யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி
தன்னை அறிவதே பிதாவை அறிவதற்கும், காண்பதற்கும் இணையானது (14:7) என்று இயேசு அப்பொழுதுதான் சொல்லி முடித்தார். பிலிப்பு கேட்பது என்ன? ஓர் அற்புதமான “தேவ தரிசனமா?” இயேசு அவனுக்குப் பொறுமையோடு சொன்ன பதிலில் ஒரு சோகம் தொனிப்பது தெரிகிறதா? படித்துதான் பார்ப்போமே. 9-11 வசனங்களை இயேசு எப்படி சொல்லியிருப்பார் என்று உணர்ச்சி பொங்க வாசித்துப் பாருங்கள். இயேசுவின் ஏமாற்றம் புலப்பட்டதா? சீடர்கள் விசுவாசிக்க ஆணித்தரமான ஆதாரங்கள் அவர்களுக்குத் தேவை என்று இயேசு உணருகிறார். அவர் அற்புதங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துகிறவர் அல்ல. முன்பு ஒரு தடவை (மத்தேயு 11:2-6ல்) யோவான் ஸ்நானகனின் விசுவாசம் குலைந்தபொழுது அற்புதங்களைச் சுட்டிக்காட்டி அவனைப் பலப்படுத்தினார். இப்பொழுதும் சீடர்களின் விசுவாசம் குன்றினதால் தன்னுடைய கிரியைகள் (அற்புதங்கள்) நிமித்தமாவது விசுவாசிக்கும்படி அவர்களைத் தூண்டுகிறார்.
இனிய தங்கை, தம்பி! இயேசுவை விசுவாசிப்பதில் ஐயப்பாடுகள் உனக்கு ஏதேனுமுண்டா? பிலிப்புவைப்போல இயேசுவிடம் அவற்றைச் சொல்லிவிடு. தெளிவு பிறக்க ஜெபி. வேத ஆய்வுக் கூட்டங்களுக்குப் போ. அதில் உன் ஐயப்பாடுகளுக்கு விடை கிடைக்கும். அப்படி கூட்டங்கள் இல்லை என்றால், நடத்தும்படி உன் ஆயரிடம் கேட்டுக்கொள். .
ஜெபம்:
இயேசுவே, கருணைமிக்க குருவே, சில வேளைகளில் என் அவநம்பிக்கையால் உம்மைத் துக்கப்படுத்தி விடுகிறேன். உம்முடைய பொறுமைக்கு நன்றி. உம்மை விசுவாசிக்க ஆசிக்கிறேன். என் உள்ளத்தில் நம்பிக்கையை ஊற்றும்; உம் வழியாய் பிதாவைக் காண என் கண்களைத் திறந்தருளும்.
இயேசுவின் பதில்…….
குழந்தாய், ஐயப்பாடுகள் இயல்புதான். உன் சந்தேகங்களை எல்லாம் என்னிடம் சொல். என் உடலாகியத் திருச்சபையில் அங்கமாகு. அதின் உறவிலே நீ வளர்ச்சியடைவாய். நான் ஆவியாக அவர்கள் மத்தியில்தான் குடியிருக்கிறேன். மக்கள் முழுமையடைய அவர்களுக்குப் போதிப்பதும் நான்தான்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.
More
இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org