அநித்தியத்தில் நித்தியத்தின் நிழல்மாதிரி
இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் 2 கொரிந்தியர் 2:15
அன்றைய காலம் யுத்தத்தில் வெற்றி பெற்ற அரசர் தோற்று போன அரசரையும் அவரது வீரரையும் கைது செய்து ஊர்வலமாக அழைத்து செல்லும் சம்பவம். எதிரிஅரசனை முழங்கால் படியிட வைத்து அவர் மேல் ஏறி தனது குதிரையின் மேல் ஜெயமாக ஏறி அமர்ந்து தனது வீரர்களை வெற்றி பவனிக்காக அணி வகுத்து செல்கிறான். விலங்கிடப்பட்ட தோற்றுப் போன அரசரும் அவரது வீரரும் தண்டிக்கப்பட மரண அவஸ்தையோடு அந்தப்பவனியில் பின்னால் செல்கிறார்கள். அவர்கள் முன்னாலே தூபவர்க்கம் எடுத்து செல்லப்படுகிறது. முன் செல்லும் ஜெய வீரர்களுக்கு அது ஜெய வாசனையாக இருக்கிறது. பின்வரும் தோற்றுப்போன வீரர்களுக்கு அது மரண வாசனையாக தெரிகிறது. இந்த ஊர்வலத்தை கண் கொண்டு இந்த காட்சியை உற்று நோக்க வேண்டும். ஒரே சம்பவம் ஒரே இடம் ஒரே ஊர்வலம் இரண்டு விதமான உணர்வுகள் ஒன்று ஜெய தொனி மற்றொன்று மரண பயம்.
கடவுளால் கடவுளோடு கடவுளுக்காய் கடவுள் நடத்தும் வாழ்வில் அவர்பின்னாலே செல்லும் நமக்கு இந்த பிரயாணம் ஜெயமாக தோன்றும். அவரைப்பற்றி அறிகிற அறிவு சுகந்த வாசனையாக வெற்றிவாழ்க்கைக்கு நம்மை வழி நடத்துகிறது. நாமும் இந்த நற்செய்தியையே நுகர்ந்து அதை மற்றவருக்கும் நுகரவைத்து வெற்றி பெற்ற உயிர்த்தெழுந்த அரசரோடு வெற்றி பவனி செல்வோம். இழந்து போனவர்களுக்கோ, வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களுக்கோ, பின் மாற்றம் பெற்று பிசாசின் வழி நடந்து போனவர்களுக்கோ இவ்வாழ்வு கை கட்டப்பட்டு விடுதலையில்லாத மரண பயமுள்ள வாழ்வாக அமைகிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ இது தேவ பெலனாயிருக்கிறது. இச்செய்தியை வெற்றியின் செய்தியாக அறிமுகப்படுத்துகிற நமக்கு இது தேவன் தந்த வாய்ப்பாக இருக்கிறது. முன் செல்லும் ஜெய கிறிஸ்து அவர். பின் ஜெய தொனியோடு அவர் பின்னே செல்லுவோம். ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆமென்.
எழுத்து கொல்லும் ஆவியோ உயிர்ப்பிக்கும்
2 கொரிந்தியர் 3:6
நீங்களே நிருபங்கள் பிறரால் வாசிக்கப்பட வேண்டியவர்கள. புது உடன்படிக்கைக்கு சாட்சிகள். சுவிசேசம் அறிவிப்பால் உங்களுக்குள் ஏற்பட்ட இந்த அனுபவம் மகா மேன்மையானது. அழிந்து போகிற மையினால் அல்ல. கற்களின் மேல் அல்ல இந்த எழுத்துக்கள் உங்கள் இதயத்துக்குள் தேவ ஆவியானவர் எழுதி வைத்த அச்சார அடையாள அனுபவம். புது உடன்படிக்கையினால் விளைந்த விளைவு பிரமாணமும் சட்டமும் செய்ய முடியாததை புது உடன்படிக்கையான இயேசுகிறிஸ்துவின் சுவிசேசம். இதை செய்தது. இதனால் இயேசு கிறிஸ்துவினாலே தேவனுக்குள் உறுதி பெற்றோம். இந்த பெலன் கடவுளால் ஆயிற்று என்று நம்முடைய ஆவியினால் உணர்வு பெற்றோம். சட்டம் கையிலெடுத்த மோசேயின் முகமே மகிமையால் மூடப்பட்டதென்றால் அந்த அனுபவத்தைவிட ஆவிக்குரிய மகிமை நம்மை அதிக அனுபவத்துக்குள்ளாக நம்மை மறு உருவாக்கம் செய்தது. நியாயப்பிரமாண சட்டம் மரணத்தை பெற்று கொடுத்தது. ஜீவனின் ஆவியோ நம்மை இவை எல்லாவற்றிலும் நின்று நம்மை விடுவித்தது. நம்மை உணர வைக்கும் கண்டன குரல் கொடுக்கும் தண்டனை சுபாவம் உள்ள சட்டமே பழைய ஏற்பாட்டில் மேலெழுந்து நின்றதென்றால் புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கைக்குள் நாம் உயிர் வாழ்வு பெற்று நிற்கும் இந்த அனுபவம் எத்தனை மகத்துவ மகிமையானது. நீங்களே அந்த நிருபம். புதிய உடன்படிக்கையின் வார்ப்புகள். புதிய சாயல்கள் நீங்களே இரட்சிப்பை விளைவாகப் பெறும் புது ஜீவன்கள். முக்காடிடப்பட்டு அல்ல, மனம் புதிதானதினாலே மறு உருவாக்கம் பெற்றவர்கள். ஆண்டவரே என இயேசுகிறிஸ்துவை அழைக்க அனுபவம் தந்த பரிசுத்த ஆவியானவரே உங்களில் வெளியரங்கமாக இதை செய்கிறார். கிறிஸ்துவின் ஆவி எங்கு உண்டோ அங்கு விடுதலை உண்டு. ஆவி உயிர்ப்பிக்கிறது. சட்டத்தின்படி நாம் பாவிகள். இயேசுகிறிஸ்துவின் புது உடன்படிக்கையின்படி அவரே நம்முள் புது இதயம் தந்து நம்மிடத்தில் அவர் ஆவியை அருளி நம்மை நிருபங்களாக்கியிருக்கிறார். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அநித்தியமான உலகில் நமக்கு அனுமதிக்கப்படும் நல் அனுபவங்களை சுமப்பதால் நித்தியத்தின் சாயல் பெறுகிறோம். பெறுகிற அனுபவங்கள் நம் வாழ்வில் நெறிமுறை கற்றுத்தருகிறது. நடை பெறும் சம்பவங்கள் நீண்ட எதிர்பார்ப்பையும் நல் நம்பிக்கையும் அருளுகிறது. நம்மை நெறிப்படுத்தும் மறை நூல் எழுத்துக்கள் நன்மை தீமை அறிய நம்முள் அழுத்தம் தருகின்றது. நமது இதயத்துள் குடி கொள்ளும் ஆவியின் பிரமாணமே தீமையிலிருந்து நம்மை விடுவித்து நன்மை பக்கம் நிற்க பெலன் தருகிறது. அடிக்கடி மன உளைச்சலால் குலைந்து போகும் நம்பிக்கை கடவுள் நமக்குள் அருளும் தீபத்தால் ஒளியாய் நம்முள் அணையா விளக்காய் மாறுகிறது. அடுத்தவரின் விளக்கை ஏற்றவும் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நித்திய நோக்கத்தை பற்றி வாழ தேவ ஆவியானவர் பெலன் செய்கிறார். இந்த அனுபவமே நம்முள் வளரும் நித்தியத்தின் நிழல்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.