யோசித்து பாருங்கள்! ஒருவேளை இயேசு இந்த தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றாமல் போயிருந்தால், ஒருவரும் இதனை சட்டை செய்திருக்கமாட்டார்கள். மரித்தபின், உயிர்த்தெழாமல் இருந்திருந்தால்? இவர் ஒரு பொய்யன் என்றோ, இவர் ஒரு மனநலம் பாதித்தவர் என்றோ இகழ்ந்துவிட்டு போயிருப்பார்கள். இப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பதையே மறந்து போயிருப்பார்கள்.
ஆனால், இயேசு தாம் சொன்னபடியே மரணத்தை வென்று எழும்பினார். அவர் எதையெல்லாம் செய்வதாக கூறினாரோ அதையெல்லாம் செய்தும் முடித்தார். அவைகள் அனைத்தையும் அவரை பின்பற்றியவர்கள் கண்ணார கண்டனர். அவர்கள் பயந்திருந்தனர்.
ஆனால், அவருடைய உயிர்த்தெழுதலை கண்டபின்போ, அவர்கள் அவரை குறித்து மனதில் தைரியம் கொண்டிருந்தனர். இயேசு மரணத்தை ஜெயித்து உயிர்தெழுந்ததே இந்த ஈஸ்டர் தினம் முக்கியமானதாகவும், மறக்கமுடியாததாகவும் உலகத்தை மாற்றுவதாகவும் இருப்பதற்கு காரணம்.
இந்த இயேசுவின் கிருபையும், மன்னிப்பும் உங்கள் வாழ்வையே மாற்றும் திறன் கொண்டது!
ஒவ்வொரு மனிதரை குறித்தும் இயேசு அன்பு கொண்டிருக்கிறார். இந்த உலகத்தின் மீது அவர் எவ்வளவு கிருபை கொண்டிருக்கிறார் என்பதை நாம் பெற்று அறிந்து, அதனை மற்றவர்களுக்கு சுவிசேஷமாக சொல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த நற்செய்தி இன்றைய உலகத்தின் மிக முக்கிய தேவை. இப்படிப்பட்ட தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும். அவர் நம்மை படைத்தவர். நம்மை குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறவர். நாம் அவரை நோக்கி கரங்களை நீட்டின மாத்திரத்தில், அவர் நமது கரங்களை நம்மை அழிவிலிருந்து தூக்கி விட ஆவலோடு இருக்கிறார்.
நேற்று ஜேசன் அவர்கள் சொன்னதுபோல, இந்த உலகம் நேர்த்தியானதல்ல. இந்த உலகம் வலியும் வேதனையும் நிறைந்ததாய் இருக்கிறது. ஆனாலும் இவைகளின் மத்தியில் தேவன் நம்மோடு இருக்கிறார். ஒரு நாள், இவை அனைத்திலும் இருந்து அவர் நம்மை முற்றிலும் விடுவிப்பார். அவர் படைத்த நேர்த்தியான உலகமாகவே இந்த உலகத்தை அவர் மாற்றுவார். புதிய பூமியாக அவர் இவ்வுலகை மாற்றுவார். அன்று நாம் ஆண்டவரோடு நித்திய நித்தியமாக வாழ்ந்து ஆட்சி செய்வோம். அங்கு பசி இல்லை, வலி இல்லை, அழுகை இல்லை. எத்தனை இன்பமான ஒரு செய்தி இது!
இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் இந்த நாளிலும், அவருடைய கிருபையின் மன்னிப்பை உணர்ந்துகொண்டவர்களாய், இந்த நல்ல செய்தியை இந்த உலகிற்கு எடுத்து கூறுவோம் என்கிற ஒரு பொருத்தனைக்கு நேராக இந்த காணொளி உங்களை அழைத்து செல்லும். காணுங்கள்! இயேசு உயிர்த்தெழுந்து விட்டார்! அவர் இன்றும் என்றும் ஜீவிக்க போகிறார்!
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் இயேசுவின் கிருபையை நான் பிறரிடம் பறைசாற்றுவது எப்படி? இயேசுவின் அன்பையும் இரக்கத்தையும் என்னால் இன்று யாரிடத்தில் காட்ட முடியும்? இயேசு நம்மை நேசிக்கிறார் என்ற நற்செய்தியை நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் எப்படி சொல்வது?
ஜெபம் அன்புள்ள பிதாவே, நீர் மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்து, இன்றும் ஜீவிக்கிறவராக இருப்பதற்காக மிகவும் நன்றி. உம்முடைய அன்பில், மன்னிப்பில் நானும் பங்கடைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உம்முடைய சத்தியமாகிய அன்பை, கிருபையை, மன்னிப்பை இன்னும் அநேகரோடு ஒவ்வொருநாளும் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.
நீங்கள் செல்வதற்கு முன்பாக எமது வேறு சில காணொளிகளையும் இதிலே காணுங்கள். கண்டு பயன்பெறுங்கள்!
இந்த திட்டத்தைப் பற்றி
ஒருமுறை, தம்முடைய மரணத்தையே ஒருவர் முன்னறிவித்தார். அவர் தமது மரணத்தை அறிவித்தது மட்டுமல்ல, 3 நாட்களில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றும் அறிவித்தார். ஆம், அவர் தாம் முன்னறிவித்தபடியே மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்! அவர் பெயர், இயேசு! அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் சத்தியமானவை. அவைகளை நினைவு கூறும் வண்ணமாகவே இந்த ஈஸ்டர் நாளை உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்த சத்தியம் நமக்கு இன்று உணர்த்துவது என்னென்ன என்பதை அடுத்த சில நாட்களில் இந்த வேதாகம திட்டத்தின் கீழ் நாம் தியானிக்க இருக்கிறோம்!
More