தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்மாதிரி
“அவ்வளவுதான், நான் இதோடு எல்லாவற்றையும் முடித்துக்கொள்கிறேன்.”
இந்த வாக்கியம் என்னுடைய நண்பர் ரையனின் அலைபேசியில் தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஒரு செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்குத் தோன்றியது. நாள் முழுவதுமான நீண்ட வேலைக்குப் பின்னர் அவர் அப்பொழுதுதான் தன் குழந்தைகளை முத்தமிட்டு, இரவு வணக்கம் சொல்லிவிட்டு சாய்வு இருக்கையில் அமர்ந்திருந்தார்.
“மன்னிக்கவும், யார் இது?” அவர் பதில்செய்தி அனுப்பினார்.
அவள் பெயர் சாரா. அவள் தான் தவறான தொலைப்பேசி எண்ணிற்கு செய்தி அனுப்பியதைப் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டாள்.
“ஒரு நிமிடம்” அவர் பதிலனுப்பினார். “நான் உதவ முடியும்.”
சுமார் அரை மணி நேரம் அங்குமிங்குமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். அவள் தன்னுடைய கதையை அவரிடம் சொன்னாள். அது மிக சோகமானதாயிருந்தது. துர்ப்பிரயோகம் செய்யும் அவளுடைய ஆண்நண்பன் அவளோடுள்ள உறவை முறித்துக்கொண்டதுதான் இறுதியாக அவளை மிகவும் மனமுறிவடையப் பண்ணியிருந்தது. இயேசுவின் அன்பைக் குறித்தும், தேவனுக்குள் அவளுடைய விலைமதிப்பைக் குறித்தும் அவளிடம் சொல்ல ரையன் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்தார். ஒரு 22 வயது பையனின் எண்ணத்தை வைத்து அவளுடைய வாழ்வைத் தீர்மானிக்க வேண்டாம் என்றும் சொன்னார்.
“கால தாமதமாகிவிட்டது” அவள் செய்தி அனுப்பினாள், “நான் இப்பொழுதுதான் முழு பாட்டில் மாத்திரைகளையும் விழுங்கினேன்.”
அவள் இருக்குமிடத்தைச் சொல்லும்படி ரையன் அவளை மிகவும் கெஞ்சி கேட்டார். அவரும், அவருடைய மனைவியும் அங்கு வந்து அவளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதாகக் கூறினார். அவள் தான் இருக்குமிடத்தைச் சொன்னாள், அவர்கள் அவளை மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசென்றனர், அங்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையளித்து சாராவைக் காப்பாற்றினர்.
அடுத்த சில மாதங்களில், கிறிஸ்துவுக்குள் தான் எவ்வளவு விலையேறப் பெற்றவள் என்பதைப் பார்க்கும்படியாக சாராவின் கண்கள் மெதுவாகத் திறக்கப்பட்டன. தன் வாழ்விற்கான தேவத்திட்டத்தைத் தொடர அவள் ஒரு கிறிஸ்தவ பல்கலைக் கழகத்திற்குச் சென்றாள். தேவன் அவளை மீட்டெடுத்தார்; உலகத்தினால் உபயோகமில்லாதது எனக் கருதப்பட்டதும், ஏன் அவளாலேயே பிரயோஜனமற்றது என்று எண்ணப்பட்டதுமான ஒரு வாழ்க்கையைத் தேவன் தலைகீழாக மாற்றினார். அவளுடைய விலைமதிப்பு மரணத்திற்குப் பாத்திரமாயிருந்தது.
ஒரு நண்பர் தொழில்துறையில் எம.பி.ஏ படித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய பொருளாதார விரிவுரையாளர் மாணவர்களிடம் மிகவும் வலியுறுத்திச் சொல்லும் ஒரு கருத்து என்னவெனில்: ஒரு பொருளின் மதிப்பு அது எவ்வளவு விலைகொடுத்து வாங்கப்படுகிறது என்பதாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதாகும்.
நம்முடைய மீட்பிற்காகச் செலுத்தப்பட்ட விலைக்கிரயம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம், அவரே தேவ குமாரன். இதனினும் மேலான விலை வேறு இருக்க முடியுமா? அல்லது வேறு ஏதாவது உங்களை இதனினும் மேலானவர்களாக மாற்ற முடியுமா?
தேவன் நமக்காக செலுத்தின விலைக்கிரயத்தின் அடிப்படையிலான நம்முடைய மதிப்பினைக் கொண்டே நாம் அனைவரும் ஒரு அனுதின போராட்டத்தைப் போராடுகிறோம். ஆனால் நாம் நம்முடைய மதிப்பை அளவிட வேறு அளவுகோலை வைத்திருக்கிறோம். நம்முடைய சாதனை, குடும்பம், அழகு, செல்வம், இனம், படிப்பு, தலைமை ஏற்று நடத்தும் ஆற்றல், செல்வாக்கு எண், அல்லது இது போன்ற பலவற்றை அளவுகோலாக்குகிறோம்.
மனிதர்கள் அனைவரும், ஒன்று தங்களுடைய தகுதியை நிரூபிக்க மிகத்தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது மிகுந்த மனச்சோர்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தாங்கள் எதற்கும் தகுதியற்றவர்கள் என நினைக்கிறார்கள்.
உங்கள் ஆத்துமாவுக்கு தேவசெய்தியைப் பிரசங்கிப்பதன் மிகமுக்கிய பயன்களில் ஒன்று இதுவேயாகும். உங்களை மீட்கும்படியாக செலுத்தப்பட்ட பெரும்விலையை உங்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் கிறிஸ்துவுக்குள் உங்கள் ஆத்துமாவின் விலைமதிப்பை நீங்கள் அதற்கு நினைவூட்டுகிறீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
More