அன்னாள்மாதிரி

அன்னாள்

5 ல் 1 நாள்

குணநலன் 1 : துன்ப நாட்களில் தேவ சந்நிதியையே தெரிந்து கொண்டாள்

கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.

1 சாமுவேல் 1:6‭, ‬10‭-‬11

'துக்கம்,விசனம், சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள், மனம் கசந்து, மிகவும் அழுது, மனக்கலேசம் மிகுதியான விசாரம் உடையவள்'- இவ்வாறு 1சாமு 1:1-16 வசனங்கள் அன்னாள் அனுபவித்த வேதனைகளை பல்வேறு வார்த்தைகளால் விளக்குகிறது.

மலடியாயிருந்ததினிமித்தம் அவளுடைய சக்களத்தி கொடுத்த நிந்தையால் அவள் சாப்பிடாதிருக்கும்போது அவளின் கணவன் மிகுந்த அன்புடையவராய் அவளை தேற்ற முயன்றாலும் அவள் ஆறுதல் பெற முடியாமல் எந்த நபரிடமும் செல்லாமல் தேவ சந்நிதியையே தெரிந்து கொண்டு தன் இருதயத்தை ஊற்றி ஜெபித்தாள் .அவள் வெகு நேரம் விண்ணப்பம் பண்ணி தன் இருதயத்திலே பேசினாள்.அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது.

நம் வாழ்க்கையில் நேரிடும் வேதனை நிறைந்த நேரங்களில் நாம் ஆறுதலுக்காக தேடும் பொருள் எது? நபர் யார்? தேவனைத் தவிர எந்த ஒரு பொருளோ எந்த ஒரு நபரோ நம்மை ஆறுதல் படுத்தினாலும் அது நிரந்தரம் அல்ல. ஆனால் நம் பாரத்தை தேவனிடம் கொண்டு செல்லும்போது நிச்சயமாகவே ஜெபத்தை முடித்து எழுந்து வரும் பொழுது நமக்கு ஒரு இளைப்பாறுதல் உண்டு.

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

மத்தேயு 11:28

வருஷந்தோறும் அவள் அங்கு அழுது ஜெபித்தாலும், இந்த முறை 'எனக்கு குழந்தை வேண்டும்' என்று எண்ணாமல்,தன் கண்களை தன்னிடமிருந்து தேவனிடம் திருப்பினாள். ' எனக்கு ஒரு ஆண் பிள்ளையை கொடுத்தால் அதை தேவனுக்கு ஒப்புக் கொடுப்பேன்' என்று பொருத்தனை செய்தாள்.

அன்னாள், அப்போதிருந்த இஸ்ரவேலின் சூழ்நிலைகளை நன்கு புரிந்திருந்தாள் . ஆசாரியரான ஏலியின்

பின்மாற்றத்தையும்(1 சாமு 3:18) , ஏலியின் மகன்களின் பொல்லாத பாவங்களையும் (1 சாமு 2) தெரிந்தவளாய், இஸ்ரவேலை நடத்துவதற்கு ஒரு தீர்க்கதரிசி வேண்டும் என்ற தேவனின் தேவையை அறிந்ததினால், அவள் இவ்வாறு பொருத்தனை செய்து ஜெபித்திருக்க கூடும்.

நம் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் கடினமான நாட்களில் என்ன செய்வது என்று தெரிந்தெடுக்கும் ஆற்றல் நம்மையே சார்ந்தது. எப்போதுமே கூட வர முடியாத நண்பர்களையா?, அல்லது கொஞ்ச நேரம் சந்தோஷம் தரக்கூடிய போதை பொருட்களையா? அல்லது துக்கத்தை மறக்க அனுபவிக்கும் சிற்றின்பங்களையா? பாவங்களை?அல்லது உலக ஞானிகளையா?

இவை எல்லாவற்றையும் முயற்சி செய்தும் மீள முடியாதவர்கள் தற்கொலையிட்டு கொள்ளுகிறார்கள். தேவப் பிள்ளைகளுக்கோ, ஜெபம் என்ற ஒரு வழியை தேவன் கொடுத்திருக்கிறார்.

எல்லா சூழ்நிலைகளையும் நம்மை காப்பாற்ற வல்லமை உள்ள தேவனையே அண்டிக் கொள்ளும் போது, நம் சூழ்நிலைகளுக்கு தேவையான பதில் நிச்சயமாகவே அவரிடம் உண்டு. அன்னாளைப் போன்று அவரையே தேடுவோமாக!

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

அன்னாள்

அன்னாள் என்பவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி. இவள் சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் உண்டு. இந்தக் குடும்பம் முழுவதும் வருஷந்தோறும் சிலோவிலே கர்த்தரை பணிந்து கொள்ளவும் பலியிடவும் போய் வருவார்கள். ஆகவே இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாகவும், காளைகளை பலியிடுவதனால் (1 சாமு 1:24) இவர்கள் ஐஸ்வர்யவான்கள் என்றும் விளங்குகிறது. கர்த்தரோ அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்லுகிறது(1 சாமு 1:5). ஆனால் அன்னாள், தன் மலட்டுத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையில் இருந்த விசாரத்தை அவள் எப்படி வெற்றியாக மாற்றினாள் என்பதை தியானிக்கலாம் . இன்று உங்களுக்கு இருக்கும் நிந்தை, அவமானம், தோல்வி விரக்திக்கு காரணம் என்ன? அவைகளை ஜெயிக்கும் வழி அன்னாளின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். சங்கீதம் 84:6. அதோடு கூட,அவள் கடந்து போன இச்சூழ்நிலையின் மூலமாக அவளுடைய குண நலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/