குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
இஸ்ரவேலின், ஜீவனுள்ள ஒன்றான மெய்த்தேவனுக்கும், எகிப்தியர் வழிபட்ட பலவிதமான பொய்யான தெய்வங்களுக்கும் இடையே நடந்த யுத்தம் தான் இந்த பத்து வாதைகளும் (யாத்திராகமம் 12:12; எண்ணாகமம் 33:4).
“நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” என்று சொல்லும்போது, எகிப்தின் வாதைகளை எதற்காக தேவன் அங்கு குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ளும்படியாக, அந்த 10 வாதைகளையும் நான் உங்களுக்காக பின்வருமாறு எளிமையாக கொடுத்துள்ளேன். கர்த்தர் உங்களுக்கு காண்பிக்க விரும்பும் காரியங்களை நீங்கள் உங்கள் ஆவியில் வெளிப்பாடாக பெற்றுக்கொள்வீர்கள் என்றால், பிறகு எந்தவிதமான வியாதியின் அச்சுறுத்தலுக்கும் பயந்து வாழவோ அல்லது எந்தவொரு வியாதியும் உங்களுக்கு எதிராக வந்து உங்களை மேற்கொள்ளவோ கர்த்தர் விடவே மாட்டார். ஒருவேளை நீங்கள் இப்போது வியதிப்பட்டிருந்தால், இயேசுவின் நாமத்தில் சுகம் உங்கள் சரீரத்தில் வெளிப்படும் என்ற நிச்சயத்தோடு இருங்கள்.
கல்மழை, தவளைகள் போன்ற இயற்கையானவைகளை தேவன் பயன்படுத்தினாலும், இந்த வாதைகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட வாதைகள் என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு வாதையும் எப்போது உண்டாகும், எவ்வளவு பயங்கரமாய் இருக்கும், அவை எகிப்தியர் மீது மட்டும் தான் வரும் இஸ்ரவேலர் மீது வராது (நான்காவது வாதை முதற்கொண்டு) என்பதெல்லாம் நடப்பதற்கு முன்னரே அறிவிக்கப்படுவதின் மூலம் அந்த வாதைகள் அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்டவை என்பது விளங்குகிறது. ஏறக்குறைய 9 மாத காலம் நடைபெற்ற இந்த 10 வாதைகள், எகிப்து தேசத்தையும் எகிப்து ஜனங்களையும் பாழ்கடித்து, உயிர்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் மாபெரும் சேதத்தை ஏற்படுத்தியது (சங்கீதம் 78:44-51; 105:26-38). வாதைகளின் உச்சகட்டமாக தலைச்சன் பிள்ளைகளை சங்கரித்ததின் மூலம், ஒடுக்கினவனின் பிடியை தேவன் நொறுக்கி, அடிமைத்தனத்திலிருந்த அவருடைய மக்களை, ஆச்சரியப்படத்தக்க விதத்தில் ஆஸ்தியோடும் ஆரோக்கியத்தோடும் புறப்படப் பண்ணினார்.
“அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை” (சங்கீதம் 105:37).
இஸ்ரவேலின் உடன்படிக்கையின் தேவனை விசுவாசிக்கவும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும் மறுத்த மக்களுக்கு எதிராக இந்த வாதைகள் உண்டாயிற்று என்பதை நாம் கவனிக்க தவறக்கூடாது. தேவனை விசுவாசிக்க, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய மறுத்தவர்கள் தான் வாதிக்கப்பட்டார்கள். தேவ மனுஷனாகிய மோசே பேசின தேவனுடைய வார்த்தையை அவர்கள் உதாசினப்படுத்த எண்ணியவுடனே தேவகோபம் உடனடியாய் அவர்கள் மேல் இறங்கிற்று. ஆனால் தேவனை விசுவாசித்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய தெரிந்துகொண்ட ஒவ்வொருவரும் (எகிப்தியர் உட்பட) அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள் (யாத்திராகமம் 9:19-26).
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.