அன்னாள்மாதிரி
குணநலன் 3 :விசுவாசமுள்ளவள்
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
1 சாமுவேல் 1:17,18
ஏலி ஆசீர்வதித்ததும் அதை ஏற்றுக் கொண்டு கர்த்தர் எனக்கு தயவு செய்வாராக என்று எழுந்து சென்று சாப்பிட்டாள் . அவளுடைய முகம் பின்பு துக்கமாய் இருக்கவில்லை.
மனுஷனுடைய முகம் கண்ணாடி போன்றது. நமக்கு நெருங்கியவர்கள் நம் முகத்தைப் பார்த்து மனதின் உண்மையான நிலமையை அறிந்து கொள்வார்கள்.
அன்னாளின் கண்ணீருடன் இருந்த முகம் இப்பொழுது துக்கம் இல்லாத முகமாக மாறினது எப்படி? விசுவாசமே அதற்கு காரணம். சிலர் தனக்கு கிடைக்கும் வரை அழுது கொண்டே இருப்பார்கள். ஆனால் தன்னுடைய சூழ்நிலை மாறாது இருக்கும்பொழுது, அதாவது தொடர்ந்து மலடியாய் இருந்தபோதும் அன்னாள் கவலை இல்லாதவளாய் இருந்தாள் .
இந்த விசுவாசம், அவள் தேவனுடைய சந்நிதியை தெரிந்தெடுத்ததன் நிமித்தமாகவே கிடைத்தது. தேவன் தனக்கு பதில் செய்வார் என்று விசுவாசித்தாள் . ஏலியினுடைய விசுவாசமுள்ள ஆசீர்வாதமான வார்த்தைகளும் ஊன்றுகோலாக அமைந்தது. அவள் ஜெபிக்காமல் அழுது கொண்டே இருந்திருப்பாளேயானால் அவள் துக்கம் மாறி இருக்கவே இருக்காது.
விசுவாசம் நம்மை பலப்படுத்தும், சோர்வை அகற்றும், கர்த்தருக்குள் நிலைத்திருக்க உதவி செய்யும்.
அடுத்த நாள் அன்னாள் குடும்பத்தினர் பிரயாணப்பட்டு வீட்டிற்கு சென்றார்கள். கர்த்தர் அன்னாளை நினைத்தருளினார்.
எதை நினைத்தருளினார்? அவள் பட்ட நிந்தைகள், அவமானங்கள், கண்ணீரின் ஜெபம், பொருத்தனை ஜெபம், பொறுமை, விசுவாசம் ஆகிய அனைத்தையும் நினைத்தருளினார். அன்னாள் கர்ப்பம் தரிக்கும்படி செய்தார். அவள் பொருத்தனை செய்து ஜெபித்தபடியே குழந்தையை பெற்றாள் . ஜெபத்திற்கு பதில் வந்தது. நிந்தை ஒழிந்தது.
இஸ்ரவேலை 40 வருஷம் நியாயம் விசாரித்த தீர்க்கதரிசியான சாமுவேலை பெற்றெடுக்கும் பாக்கியத்தை பெற்றாள். அவரே தன் தாய் பட்ட வேதனையும், ஜெபித்துக், விசுவாசித்து பெற்றுக்கொண்ட வகையையும் பதிவேற்றுகிறார்.ஆம்.1 சாமுவேலின் ஆசிரியர் தீர்க்கதரிசியான அன்னாளின் மகனான சாமுவேலே!.
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான் 5:4
விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
லூக்கா 1:45
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அன்னாள் என்பவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி. இவள் சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் உண்டு. இந்தக் குடும்பம் முழுவதும் வருஷந்தோறும் சிலோவிலே கர்த்தரை பணிந்து கொள்ளவும் பலியிடவும் போய் வருவார்கள். ஆகவே இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாகவும், காளைகளை பலியிடுவதனால் (1 சாமு 1:24) இவர்கள் ஐஸ்வர்யவான்கள் என்றும் விளங்குகிறது. கர்த்தரோ அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்லுகிறது(1 சாமு 1:5). ஆனால் அன்னாள், தன் மலட்டுத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையில் இருந்த விசாரத்தை அவள் எப்படி வெற்றியாக மாற்றினாள் என்பதை தியானிக்கலாம் . இன்று உங்களுக்கு இருக்கும் நிந்தை, அவமானம், தோல்வி விரக்திக்கு காரணம் என்ன? அவைகளை ஜெயிக்கும் வழி அன்னாளின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். சங்கீதம் 84:6. அதோடு கூட,அவள் கடந்து போன இச்சூழ்நிலையின் மூலமாக அவளுடைய குண நலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/