அநித்தியத்தில் நித்தியத்தின் நிழல்மாதிரி
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி இந்தப் பொக்கிஸத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 2 கொரிந்தியர் 4: 7
அடிக்கடி உழன்று போகும் நிலையற்ற என்னில் உன்னத ஆவியின் செயல்பாடு என்னால் முடியாத ஒன்றை அவரால் முடியும் என்பதற்கு ஆதாரம் தேவன் எனக்குள் அருளிய ஆவிக்குரிய பொக்கிஸம். இருளில் வெளிச்சம் பிரகாசிப்பது போன்று இருளான என்னில் அந்த பிரகாசம் என்னுள் பிரகாசம் அளிக்கிறது. இப்படி என் இதயத்தில் விளக்கேற்றி கிறிஸ்து இயேசுவுக்குள் கடவுளுடைய மகிமையை காணும் அறிவை என்னுள் தந்துள்ளார்.எனது நல் மனசாட்சியை தூண்டிவிட்டு கிரியை செய்து செத்த கிரியைகளுக்கு விலகி நிற்கவும் செய்கின்ற உன்னத அனுபவமே இந்த பரம பொக்கிஸம். நீங்காத வெளிச்சம், என் வாழ்க்கைக்கு வெளிச்சம் இப்படி ஏற்றி வைக்கப்பட்ட ஆவிக்குரிய வெளிச்சமே என் வாழ்வின் பாதையெல்லாம் தீபம். இதைக் கற்றுக்கொள்ளாதவர்கள் பிசாசானவனின் இருட்டின் அறைக்குள் வாழ்கின்றனர். பெற்ற பொக்கிஸத்தை உடைந்து போகும் மண் பாண்டத்திலே கவனத்துடன் பராமரிக்கிறோம். அடிக்கடி சங்கடத்துக்குள்ளானாலும் மனமடிவதில்லை. சந்தேகம்தோன்றுவது போல் இருந்தாலும் சந்தோஸக் கேடுண்டாவதில்லை. சுற்றி குற்றம் சாட்டும் எதிரிகளே தெரிந்தாலும் ஆபத்துக்கு உதவும் நண்பர்களில்லாமலில்லை. காயப்படுத்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை. மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை என்ற விசுவாச அறிக்கையை நாங்கள் சுமந்திருப்பதாலே அவரே எங்களுக்கு ஜீவனும் பெலனுமாகிறார். சுவிசேசப் பிரகடனத்திலும் மரணமே நேர்வதாயிருந்தாலும் மற்றவர்களூக்கு அது ஜீவன் தருவதால் அதில் மேன்மை பாராட்டுகிறோம். இப்படிப்பட்ட நம்பிக்கையை ஆவிக்குரிய பொக்கிஸமாக எங்களுக்குள் பெற்றிருக்கிறோம். . விசுவாசித்தேன் பேசுகிறேன். விசுவாசிக்கிறவர் இன்னாரென்று அறிந்திருப்பதால் பேசுகிறேன். ஆண்டவர் இயேசுவைஉயிரோடெழுப்பிய தேவன் எங்களையும் சுவிசேசம் பெற்ற உங்களையும் உயிரோடே கூட எழுப்பி அவருடைய திரு சமூகத்தில் நிலை நிறுத்துவார். இந்த ஆண்டவருடைய கிருபை அதிக மக்களை கிருபைக்குள்ளாக கொண்டு வந்து சேர்க்கும். அவர்களும் கடவுளுக்கு மகிமை சேர்ப்பார்கள். மேற்கூறப்பட்ட பவுலின் அனுபவ வார்த்தைகள் நமது அனுபவமாகட்டும். ஆமென்.
கண்டதின் தாக்கம் காணாதலில் ஊக்கம் /ஏக்கம்.
காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் . 2 கொரிந்தியர் 4: 18
சரீரம் நாளுக்கு நாள் பெலன் குன்றி வலு விழந்து போகிறது. உள்ளான மனிதனோ நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுகிறது. இக்காலத்து பாடுகள் வருங்காலத்து நித்திய மகிமைக்கு ஒப்பிடப்படத்தக்கவைகள் அல்ல. நேரத்துக்கும் காலத்துக்கும் கட்டுப்பட்டுப்போன கண்களினால் காண்கிறவைகளுக்கல்ல , காணப்படாத இனிவரும் காரியங்களையே உன்னிப்பாகக் கவனித்து வாழ்கிறோம். இவ்வாழ்வு ஒரு கூடாரம் போன்றது. நாமெல்லாரும் கூடாரவாசிகள். வந்து போகும், நின்று நிலைக்காது, இவ்வாழ்வு நிரந்தரமல்ல. நம்முடைய குடியிருப்போ பரலோகம். இந்த பார்வை உயர்ந்த பார்வை, காணப்படாதவைகளை உற்றுப் பார்க்கும் உன்னத பார்வை. இதுவே விசுவாச கண்கள். பலவிதமான ஒடுக்குதலினால் மன அழுத்தம் கொண்ட இந்த வாழ்வில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழாமல் இவைகளில் நின்று ஒரு நாள் விடுதலைப் பெற்று அவ்வுலகம் தரும் பாக்கியத்தை தரித்துக்கொள்ளப் பிரயாசப்படுகிறோம். கடவுளது ஆவியானவராலே அனுக்கிரகம் பெற்று இந்த பரிபூரண மாற்றத்துக்கென காணப்படாதவைகளின் மேல் வாஞ்சித்திருக்கிறோம். இந்த விசுவாசத்தினாலே தைரியம் கொண்டு வாழ்கிறோம். பரம இல்லத்தையே நாடுகிறோம். தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம். கண்டதையல்ல இன்னும் வரவிருக்கும் ஆனந்த பாக்கியத்தை தேடி நிற்கிறோம். எப்படியாயினும் இப்பூமியின் வாழ்விலும் கடவுளுக்கு பிரியமானவைகளை மட்டும் செய்வதில் எங்கள் வாழ்க்கையின் அர்த்தமாக நோக்கமாகக் காண்கிறோம். ஒரு நாளிலே அவர் சமூகத்திலே தீர்ப்புக்கென்று நிற்போம். நன்மை செய்து நன்மையை அறுவடையாக்கிக் கொள்வோம். அனைவரும் தீர்ப்பு பெறுவோம். அவரவர் கிரியைக்கேற்றப்படி இத்தீர்ப்பு அமைந்திருக்கும். நம் கண் கண்ட இவ்வுலகத் தீர்ப்பு அல்ல. காணாத
கடவுளின் அவ்வுலகின் தீர்ப்பு. கவனமாக நம் வாழ்வை காத்துக்கொள்வோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அநித்தியமான உலகில் நமக்கு அனுமதிக்கப்படும் நல் அனுபவங்களை சுமப்பதால் நித்தியத்தின் சாயல் பெறுகிறோம். பெறுகிற அனுபவங்கள் நம் வாழ்வில் நெறிமுறை கற்றுத்தருகிறது. நடை பெறும் சம்பவங்கள் நீண்ட எதிர்பார்ப்பையும் நல் நம்பிக்கையும் அருளுகிறது. நம்மை நெறிப்படுத்தும் மறை நூல் எழுத்துக்கள் நன்மை தீமை அறிய நம்முள் அழுத்தம் தருகின்றது. நமது இதயத்துள் குடி கொள்ளும் ஆவியின் பிரமாணமே தீமையிலிருந்து நம்மை விடுவித்து நன்மை பக்கம் நிற்க பெலன் தருகிறது. அடிக்கடி மன உளைச்சலால் குலைந்து போகும் நம்பிக்கை கடவுள் நமக்குள் அருளும் தீபத்தால் ஒளியாய் நம்முள் அணையா விளக்காய் மாறுகிறது. அடுத்தவரின் விளக்கை ஏற்றவும் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நித்திய நோக்கத்தை பற்றி வாழ தேவ ஆவியானவர் பெலன் செய்கிறார். இந்த அனுபவமே நம்முள் வளரும் நித்தியத்தின் நிழல்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.