தாழ்மை நம் வாழ்வில் அவசியமா?மாதிரி
தாழ்மைக்கான சிறந்த உதாரணம்
ரோமானியர்களின் கல்லாப்பெட்டிகளை நிரப்பும்படி தன் காலத்து மக்களிடம் வரி வசூலித்தது மட்டுமல்லாமல், தன் பணப்பையை நிரப்பும்படி யூத மக்களது பணத்தையும் சுரண்டிக்கொண்டிருந்ததால், அவர்கள் எல்லோராலும் வெறுக்கப்பட்ட நபரான சகேயுவின் கதை உனக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். (லூக்கா 19:1-10)
இயேசு அவனை முதன்முதலில் சந்தித்தபோது, என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்: “இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.” (லூக்கா 19:5)
இந்தத் தருணம் மிகவும் ஆச்சரியமானது, ஏனென்றால் இச்சம்பவமானது, பிதா நம் மீது கொண்டுள்ள அன்பின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. பிதாவானவர், தம்முடைய அற்புதமான அன்பின் நிமித்தம் மனுக்குலத்தை நோக்கிப் பார்த்து, நம்மை இரட்சிக்கும்படி தம்முடைய ஒரேபேரான குமாரனை நம்மிடம் அனுப்பினார். இருப்பினும், தேவ குமாரனாகிய இயேசு, தமது கண்களை சகேயுவுக்கு நேராகத் திருப்பி அவனை ஏறெடுத்துப் பார்த்தார் என்பதை நாம் நினைக்கும்போது, மனுக்குலத்தின் மீது ஆண்டவர் வைத்திருக்கும் அன்புக்கு அளவே இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆண்டவர் பரலோகத்திலிருந்து நம்மைப் பார்க்கிறார் என்பதே அன்பின் மிகப்பெரிய ஒரு செயலாகும். ஆனால் இயேசு தம்முடைய சிருஷ்டிகளில் ஒரு நபரின் மீது தமது பார்வையைத் திருப்பும் நிலைக்குத் தன்னைத் தாழ்த்தினார் என்பது உண்மையிலேயே அவர் நம் மீது வைத்த மிகப்பெரிய இரக்கமாகும்.
சில சமயங்களில், நீயும் நானும் பெருமையினால் நிரம்பிவிடுகிறோம்: நாம் நமது சாதனைகளின் சிங்காசனத்தில் அமர்ந்துவிடுகிறோம் (அது சில சமயங்களில் அநீதியானது, அண்டை அயலகத்தாரை சுரண்டிய சகேயுவைப்போல)! ஆனாலும், எல்லையற்ற அன்புடன் நம்மை நேசிக்கும் இயேசு, தம் கண்களை நம் பக்கமாகத் திருப்பி, “நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்” என்று உள்ளான பாசத்துடன் சொல்ல வெட்கப்படவில்லை.
இயேசு நம்மை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கிறார், நம்மை அழைக்கிறார். ஆனால், நாம் அவரை நோக்கி இரண்டாவது அடி எடுத்து வைப்பது நம் கையில்தான் இருக்கிறது... பெருமை என்ற மரத்திலிருந்து நாம் இறங்கி வந்து, அவர் நம்முடன் தங்கி நம்மில் நிலைத்திருக்க இடமளிப்போம்.
நீ ஏற்கனவே இயேசுவை உன் வாழ்க்கையில் அழைத்திருக்கவில்லை என்றால், என்னுடன் சேர்ந்து ஜெபித்து அவரை உன் வாழ்விற்குள் அழைக்க விரும்புகிறாயா? “ஆண்டவரே, இன்று என் மீதான உமது அன்பிற்கு நன்றி. என் இருதயக் கதவையும் வாழ்க்கையையும் நான் உமக்குத் திறக்கிறேன். உமக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ எனக்கு உதவும். நான் என் முழு மனதுடன் உம்மோடு கூட தனிப்பட்ட உறவைப் பேண விரும்புகிறேன். இயேசுவே, இன்று உமது தாழ்மையினால் என்னைத் தொட்டதற்கு நன்றி. உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சில சமயங்களில், நீயும் நானும் பெருமையினால் நிரம்பிவிடுகிறோம். நாம் நமது சாதனைகளின் சிங்காசனத்தில் அமர்ந்துவிடுகிறோம், அப்படித்தானே? ‘தாழ்மையாக இருக்க விரும்புகிறேன்... ஆனால் தாழ்மையாக இருப்பது எப்படி? தாழ்மை இவ்வுலகில் பாராட்டப்படுவதில்லையே’ என்று நினைக்கிறாயா? தாழ்மை பலவீனம் அல்ல... அது உனக்கான பலம்! அது உன் வாழ்வில் உயர்வைக் கொண்டுவரும். அந்த உயர்வைப் பெற நீ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தியானத்தின் மூலம் அறிந்துகொள்வாயாக!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=humility