திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வுமாதிரி

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

5 ல் 4 நாள்

கானானில் திருமணம் – சுத்திகரிக்கப்பட்ட திருமணம்

யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
யோசுவா 3:5

மோசேக்குப் பிறகு யோசுவா பொறுப்பேற்றார். யோசுவா ஒரு வலிமைமிக்க யுத்தவீரனாக உயர்ந்து, மோசேயைப் போலவே, இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து கானான் தேசத்தைக் கைப்பற்ற வெற்றியுடன் வழிநடத்தினார். முதலில் அவர்கள் எரிகோ நகரைக் கைப்பற்றி, பின்னர் கானான் தேசத்தை ஒவ்வொரு நகரமாக கைப்பற்றினார்.

இஸ்ரவேலர் அனைவரும் யோர்தான் நதியைக் கடக்கத் தயாராக இருந்தபோது, யோசுவா அவர்களுக்கு ஒரே ஒரு கட்டளையைக் கொடுத்தார்- "நாளைக்கு உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள், கர்த்தர் உங்களிடையே அற்புதங்களைச் செய்வார்" - யோசுவா 3:5. இஸ்ரவேலருக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. எகிப்தில், தேவன் அவர்கள் சார்பாக கிரியை செய்தார், ஆனால் இப்போது அவர்கள் விசுவாசத்தில் ஒரு அடியெடுத்து வைத்து, தேசத்தை சுதந்தரிக்க யுத்தங்களில் ஈடுபட வேண்டியிருந்தது. அவர்கள் யுத்தத்திற்கு செய்ய வேண்டிய ஆயத்தம் - தங்களை பரிசுத்தப்படுத்தி சுத்திகரித்துக் கொள்வதே. சுத்திகரிப்பைத் தொடர்ந்து அற்புதங்கள் நடை பெறும் என்று யோசுவா விசுவாசத்தில் அறிக்கையிட்டார்.

சுத்திகரிக்கப்பட்ட திருமணம்: நாம் இரட்சிக்கப்பட்டவர்கள். இயேசு கிறிஸ்து நம் திருமணத்தையும் நாம் இழந்த எல்லாவற்றையும் மீட்டு எடுத்தார். ஆகையால் இப்போது நாம் யோர்தானை கடந்து விட்டோம் - இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு இயேசு கிறிஸ்து நம்மை வரவழைத்தார். ஆனால் தேவன் நம்மிடமிருந்து மேலும் ஒன்றை எதிர்பார்க்கிறார். திருமணத்தில் தேவனுடைய வல்லமையையும், அதிசயங்களையும் நாம் அனுபவிப்பதற்கு முன், அந்த திருமணத்தை சுத்திகரிக்கவே விரும்புகிறார்.

மகிழ்ச்சியான திருமணத்தை விட பரிசுத்தமான திருமணத்திலேயே தேவன் பிரியமாயிருக்கிறார்; செழிப்பான திருமணத்தை விட சுத்திகரிக்கப்பட்ட திருமணமே தேவனுக்கு பிரியமானது . நம் திருமணம் எல்லாவித அசுத்தம், தரக்குறைவான நடத்தை ஆகியவற்றிலிருந்து இயேசுவின் இரத்தத்தால் கழுவி, சுத்திகரிக்கப்பட வேண்டும்.

நம்மில் சிலர் பலவிதமான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கலாம் - கருத்தரிக்க இயலாமை; வேலையில் முன்னேற்றமின்மை; பிள்ளைகளின் கீழ்ப்படியாமை மற்றும் அவமரியாதையான நடத்தை. ஒருவேளை நாம் திருமணத்தில் தனிமையை உணரலாம். கடினமான அல்லது நம்பிக்கை துரோகம் செய்யும் துணையுடன் போராடிக் கொண்டிருக்கலாம். நீங்கள் பல வருடங்கள் ஜெபம் செய்தும் எதுவும் நடக்கவில்லை என்று கூட சொல்லலாம்.

தனிப்பட்ட வாழ்விலும், திருமணத்திலும் பாவம் நுழைவதற்கான கதவை நம்மில் யாராவது ஒருவர் திறந்திருக்க கூடும். நாம் அந்த பாவங்களை சிறுமைப்படுத்தி, அவற்றிற்கு வேறு பெயரிட்டு அழைக்கிறோம்.(விபசாரத்தை விபசாரம் என்று கூறாமல் அதை திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்று அழைக்கிறோம்). நாம் பாவத்தை சாதாரணமாக நடத்துவதினிமித்தம் சண்டை, அசுத்தம், ஒருவரையொருவர் குற்றம் சாட்டுதல் மற்றும் முறைகேடு போன்ற பல தேவையற்ற விஷயங்கள் நம் குடும்பத்துக்குள் நுழைய இடம் கொடுத்திருக்கலாம். பிரச்சனை என்னவென்றால், இவையெல்லாம் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து காணப்படும். பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களை ஆராய்ந்து, மறைவான காரியங்களை நமக்குக் காண்பிக்கும்படி ஜெபிக்கும் போது, அவர் அதை நிச்சயம் வெளிப்படுத்துவார்.

இன்றைக்கு தேவன் நம்மை சுத்திகரித்துக் கொள்ள அழைக்கிறார்.

1 தெசலோனிக்கேயர்:5:23. சுத்திகரிக்கப்படுவது என்றால் இயேசுவின் ரத்தத்தால் முற்றிலும் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கபடுவதாகும். நம் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் முழு சுத்திகரிப்பு!

நற்செய்தி என்னவென்றால், தேவனே, நம்மையும் நம் திருமணத்தையும் சுத்திகரிப்பார்; ஏனென்றால் அவர் யெகோவா மெக்காதீஸ் - நம்மை பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர். யாத்திராகமம் 31:13.

நாமும், நம் திருமணமும் சுத்திகரிக்கப்படும் போது நாம் பரிசுத்தமாக்கப் படுகிறோம். எல்லா அசுத்தம் நீங்கி நம் திருமணம் பரிசுத்தமாகிறது. நம் உறவும் பரிசுத்தமாகும். நம் பிள்ளைகளும் தேவபக்தியுள்ள சந்ததி என்னப்படுவார்கள். அப்போது நம் திருமணம் தேவ மகிமையை பிரதிபலிக்கும்.

ஜெபம்: பரிசுத்த தேவனே, எங்களை பரிசுத்ததிற்கென்று அழைத்தீர். சிந்தை, சொல், செயலால் செய்த பாவங்கள் அனைத்திற்கும் வருந்துகிறேன். என்னையும், என் திருமணத்தையும் தீட்டுபடுத்தும் பாவங்களுக்கு கதவைத் திறந்ததற்காக நான் வருந்துகிறேன். இயேசுவே, என் முழு ஆவி, ஆத்துமா, சரீரம் அனைத்தையும் பரிசுத்தமாக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய திருமணத்தை பரிசுத்தப்படுத்தி, உமது இரத்தத்தால் சுத்திகரிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். எனது திருமணம் தேவனையே மகிமைப்படுத்தி கனப்படுத்தட்டும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

திருமணம் என்பது ஒரு வாழ்க்கை பயணத்தின் துவக்கம். ஆனால் அது ஒரு பயணத்தின் முடிவாக(destination) கருதும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதினிமித்தம் அந்த ஒரே நாளுக்காக ஆடம்பரமான செலவுகள் நடக்கின்றது. ஆனால் இந்த திருமண பயணத்தில் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை. திருமண வாழ்க்கையை எகிப்திலிருந்து கானானுக்கு இஸ்ரவேலர் மேற்கொண்ட பயணத்துடன் நாம் ஒப்பிடலாம். இந்த வாழ்க்கை பயணத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காண ஆண்டவர் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக SOURCEக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://sourceformarriage.org/