இயேசுவின் உயிர்த்தெழுதல் உணர்த்தும் சத்தியம்!மாதிரி
வீழ்ச்சியின் துவக்கம்
ஆதியாகமத்தின் இன்றைய வேத பகுதியில், தேவன் படைத்த முதல் மனிதர்களான ஆதாம் ஏவாள் பற்றி வாசித்தோம். தேவன் சுயாதீனமுள்ள ஒரு உலகத்தை அவர்களுக்காக கொடுத்தார். ஆனால், அவர்கள் செய்ய கூடாதென்று ஒரு காரியத்தையும் வைத்திருந்தார். ஏன் அப்படி செய்தார்? தேவனை விட்டு தூரம் செல்வதையும் அவர்களாகவே முடிவெடுக்கும் வண்ணமாக அப்படி வைத்தார். அவ்வாறு அவர்கள் தேவனை விட்டு செல்வதினால் உண்டாகும் விளைவையும் முன்னறிவித்திருந்தார் - மரணம்! ஏன்? தேவனிடத்தில் தான் ஜீவன் இருக்கிறது. அவரையன்றி வேறெங்கும் நம்மால் ஜீவனை காண முடியாது. இதுவே சத்தியம்.
மனிதர்கள் நன்மையை விட்டுவிட்டு தீமையை தேர்ந்தெடுப்பார்கள் என்றால், தேவன் ஏன் மனிதர்களை தேர்ந்தெடுக்கும் திறன் உள்ளவர்களாக படைத்தார்?
தேவன் மனிதர்களை தேர்ந்தெடுக்கும் திறன் கொண்டவர்களாக படைத்ததற்கு காரணம், அவர் நம் மீது கொண்டிருக்கும் அன்பே! அன்பு மற்றவரை கட்டாயப்படுத்தாது. தேவன் அன்பாகவே இருக்கிறார். நன்மையான எதுவும் அவரிடத்திலிருந்தே வருகிறது என்று யாக்கோபு தனது நிருபத்தில் குறிப்பிடுகிறார். அவரோடு கூட ஐக்கியப்பட்டு களிகூரவே அவர் நம்மை படைத்தார் - அதுவும் நாம் தெரிந்துகொண்டால் மட்டுமே. ஆனால், மனிதனின் வீழ்ச்சியால், காரியங்கள் மோசமடைந்தது.
ஆதாமும் ஏவாளும் தங்களுக்கு செய்யக்கூடாதென்று கட்டளையிட்டிருந்த காரியத்தை மீறி செய்வதையே தேர்ந்தெடுத்தார்கள். தேவனுடைய வார்த்தையை அவர்கள் மீறினபோது, முதல் முறையாக வெட்கமடைந்தார்கள். வெட்கம் என்னும் உணர்வை அவர்கள் அனுபவிப்பதை தேவன் விரும்பவில்லை, ஆகிலும் பாவத்தின் விளைவாகவே வெட்கம் மனித குலத்திற்குள் நுழைந்தது. நம்முடைய சந்தோஷத்தையும் விடுதலையையும் மரணம் கெடுத்தது. நமக்கும் தேவனுக்கும் நடுவாக இருந்த அந்த உறவையும் அது கெடுத்தது. வலியையும் வேதனையும் நமக்கு கொடுத்து, நம் அனைத்தையும் கெடுத்துப்போட்டது. இந்த அழகான உலகத்தை நாசம் செய்து, ஒருவருக்கொருவர் மோசம் செய்து, நம்மை நாமே கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தோம். இதெற்கெல்லாம் நமது பாவமே காரணம்! தேவனை விட்டு பிரிந்து செல்லும் நாளில் சாகவே சாவை என்று தேவன் சரியாகவே சொல்லியிருந்தார். நாம் அவரை விட்டு விலகி, மரணத்திற்கு வழி கொடுத்தோம்.
இன்றும் ஜேசன் அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தின் மற்றொரு பகுதியை உங்களோடு பகிர்ந்து கொள்வார்கள். நீங்கள் விரும்பும் ஒன்றிலிருந்து பிரிக்கப்படுவதை அறிந்து உணரும்போது, அது எத்தகைய வலியை கொடுக்குமென்று நமக்கு உணர்ச்சிபூர்வமாக விளக்க வருகிறார்.
தனது 6 வயதிலேயே இழப்பின் கொடுமை தரும் வலியை அனுபவித்தது பற்றி ஜேசன் அவர்கள் பகிர்ந்ததை கேட்டிருப்பீர்கள். உங்கள் இருதயத்திற்கு நெருக்கமான ஒருவரை இழந்த அனுபவம் உண்டா? உங்கள் வாழ்வையே முற்றிலும் திருப்பிபோடத்தக்க வலியை அது உங்களுக்கு கொடுக்கும். இதனை சிறிதளவும் தேவன் விரும்பவில்லை. இந்த அழகிய உலகத்தை நாம் அவரோடு ஐக்கியப்பட்டு பகிர்ந்து வாழ்ந்திருக்கவே படைத்தார்.
நம்மால் சரிசெய்ய முடியாத அளவிற்கு அவருடைய திட்டத்தை நாம் கெடுத்துவிட்டோம் என்று தேவன் கண்டார். நம்மால் மோசமடைந்த இந்த உலகத்தை சரிசெய்ய ஒருவரை அனுப்பப்போவதாக தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக வார்த்தையை மனிதர்களுக்கு அனுப்ப ஆரம்பித்தார். இயேசுவின் உயிர்த்தெழுதலை நாம் நெருங்கி விட்டோம். இதனை குறித்து மேலும் சிலவற்றை நாளைய தினத்தில் நாம் தியானிப்போம்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: நான் ஒரு இயந்திரத்தை செய்து, "நீ என்னை நேசிக்கின்றாயா?" என்று எப்பொழுதெல்லாம் கேட்கிறேனோ, அப்பொழுதெல்லாம் அது, "ஆம்" என்று பதிலளிக்கும் வண்ணம் அதனை வடிவமைத்திருந்தால், அது என்னை உண்மையாகவே நேசிக்கின்ற ஒரு இயந்திரம் என்று அர்த்தமாகுமா? எனக்கும் ஓர் இயந்திரத்திற்கும் என்ன வித்தியாசம்?
ஜெபம்: அன்பு தகப்பனே, நாங்கள் உம்மை நேசிப்பதை தேர்ந்தெடுக்க உதவி செய்தமைக்காக உமக்கு நன்றி சொல்கிறோம். நாங்கள் உம்மை நேசிக்க கடன்பட்டிருந்தாலும், நேசிப்பதை கட்டாயப்படுத்தாமல், அதை எங்களுடைய தேர்ந்தெடுப்புக்கு விட்டுத்தந்த உமது பேரன்பிற்காக நன்றி சொல்கிறோம். உம்முடைய அன்பு, எங்களுடைய புரிந்துகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது! ஒவ்வொரு நாளும் உம்மை குறித்து மென்மேலும் அறிந்துகொள்ள, உம்மை நேசிப்பதிலும் மென்மேலும் வளர எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்!
இந்த திட்டத்தைப் பற்றி
ஒருமுறை, தம்முடைய மரணத்தையே ஒருவர் முன்னறிவித்தார். அவர் தமது மரணத்தை அறிவித்தது மட்டுமல்ல, 3 நாட்களில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றும் அறிவித்தார். ஆம், அவர் தாம் முன்னறிவித்தபடியே மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்! அவர் பெயர், இயேசு! அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் சத்தியமானவை. அவைகளை நினைவு கூறும் வண்ணமாகவே இந்த ஈஸ்டர் நாளை உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்த சத்தியம் நமக்கு இன்று உணர்த்துவது என்னென்ன என்பதை அடுத்த சில நாட்களில் இந்த வேதாகம திட்டத்தின் கீழ் நாம் தியானிக்க இருக்கிறோம்!
More