மத்தேயு 15

15
சுத்தமும் அசுத்தமும்
1பின்பு பரிசேயரும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, 2“உமது சீடர்கள் ஏன் முன்னோரின் சம்பிரதாய வழக்கத்தை மீறுகிறார்கள்? அவர்கள் தாங்கள் உண்பதற்கு முன்பு, தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே!”#15:2 யூத முறைமைப்படி ஒருவர் தன்னை சுத்திகரித்துக்கொள்வதைக் குறிக்கிறது என்று கேட்டார்கள்.
3அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுடைய சம்பிரதாய வழக்கத்தின் காரணமாக, நீங்கள் ஏன் இறைவனின் கட்டளைகளை மீறுகிறீர்கள்? 4ஏனெனில், ‘உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணு’#15:4 யாத். 20:12; உபா. 5:16 என்றும் ‘எவனாவது தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்பட வேண்டும்’#15:4 யாத். 21:17; லேவி. 20:9 என்றும், இறைவன் சொன்னாரே. 5ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தகப்பனிடமோ தாயிடமோ, ‘உங்களுக்கு உதவியாக செய்யக்கூடிய எல்லாவற்றையும் இறைவனுக்கு காணிக்கையாக அர்ப்பணித்துவிட்டேன்’ என்று சொன்னால், 6அவன் தன் தகப்பனையோ, தாயையோ கனம் பண்ண வேண்டிய அவசியமில்லை என்று சொல்கின்றீர்கள். நீங்கள் உங்கள் சம்பிரதாயத்தின் காரணமாக, இறைவனின் வார்த்தைகளை உதாசீனம் செய்கின்றீர்கள். 7வெளிவேடக்காரர்களே! உங்களைக் குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்கு உரைத்தார்:
8“ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்.
ஆனால், அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.
9அவர்கள் என்னை வீணாகவே ஆராதிக்கின்றார்கள்;#15:9 ஏசா. 29:13
அவர்களுடைய போதனைகளோ மனிதரால் போதிக்கப்பட்ட விதிமுறைகளாகவே இருக்கின்றன’ ”
என்றார்.
10பின்பு இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடமாய் அழைத்துச் சொன்னதாவது: “கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள். 11மனிதனுடைய வாய்க்குள் போவது அவனை அசுத்தப்படுத்தாது. ஆனால் அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவது எதுவோ, அதுவே அவனை அசுத்தப்படுத்தும்” என்றார்.
12அப்போது சீடர்கள் அவரிடம் வந்து, “இவற்றைப் பரிசேயர்கள் கேட்டு, கோபித்துக் கொண்டார்கள் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
13அதற்கு அவர், “எனது பரலோக பிதா நடாத எல்லாச் செடிகளும் வேரோடு பிடுங்கிப் போடப்படும். 14அவர்களை விட்டுவிடுங்கள்; அவர்கள் கண் பார்வை இழந்த வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவனுக்குப் பார்வையற்ற இன்னொருவன் வழிகாட்டினால், இருவரும் குழியிலே விழுவார்களே” எனப் பதிலளித்தார்.
15அப்போது பேதுரு, “இந்த உவமையை எங்களுக்கு விளக்கமாகச் சொல்லும்” என்றான்.
16அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்கள் இன்னுமா இதைப் புரிந்துகொள்ளவில்லை? 17வாய்க்குள் போவதெல்லாம் வயிற்றுக்குள் போய், உடலைவிட்டு வெளியேறுகிறது என்று தெரியாதா? 18ஆனால் வாயிலிருந்து வெளியே வருகின்றவைகளோ இருதயத்திலிருந்தே வருகின்றன. அதுவே மனிதரை அசுத்தப்படுத்தும். இவையே ஒரு மனிதனை ‘அசுத்தம்’ உள்ளவனாக்குகின்றன. 19ஏனெனில் இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், கொலை, தகாத உறவு, முறைகேடான பாலுறவு, களவு, பொய்ச் சாட்சி, அவதூறு ஆகியவை வெளிவருகின்றன. 20இவையே மனிதனை அசுத்தப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுவது மனிதரை அசுத்தப்படுத்தாது” என்றார்.
கானானியப் பெண்ணின் விசுவாசம்
21இயேசு அவ்விடம்விட்டு தீரு, சீதோன் பிரதேசத்திற்குச் சென்றார். 22அப்பிரதேசத்திலிருந்த ஒரு கானானியப் பெண் அவரிடம் வந்து, “ஆண்டவரே, தாவீதின் மகனே, என்மீது இரக்கமாயிரும்! எனது மகளுக்குப் பேய் பிடித்திருப்பதனால், மிகவும் வேதனைப்படுகிறாள்” என்று கதறினாள்.
23ஆனால் இயேசு அதற்குப் பதிலாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எனவே அவரது சீடர்கள் அவரிடம் வந்து, “இவளை அனுப்பி விடும், இவள் நமக்குப் பின்னால் கதறிக் கொண்டே வருகின்றாளே” என வேண்டிக் கொண்டார்கள்.
24அப்போது அவர், “நான் இஸ்ரயேலில் வழி தவறிப் போன செம்மறியாடுகளுக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன்” என்று சொன்னார்.
25அந்தப் பெண் வந்து, அவரின் முன்பாக முழந்தாழிட்டு, “ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்!” என்றாள்.
26அவர் அவளைப் பார்த்து, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார்.
27அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆனால் நாய்க்குட்டிகள், எஜமானின் மேசையில் இருந்து விழும் அப்பத் துண்டுகளைத் தின்னுமே” என்றாள்.
28அப்போது இயேசு, “பெண்ணே, உன் விசுவாசம் பெரியது! நீ கேட்டது கொடுக்கப்பட்டது” என்றார். அந்நேரமே, அவளுடைய மகள் குணமடைந்தாள்.
இயேசு நாலாயிரம் பேருக்கு உணவளித்தல்
29இயேசு அவ்விடம்விட்டு, கலிலேயா கடலோரமாக வந்தார். பின்பு அவர் மலைச்சரிவில் ஏறிச் சென்று, அங்கே உட்கார்ந்தார். 30மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். அவர்கள் கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோர்களையும், அங்கவீனர்களையும், வாய் பேச முடியாதவர்களையும், அவர்களுடன் மற்றும் அநேக நோயாளிகளையும் கொண்டுவந்து அவருடைய பாதத்தில் கிடத்தினார்கள்; அவர் அவர்களைக் குணமாக்கினார். 31பேச முடியாதவர்கள் பேசுவதையும், அங்கவீனர் குணமடைவதையும், கால் ஊனமுற்றோர் நடப்பதையும், பார்வையற்றோர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியப்படைந்தார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனைத் துதித்தார்கள்.
32இயேசு தமது சீடர்களைத் தன்னிடமாக அழைத்து, “நான் இந்த மக்களுக்காக அனுதாபப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். உண்பதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. நான் இவர்களை பசியோடு அனுப்ப விரும்பவில்லை, அனுப்பினால் இவர்கள் வழியில் சோர்ந்து விழுவார்களே” என்றார்.
33அதற்கு அவரது சீடர்கள், “இவ்வளவு பெரிய கூட்டத்திற்குக் கொடுப்பதற்குத் தேவையான உணவை, இந்த ஒதுக்குப்புறமான இடத்தில் நாம் எங்கிருந்து பெற முடியும்?” என்று கேட்டார்கள்.
34இயேசு அவர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார்.
“ஏழு அப்பங்களும், சில சிறு மீன்களும் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள்.
35அவர் மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார். 36பின்பு அவர் ஏழு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாக்கி சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 37அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளை சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்தார்கள். 38சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை நாலாயிரமாயிருந்தது. அவர்களைத் தவிர பெண்களும், பிள்ளைகளும்கூட இருந்தார்கள். 39இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்ட பின், படகில் ஏறி மக்தலா நாட்டின் பக்கமாக சென்றார்.

Qaqambisa

Share

Copy

None

Ufuna ukuba iimbalasane zakho zigcinwe kuzo zonke izixhobo zakho? Bhalisela okanye ngena