அநித்தியத்தில் நித்தியத்தின் நிழல்மாதிரி

அநித்தியத்தில் நித்தியத்தின் நிழல்

3 ல் 1 நாள்

அனுமதிக்கப்படும் அனுபவங்கள்

தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். 2 கொரிந்தியர் 1 : 4
ஆறுதல் பெறுபவர்கள் ஆறுதல் அளிப்பவராக மாறும் மாற்றம் கர்த்தர் அருளும் மாற்றம். துன்பப்படுத்தப்பட்டும் மடிந்து போகாதவர்களே பிறரது துன்பத்தை அறிந்து உதவமுன் வருவர். எனக்கு ஏன்? எதற்கு? இப்படியாயிற்று என கேட்பதல்ல, எனக்கு துக்க நாளிலே துன்ப நாளிலே உதவி செய்தவர் உங்களுக்கு உதவி செய்வாரென கூற ஆரம்பிப்பதே அனுமதிக்கப்பட்ட அனுபவங்களை நல் முறையில் ஏற்றுக்கொள்வதாகும். மற்றவர்களுடைய இரட்சிப்புக்காக நான் படும் கஸ்டமும், நான் பெறும் ஆறுதலும் எனக்கு கடவுள் அருளும் ஈவு. ஒருவர் கஸ்டத்தை ஒருவர் சுமந்து ஒருவர் ஆறுதலில் ஒருவர் பங்கேற்பதே அனுபவமாக்கப்படவேண்டிய ஒன்று. உபத்திரவம் அனுமதிக்கப்பட்டது எனது நலனுக்கே, அதுவே பகிர்ந்து அளிக்கப்படவேண்டிய ஊழியம் என்ற நம்பிக்கை மேலோங்கியிருக்கவேண்டும். நமது கஸ்டங்கள் நடுவில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னில் தேவனுக்குரிய வருத்தமாக இருக்கவேண்டும். சுய வருத்தமல்ல கடவுளுக்காக எனக்குள் ஏற்படும் ஆத்ம ஆதாயத்துக்காக நான் கொள்ளும் கரிசனையாக அது அமையும். இப்படி தினசரி அனுமதிக்கப்பட்ட சஞ்சலங்களை ஏற்றால் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் ஆளப்படுவோம்.மரணத்தினின்றே விடுதலை பெறுவோமென்றால் இந்த தற்கால துன்பம் அகன்று போகும் என்ற நம்பிக்கையும் நம்முள் ஏற்பட வேண்டும். ஜெபிப்பதின் மூலமாகவும் ஆறுதல் அளிப்பதின் மூலமாகவும் இந்த கூட்டு நம்பிக்கையும் பெற்றுக்கொள்வோம். தேற்றப்பட்டவர்களே தேற்றமுடியும். என் ஜனத்தை தேற்றுங்களென்ற ஆண்டவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிவோம். அவராலேயன்றி வேறொரு ஆறுதலும் தேறுதலுமில்லை. அனுமதிக்கப்பட்ட உபத்திரவம் நல்லது. அதிலிருந்து விடுதலையாக்கப்பட்டு உபத்திரப்படுகிறவர்களுக்கு உண்மையான அனுபவம் நிறைந்த கலந்துரையாடல் செய்து அவர்களை நம்மோடு அடையாளப்படுத்தி அனுபவத்தின் மேல் அனுபவம் அடைவோம். துன்பம், துக்கங்களை அணுகிதுன்ப துக்கத்திலுள்ள மற்றவர்களையும் அணுகும் கிறிஸ்தவ நம்பிக்கை இதுவே. இது உறவுகளைப் பெலப்படுத்தும். தேவ நோக்கத்தை நம்மில் நிறைவேற்றும். ஆமென்.

மன உளைச்சலும் மன்னிப்பும்
அன்றியும் ,நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள் மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன். 2 கொரிந்தியர் 2: 4
எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன். 2.கொரிந்தியர் 2: 10.
பொது வாழ்வில் உள்ளவர்கள் பிறரது வாழ்வில் தலையிடாமல் இருக்கமுடியாது தலையிட்டு செய்யும் காரியங்களில் மன நிலையில்மனவருத்தம் பெறுபவர் இருக்கலாம். மன வருத்தம் சீர்திருத்தத்துக்கு வழி வகுக்குமென்றால் அம்மனவருத்தம் அவசியமானதே. நல் மன வருத்தத்தை உண்டு பண்ணினால் அந்த வருத்தத்தை ஏற்படுத்திதான் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியதாயிற்றே என்ற மன உளச்சல் காணப்படும். ஒழுக்கங்கள், ஒழுங்கு முறைகள் அவசியத்தை உணரும்போது கண்டிப்புகள் அணுகு முறைமாற்றங்கள் வரத்தான் செய்யும். ஆனால் அதனால் உறவுகள் பாதிக்கப்படக்கூடாது, புரிந்து கொள்ளுதலில் தவறு செய்து விடக்கூடாது. அப்படி ஒருவேளை நல்போதிப்போ நல் உணர்வோ நன்மை ஏற்படுத்த காலம் தாழ்த்தும் போது உறவில் தற்காலப் பாதிப்பு ஏற்படலாம், உடனுக்குடன் அது சரி செய்யப்பட வேண்டும். அடுத்தவரது நன்மைக்குத் தானென அடுத்தவர் அறியாதிருக்கும் போது அவரிடம் மனம் விட்டு பேசி நெருக்கம் கொள்ள வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்கலாம். பிறரை வருத்தப்படுத்துவது நமது எண்ணமல்ல என்பதை அவர் அறிந்து கொள்ளும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும். மன்னிப்பும் கேட்கலாம். உறவுகளில் நன்மை விளையுமென்றால் விளங்கிகொள்ளாதவர்களையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். எந்தவிதத்திலும் உறவுகள் நடுவில் பிசாசானவன் புகுந்து நாம் பிரயாசப்படும் நன்மையின் இலக்கை குலைத்து போட அனுமதிக்கக்கூடாது. உறவுகள் காக்கப்பட வேண்டும். உறவுகள் இன்றி தேவ ராஜ்ஜியம் சாத்தியமில்லை. தேவனுடைய ராஜ்ஜியமே உறவுகளின் அடிப்படையில் தான். வருத்தப்படுத்துவது நோக்கமல்ல. பிறரில் நன்மை பிறக்க சில வருத்தங்கள் அனுமதிக்கப்பட்டால் அதை சரியான அணுகு முறையில் தாக்கம் பெற்று தாக்கம் கொடுத்து சீர் பொருந்தி கொண்டு வாழப்பழக வேண்டும். மாற்ற முடியாதவைகளை மாற்ற முடியாது என வாழ்வோரும் உண்டு. மாற்றத்துக்காக மன உளச்சலும் மன்னிப்பும் கொண்டு பிரயாசப்படுவாருமுண்டு.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

அநித்தியத்தில் நித்தியத்தின் நிழல்

அநித்தியமான உலகில் நமக்கு அனுமதிக்கப்படும் நல் அனுபவங்களை சுமப்பதால் நித்தியத்தின் சாயல் பெறுகிறோம். பெறுகிற அனுபவங்கள் நம் வாழ்வில் நெறிமுறை கற்றுத்தருகிறது. நடை பெறும் சம்பவங்கள் நீண்ட எதிர்பார்ப்பையும் நல் நம்பிக்கையும் அருளுகிறது. நம்மை நெறிப்படுத்தும் மறை நூல் எழுத்துக்கள் நன்மை தீமை அறிய நம்முள் அழுத்தம் தருகின்றது. நமது இதயத்துள் குடி கொள்ளும் ஆவியின் பிரமாணமே தீமையிலிருந்து நம்மை விடுவித்து நன்மை பக்கம் நிற்க பெலன் தருகிறது. அடிக்கடி மன உளைச்சலால் குலைந்து போகும் நம்பிக்கை கடவுள் நமக்குள் அருளும் தீபத்தால் ஒளியாய் நம்முள் அணையா விளக்காய் மாறுகிறது. அடுத்தவரின் விளக்கை ஏற்றவும் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நித்திய நோக்கத்தை பற்றி வாழ தேவ ஆவியானவர் பெலன் செய்கிறார். இந்த அனுபவமே நம்முள் வளரும் நித்தியத்தின் நிழல்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.