நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி
பாவம்: இதனால் தான் கிறிஸ்துமஸ் எல்லாருக்கும் உண்டு
Danny Saavedra
“அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்”—ரோமர் 3:22–24
நாம் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம். மகிழ்ச்சியும் நல்ல காரியங்களும் நிறைந்த ஒரு அழகிய நேரம் இது. ஒரு மரத்தை அலங்கரிக்கிறோம், விளக்குகளை கோர்கிறோம், அழகிய கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுகிறோம், நல்ல பரிசுகளைக் கொடுக்கிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும், "இயேசு தான் இந்த காலத்தின் காரணம்" என்று அனைவருக்கும் நினைவுப் படுத்த விரும்புகிறோம். ஆனால், அவர் ஏன் இந்த காலத்தின் காரணம் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இந்த காலம் தான் ஏன் இருக்கிறது? இயேசு ஏன் பரலோகத்தை விட்டு உலகத்திற்கு வர வேண்டும்?
சுருக்கமாக சொல்லப் போனால், நம் பாவம். ஆண்டவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார். அவர் நம்மை தனது உருவத்திலும், சாயலிலும் படைத்தார். (ஆதியாகமம் 1:27). தேவனின் படைப்பின் மகுடமாக நாம் இருந்தோம். அவரை மகிமைப் படுத்தவும், அவரது அன்பு பிள்ளைகளாக அவரது பிரசனத்தில் எப்போதும் ஒரு பூரணமான உறவு கொண்டு மகிழவும் படைக்கப்பட்டோம். இது தான் நம் விதியாக இருந்தது, இதை அனுபவிக்க தான் நாம் படைக்கப்பட்டோம். . . . இதைத் தான் ஆதாமும் ஏவாளும் அனுபவித்தார்கள். அவர்கள் தேவனுடன் நடந்தார்கள், பேசினார்கள், அவரது பிரசனத்தில் மகிழ்ந்தார்கள். தோட்டத்தின் பழங்களை உண்டு மகிழ்ந்து தங்கள் அழைப்பை அவர்களால் வாழ முடிந்தது. (ஆதியாகமம் 2:15–16). ஆனால் வீழ்ச்சி ஏற்பட்ட பிறகு, எல்லாமே தவறாகி விட்டது.
ஆதாமும் ஏவாளும் தங்கள் பெருமையையும் சுயநலமான உந்துதல்களையும், "தேவனைப் போல" இருக்க வேண்டும் என்ற ஆசையையும் அவர்களின் பகுத்தறிவை களங்கமடைய விட்டனர். அவர்கள் சர்ப்பத்தால் தங்களை ஏமாற்ற விட்டதால், அவர்களும் நாம் அனைவரும் கிருபையிலிருந்து விழுந்து விட்டோம். அந்த நேரத்தில், "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று." (ரோமர் 5:12)என்று பவுல் சொல்லுகிறார். அவரது உருவத்தையும் சாயலையும் அவர்கள் சுமந்துக் கொண்டார்கள் என்றும், அவரது அரிச்சுவடு தங்கள் இதயங்களிலும் ஆத்துமாக்களிலும் இருந்தது.
Sin and Redemption என்ற புத்தகத்தில் ஜான் கார்னியர் இப்படியாக சொல்லுகிறார், "பாவம் இவ்வாறு தேவனை விட்டு நம்மை பிரித்து, அவருடன் பகைமையை ஏற்படுத்துகிறது. வேறு விதத்தில் சொன்னால், ஆவிக்குரிய மரணம் எனப்படும் பிரிவினை பாவிக்கும் தேவனுக்கும் இடையே ஏற்படுத்துகிறது, இதற்கு மாறுப்பாடானது என்னவென்றால் ஊக்கப்படுத்தப்படுவது அல்லது உயிர் கொடுக்கப்படுவது, அதாவது, தேவனிடம் ஒப்புரவாக்கப்படுதல்.” ஆதாம், ஏவாளின் பாவம் தங்கள் பிள்ளைகள் அனைவரையம், மனித சரித்திரத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் பாதித்தது. நமக்கும் பரிசுத்தமான குற்றமற்ற தேவனுக்கும் இடையே இது ஒரு பிளவை, ஒரு பிரிவை ஏற்படுத்தியுள்ளது. அப்போதிருந்து பிறந்த ஒவ்வொரு பிள்ளையும் பிறவியிலேயே ஆவியில் மரித்ததாகவும், தேவனிடமிருந்து பிரிந்ததாகவும் இருக்கிறது, ஒருவரைத் தவிர. இப்படி நாம் ஆவியில் மரித்து பிறந்தோமானால், சரீர மரணம் ஏற்படும் போது, ஒப்புரவாகுதலுக்கு வாய்ப்பு இல்லாமல் நிரந்தர மரணமாகி விடுகிறது.
ரோமர் 6:23இல் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று பவுல் கூறுகிறார். ஏதேன் தோட்டத்தில் செய்த பாவம் உடனடியாக மனிதக் குலத்தின் மேல் ஆவிக்குரிய மரணத்தை ஏற்படுத்தியது. ஒருவரின் பாவத்திற்கான கடைசி கடன் சரீர மரணத்தின் போது நிகழும் முழுமையான மரணமாகும். எனவே, (மரணமாகிய) பாவத்தின் கடனை தீர்க்க, மற்றொன்று (அல்லது மற்றொருவர்) பாவியின் இடத்தில் மரிக்க வேண்டும். இந்த காரணத்தினால், பாவத்தின் கடனை செலுத்த பலியின் செயல் அவசியமாகிவிட்டது. ஏன்? ஏனென்றால், நம் பாவத்தின் விலை மரணமாகும், மேலும், "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை" (எபிரேயர் 9:22).
இதன் முதல் உதாரணத்தை நாம் வீழ்ச்சிக்கு பிறகே பார்க்கிறோம். ஆதியாகமம் 3:21 இப்படியாக சொல்லுகிறது, “தேவனாகிய கர்த்தர் மிருகங்களின் தோலை ஆடையாக்கி அவனுக்கும் அவளுக்கும் அணிந்துகொள்ளக் கொடுத்தார்.” பாருங்கள், ஆதாமையும் ஏவாளையும் உடுத்த, அவர்களின் அவமானத்தை போக்க, அவர் ஒரு மிருகத்தின் ரத்தத்தை சிந்தி அதனை கொல்ல வேண்டியிருந்தது. ஆனால், “வெள்ளாடு, கன்று குட்டி போன்றவற்றின் இரத்தம் நமது பாவங்களை விலக்காது” (எபிரேயர் 10:4 NIV). அது போதுமானதாக இல்லை. இது தான் கிறிஸ்துமஸ் கதையை வல்லமையாக்குகிறது!
தேவனின் மகிமையான திட்டம் செயல்படுத்தப்பட்ட தருணத்தைப் பற்றியது தான் கிறிஸ்துமஸ் சம்பவம். எப்படி? “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புக்கூர்ந்தார்” (யோவான் 3:16). குற்றமற்ற தேவக்குமாரனாகிய இயேசு "இதோ இருக்கிறேன். . .” (எபிரேயர் 10:7) என்று சொன்னார், மேலும் “நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:4). நம் பாவங்களுக்கான சம்பளத்தை அவர் ஒரே முறையாக செலுத்தினார், அதன் மூலம் "நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் நித்திய ஜீவன்" (ரோமர் 6:23) என்னும் தேவனின் பரிசை நமக்குக் கொடுத்தார். இயேசுவினால், நாம் ஆதாம், ஏவாளை விட அதிக நெருக்கமாக தேவனை மகிமைப்படுத்தவும், அனுபவிக்கவும் முடிகிறது. நாம் தேவனுடன் நடப்பது மட்டுமல்ல, தேவ ஆவியானவர் நமக்குள்ளேயே இருக்கின்றார்!
இந்த திட்டத்தைப் பற்றி
அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!
More