திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வுமாதிரி
வனாந்தரத்தில் திருமணம் - அலைந்து திரிபவர்கள்
பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை இஸ்ரவேலர்கள் சில நாட்களில் அடைந்திருக்க வேண்டும் (உபாகமம் 1:2). ஆனால் அவர்கள் தங்கள் அவிசுவாசத்தினாலும், முரட்டாட்டத்தினாலும் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தனர். எகிப்தை விட்டு வெளியேறிய அந்த தலைமுறை முற்றிலும் அழிந்தது. ஒரு புதிய தலைமுறையே அந்த தேசத்தை சுதந்தரித்தது.
1 கொரிந்தியர் 10:6ல், “அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.” என்று எழுதப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர் பாவம் செய்து, தேவனுக்கு கோபமூட்டினார்கள் – விக்கிரக ஆராதனை, வேசித்தனம், தேவனை பரீட்சை பார்த்தல் ( எண்ணாகமம் : 21:5,6) மற்றும் அதிருப்தியினால் முறுமுறுத்தார்கள்.
வனாந்தரத்தில் திருமணம்: இப்போது நம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது? நோக்கமற்ற திருமண வாழ்க்கையை நடத்துகிறோமா? வனாந்தரத்தில் சுற்றி அலைவது போல் தோன்றுகிறதா? இஸ்ரவேலர் செய்த அதே பாவங்களை நாமும் செய்து கொண்டு இருக்கிறோமா?
நம் திருமண உறவு எப்படி இருக்கிறது? விரக்தி உள்ளதா? ஏமாற்றங்கள் மற்றும் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் உள்ளதா? நம்மையும் (நம் துணையை அல்ல) நம் திருமணத்தையும் ஆராய்வோம்.
விக்கிரக ஆராதனை உள்ளதா?: நமது நேரத்தையும், பணத்தையும், கவனத்தையும் அதிகம் எடுத்துக் கொண்டு, தேவனோடும் நம் குடும்பத்தினரோடும் நேரத்தைச் செலவிடுவதைத் தடுத்து திசைதிருப்பும் எதுவும் விக்கிரக ஆராதனையே. நம்மில் சிலருக்கு நாம் வகிக்கும் பதவி, செய்யும் வேலை, வைத்திருக்கும் சொத்துக்கள் விக்கிரமாக மாறிவிடுகிறது. சிலருக்கு நம் பிள்ளைகளே விக்கிரகமாக மாறுகிறார்கள்! நாம் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதை சரிசெய்து, வனாந்தரத்திலிருந்து தப்பிபோம். தேவனை உண்மையோடு ஆராதிப்பவர்களாக இருக்கவே நாம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். (யோவான் 4:23, 24).
வேசித்தனம்/விபச்சாரம் உள்ளதா?: விபச்சாரம் என்பது விக்கிரக ஆராதனையின் ஒரு வடிவமாகும். (கொலோசெயர் 3:5) காம ஈர்ப்பூட்டும் பேச்சு, விபச்சாரம், ஆபாச காட்சிகளை(pornography) பார்ப்பதற்கு அடிமை, சுயபுணர்ச்சி போன்றவற்றிலிருந்து விலகி ஓடுங்கள். இந்த பாவம் எந்த கொடிய வைரஸை விட விரைவாக பரவக்கூடியது - இது சந்ததிகளை அழித்து விடும். நாம் பரிசுத்தத்திற்கென்றே அழைக்கப்பட்டிருக்கிறோம் – தேவனுக்காக பிரித்தெடுக்கப்பட்டவர்கள் (லேவியராகமம் 20: 7)) நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு, மனந்திரும்பி, வனாந்தரத்திலிருந்து தப்பிப்போம்.
நாம் தேவனை பரீட்சை பார்க்கிறோமா?: நம்மில் சிலர் தேவனை சோதிப்பதில் ஈடுபடுகிறோம் - " நான் ஏன் இத்தனை சிரமங்களைச் சந்திக்க வேண்டும் - அவிசுவாசிகளே நன்றாக இருப்பதாகத் தெரிகிறது! தேவன் ஏன் என் ஜெபங்களுக்கு பதிலளிக்கவில்லை? தேவன், என்னை புரிந்து கொள்ளாத ஒரு துணையை ஏன் கொடுத்தார்? உண்மையில், நான் ஜெபித்து அவருடைய சித்தத்தை நாடினேனே!" என்று அநேகர் புலம்புகிறோம்.
தேவனை சோதிப்பது என்பது அவருடைய மகத்துவத்தையும், நம் வாழ்வில் அவர் தரும் நன்மைகளையும் சோதிப்பதாகும். எல்லாவற்றிலும் தேவனின் நற்குணத்தை நம்பி, வனாந்தரத்திலிருந்து தப்பிப்போம். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் (சங்கீதம் 34:8).
நாம் முறுமுறுக்கிறோமா?: இஸ்ரவேலர் உணவு, தண்ணீர் பற்றாக்குறையினால் முறுமுறுத்தனர். நாம் எதைப் பற்றி முறுமுறுக்கிறோம்?
"என் கணவர் போதுமான அளவு சம்பாதிக்கவில்லை", "என்னை நேசிப்பதில்லை", "நாங்கள் எப்போதும் கடன் வாங்குகிறோம்","பிள்ளைகள் கீழ்ப்படிவதில்லை", "நாங்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்ததில்லை" என்றெல்லாம் முறுமுறுக்கிறோம். நம் துணையை குறித்து முறுமுறுத்து குறை சொல்வது, ஆண்டவருக்கு விரோதமாக முறுமுறுப்பதாக அர்த்தம்.
நன்றியுணர்வோடு வாழ்வது, நம் வாழ்க்கையை குறித்த கண்ணோட்டத்தையே மாற்றிவிடும். உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணிப்பார்த்து, எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுக்கு நன்றி செலுத்தி, வனாந்தரத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
(1 தெசலோனிக்கேயர் 5:18)
ஜெபம்: அன்பின் பிதாவே, எங்கள் பாவங்கள் மற்றும் கீழ்ப்படியாமையினால் எங்கள் திருமண வாழ்க்கை வனாந்தரத்தில் அலைவதைப் போல் உள்ளது என்று ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய பாவங்களிலிருந்து நான் மனந்திரும்புகிறேன். நான் என் வாழ்க்கையையும், எங்கள் திருமணத்தையும் உமது சித்தத்திற்கும், உமது வழிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். பரிசுத்த ஆவியானவரே, எனக்கு கீழ்ப்படிதலுள்ள இருதயத்தையும், எல்லாவற்றிலும் உம்மைப் பிரியப்படுத்த ஆழ்ந்த விருப்பத்தையும் எனக்குத் தந்தருளும். தேவ பக்தியுள்ள சந்ததியை உருவாக்க எங்களுக்கு உதவியருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
திருமணம் என்பது ஒரு வாழ்க்கை பயணத்தின் துவக்கம். ஆனால் அது ஒரு பயணத்தின் முடிவாக(destination) கருதும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதினிமித்தம் அந்த ஒரே நாளுக்காக ஆடம்பரமான செலவுகள் நடக்கின்றது. ஆனால் இந்த திருமண பயணத்தில் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை. திருமண வாழ்க்கையை எகிப்திலிருந்து கானானுக்கு இஸ்ரவேலர் மேற்கொண்ட பயணத்துடன் நாம் ஒப்பிடலாம். இந்த வாழ்க்கை பயணத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காண ஆண்டவர் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக SOURCEக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://sourceformarriage.org/