நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி
அவர் எல்லாருக்கும் எல்லாமும் ஆனவர்
Danny Saavedra
“நமக்கொரு பாலகன் பிறந்தார், நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும் அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு.”—ஏசாயா 9:6
ஸ்மார்ட்போன் என்பது அனைவருக்கும் பயனுள்ள ஒரு கருவி என்பதை மறுக்க முடியாது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பதால் பெரிய விதத்தில் பயனடையாதவர் யாராவது இன்றைய உலகில் இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அதேபோல, நெருப்பு என்பது மனித இனத்திற்கு பிரயோஜனமானது. வெப்பம் கொடுக்க, சமைக்க, எரிப்பொருளாக பயன்பட என பல விதங்களில் நெருப்பு நமக்கு உதவுகிறது.
இந்த உலகத்தில் எல்லாருடைய வாழ்க்கையையும் மேம்படுத்த பல்வேறு பொருட்களும் வளங்களும் இருக்கின்றன. அதே விதத்தில், கிறிஸ்துவின் பிறப்பு அனைவருக்காகவும் உள்ளது! நீங்கள் யாராக இருந்தாலும், என்ன செய்திருந்தாலும், என்ன மொழி பேசினாலும், எந்த நாட்டை, கலாச்சாரத்தை சேர்ந்தவராக இருந்தாலும், யாரையும் எவரையும் மாற்றவும், வாழ்க்கையை அற்புதமாக்கவும், அர்த்தமுள்ளதாக்கவும், திருப்த்தியுள்ளதாக்கவும், சந்தோஷம் நிறைந்ததாக்கவும் வேண்டிய வல்லமையை கிறிஸ்துவின் பிறப்பு கொண்டுள்ளது. ஏன்? ஏனென்றால், எல்லாமுமான தேவக்குமாரன் இயேசு எல்லாரையும் இரட்சிக்க வந்ததன் சம்பவம் இது. (யோவான் 3:16, 36, 6:40, 11:25) அவர் மூலமே அனைத்தும் நிலைத்திருக்கிறது. (யோவான் 1:3; கொலோசெயர் 1:17).
அவர் பிறப்பதற்கு 700 ஆண்டுகள் முன்பே, இஸ்ரவேல் மக்களிடம் அவருடைய வருகையை ஏசாயா தீர்க்கதரிசி முன் அறிவித்திருந்தார். சர்ப்பத்தின் தலையை நசுக்கவிருக்கும் வாக்களிக்கப்பட்ட வித்தை, மேசியாவின் வருகையை அவர் அறிவித்திருந்தார். உலக தேசங்கள் அனைத்தும் அவர் மூலம் ஆசீர்வதிக்கப்படும். மனிதக்குலத்தின் நம்பிக்கையும் எதிர்காலமும் மனிதர்களை சார்ந்தது இல்லை என்றும் அனேகருக்கு விலை செலுத்துபவராக தம் குமாரனை தேவன் கொடுப்பார் என்ற அழகிய வெளிப்பாடை, தரிசனத்தைக் கொடுத்தார் (ஏசாயா 53). நமக்கு வேண்டியது, நாம் விரும்புவது, நாம் எப்போதும் எதிர்பார்ப்பது எல்லாம் இந்த இயேசுவாகிய சிறுவனை தான்.
அது எப்படி? ஏசாயா நமக்கு பிரித்துக் காட்டுகிறார்:
ஆலோசனைக் கர்த்தர்
எல்லா ஞானமும் அவரிடமிருந்து வருகிறது! நீதிமொழிகள் 2:6–7 இப்படியாக சொல்லுகிறது, “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.” எல்லா ஞானத்திற்கும் அறிவிற்கும் ஊற்று அவர் தான். சரியான வழிகளில் நம்மை நடத்தி, அர்த்தமுள்ள நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று நமக்கு கற்பிக்கிறார். நாம் நம்மை பற்றி அறிந்ததை விட நன்றாக அவர் நம்மை பற்றி அறிந்திருக்கிறார், அவர் நம்மை புரிந்துக்கொண்டிருக்கிறார்! முழுமையாக மனிதனாக அவர் வாழ்ந்ததால், நம் வாழ்க்கை எப்படிப்பட்டது என்று அவருக்குத் தெரியும். “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்,” என்று எபிரெயர் 4:15 நமக்கு நினைவுப்படுத்துகிறது.
வல்லமையுள்ள தேவன்
“அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக” (1 பேதுரு 5:11). பெலன், வல்லமை, தைரியம், விடாமுயற்ச்சி. . . இவை அனைத்தும் அவரிடமிருந்து வருகின்றன. அவரை நோக்கிப் பார்க்கும் அனைவருக்கும் அவர் தம் வல்லமையை தருகிறார் என்று வேத வார்த்தை நமக்கு தொடர்ந்து நினைவுப்படுத்துகிறது! "தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்" என்று சங்கீதம் 46:1 அறிக்கையிடுகிறது. "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு," என்று பிலிப்பியர் 4:13 நமக்கு நினைவுப்படுத்துகிறது. "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று 2 கொரிந்தியர் 12:9இல் நம்மை உறுதிப்படுத்துகிறார்.
நித்திய பிதா
நம் ரட்சகர் பிதாவுடன் ஒன்றாக இருக்கிறார். யோவான் 14:9 இல், "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" என்று அறிக்கை செய்கிறார். “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்..." என்று எபிரெயர் 1:3 அழகாக வருணிக்கிறது. நண்பர்களே, அவர் உங்களுக்கு முன்பாக போகிறார், அவர் எப்போதுமே உங்களுடன் இருப்பார். அவர் எல்லா விசுவாசிகளுக்கும் தந்தையாக இருக்கிறார். (யோவான் 8:58), நம் விசுவாசத்தை துவக்குகிறவராகவும், பூரணமாக்குகிறவராகவும் இருக்கிறார்.
சமாதானப் பிரபு
நாம் தேவனுடன் சரி செய்யப்படவே இயேசு வந்தார். நம்மை பிதாவுடன் ஒப்புரவாக்கி, நம் பாவங்களுக்கான விலையை செலுத்தி அந்த இடைவெளியை அடைக்கவே அவர் வந்தார். பரலோகத்திற்கு செல்லும் முன், "சமாதானத்தை உங்களுக்கு விட்டு செல்லுகிறேன், என் சமாதானத்தை உங்களுக்கு விட்டு செல்லுகிறேன்" (யோவான் 14:27). புத்திக்கெட்டாத அவருடைய சமாதானம் நம்மை பாதுகாக்கவும், நம்பிக்கை, உறுதி, மற்றும் அமைதி கொடுக்கவும் வல்லமை பெற்றுள்ளது. "அவர் உங்களை விசாரிக்கிறவர் ஆனப்படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்" (1 பேதுரு 5:7) என்று சொல்லி அவரிடம் வந்து இளைப்பாற நம்மை அழைக்கிறார்.
நண்பர்களே, நமக்கு தேவையான, நமக்கு வேண்டிய அனைத்தையும் கிறிஸ்து இயேசு நமக்கு அளிக்கிறார். எல்லா நித்தியத்திற்கும் தேவையான நல்ல, அழகான காரியங்கள் அனைத்தையம் இயேசுவோடு உள்ள உறவு அளிக்கிறது. அவரது வல்லமை, ஞானம், அன்பு, கிருபை, தயவு, இறக்கம், மற்றும் பெலன் நாம் அனைவருக்கும் உரியது. அவரை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் அவை உரியன. ஒவ்வொரு வாக்குத்தத்தமும், ஒவ்வொரு ஆசீர்வாதமும், ஒவ்வொரு நல்ல, முழுமையான ஈவும். . . இவை அனைத்தும் உங்களுக்கானது!
இந்த திட்டத்தைப் பற்றி
அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!
More