ஜீவனைப் பேசுதல்மாதிரி
வார்த்தையின்படி வாழும் வாழ்க்கை
சத்துரு எப்பொழுதும் நம்மிடத்தில் பொய்களை சொல்லி கொண்டிருப்பதால், நாம் அவனை பார்த்து வல்லமையையும், சத்தியத்தையும் உச்சரிக்க ஒரு முடிவெடுப்பது அவசியமாயிருக்கிறது! அலையலையாய் நமக்கு நேரே வரும் எதிர்மறையான வார்த்தைகள் மற்றும் எண்ணங்களையும் திருப்பி விடுவதற்கு நாம் செயல் திட்டங்களை வரையறுக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. நாம் ஜீவிப்பதற்கு வல்லமை நிறைந்த வார்த்தைகள் அவசியமாயிருக்கிறது. நம்முடைய நினைவுகளிலும், இதயங்களிலும் அந்த வார்த்தை பதியும் வரை நாம் அவைகளை திரும்ப திரும்ப உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டியதும் அவசியமாயிருக்கிறது.
என்னைப்பற்றின உண்மையான காரியம் என்னவென்றால் தேவன் என்னைக்குறித்து என்ன உரைக்கிறார் என்பதுதான்... நான் என்ன நினைக்கிறேன் என்பதோ, நான் எப்படியாக உணருகிறேன் என்பதோ, பிறர் என்னைக்குறித்து என்ன நினைக்கிறார்கள், பேசுகிறார்கள், மற்றும் செய்கிறார்கள் என்பதோ அல்ல. நிஜமல்லாதவைகளையும், பொய்யான நம்பிக்கைகளையும், நம்பி முடங்கிப்போவதன்மூலம், தேவனுடைய இனிமையான திட்டங்களை ஆயிரம் மைல் தொலைவினில் இழந்துவிடுகிறோம். அவருடைய வார்த்தையை படியுங்கள். உங்கள் விசுவாசம் உங்கள் இதயங்களில் பேசட்டும். அதையும் விட மேலாக, உங்கள் அவிசுவாசம் உங்களைவிட்டு நீங்கும்படி தேவனிடத்தில் கேளுங்கள்.
எதிர்மறையான சுயம் பேசுதலை முழுமையான விட்டு விடுவதற்கு நாம் அனைவரும் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டைச் செய்ய வேண்டும். எந்தவொரு விஷத்தன்மைகொண்ட கெட்ட பழக்கத்தையும் போல, இந்த பழக்கத்தையும் நிறுத்திவிட நீங்கள் முடிவெடுக்கலாம். இந்த பழக்கத்தை விட்டுவிடுவதற்கு சில காலங்கள் ஆகலாம், விடாமுயற்சி, மிகக்கவனம், மனவலிமை தேவைப்படலாம் ஏனென்றால் நம்மில் அநேகருக்கு இந்த பழக்கம் நன்கு வேரூன்றிப்போயிருக்கும். இது ஏறக்குறைய நமது இன்னொரு முகமாகவே இருக்கும். இந்த பழக்கத்திற்கு நீங்கள் சிறைப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்தீர்களேயானால், உங்களையும் உங்கள் நினைவுகளையும் நீங்களே இடைமறித்து, எப்படியாவது இதை முழுமையாக நிறுத்தி விட வேண்டும். நீங்கள் இந்த குணாதிசயத்தை கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதே இதிலிருந்து விடுபடுவதற்கு முக்கிய வழியாகும்.
நம் நினைவுகளையும் வார்த்தைகளையும் நாம் கட்டுப்படுத்தும்போது, நம்முடைய ஜீவனை திரும்ப பெறுகிறோம்! அனுதினமும் உங்கள் சுயத்துடன் பேச உறுதிமொழிகளின் பட்டியலை தயாரிக்கும்படி நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். வார்த்தைகளின்படி வாழ்வதற்கு, இந்த அன்றாடப்பயிற்சி நம் நினைவுகளையும் அதைத்தொடர்ந்து நம் வார்த்தைகளையும் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும். அன்றாடம் உறுதிமொழிகளை எழுதுவதன் மூலம் நம்முடைய ஜீவிதத்தை நோக்கி வல்லமையையும், சத்தியத்தையும் பேசி பயிற்சி செய்வதற்கு, இது ஒரு சிறந்த காலம்.
முதலாவது, உங்கள் நினைவை ஆதிக்கம் செலுத்தும் அல்லது நினைவுகளில் அடிக்கடி வரும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சுயம் பேசுதலுடன் தொடங்கவும். நீங்கள் நம்பும் எல்லா பொய்களையும் பட்டியலிடுங்கள். என்னென்ன எதிர்மறையான உண்மைகள் உங்கள் சிறந்த வாழ்க்கையை வாழவிடாமல் தடுத்து பின்னாக இழுக்கிறது? நம் நினைவுகள், சுயம் பேசுதல், அல்லது நாம் உச்சரிக்கும் வார்த்தைகள் தேவனின் சத்தியத்துடன் ஒத்துப்போகவில்லை என்றால், அவற்றை நாம் அடையாளம் காண வேண்டும்.
இரண்டாவதாக, இந்தமாதிரியான எதிர்மறை நினைவுகள் அல்லது பொய்களுக்கு மாற்று மருந்துகளாக வேத வசனங்களைக் கண்டறியவும். இந்த ஜீவனுள்ள சத்திய வசனங்கள் அந்த பொய்களிலிருந்தும், அடிமைத்தனங்களிலிருந்தும்/கெட்ட மாதிரிகளிலிருந்தும் உங்களை விடுவிக்கும். உங்கள் நினைவுகளையும் வார்த்தைகளையும் அவருடைய சத்தியத்திற்குள் அடக்கவும்! தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகும் சொற்களைத் தெரிந்து செயல்படவும்.
கடைசியாக, இந்த வசனங்களைப் படித்து நேர்மறையான அறிக்கைகளை தயார்செய்யுங்கள், அவைகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே உச்சரித்து உங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்பதிலே உடன்படுங்கள். இவைகள் உண்மைக்கு இணையான நேர்மறையான உறுதிமொழிகள். உங்கள் பட்டியலை தயார்செய்யுங்கள். தேவனுடைய மகிமையையும் சிறந்த முடிவுகளையும் உங்கள் வாழ்க்கையில் கொண்டு வர நீங்கள் என்ன உறுதிமொழிகளை உங்கள் வாயின் வார்த்தையால் உச்சரிக்கமுடியும்?
இந்த உறுதிமொழிகளை தினமும் பேசுவது உங்கள் நாவின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தத் தொடங்கவும் உதவும். உங்கள் வாழ்க்கையையும் அதன் சூழ்நிலைகளையும் பற்றி கடவுளுடைய வார்த்தையைத் தவிர வேறு எதையும் பேச உடன்படாதிருங்கள். வேதவசனங்களுடனும், உங்கள் சொந்த உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் வல்லமையுடனும் உங்கள் வாழ்க்கையின் மீது அதிகாரம் செலுத்துங்கள். இதுவே உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு மாதிரியான வார்த்தைகள்.
ஆழ்ந்து சிந்தியுங்கள்:
உங்கள் மனதில் தேவனுடைய வார்த்தைகளுடன் ஒத்துப்போகாத சில நினைவுகளும், நிஜமல்லாத செய்திகளும் என்னென்ன? ஜீவனை அளிக்கும் சத்திய வசனத்தினால் அவைகளை மாற்றுவதற்கு ஆழ்ந்து சிந்தித்து செயல்படுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நமது வார்த்தைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சக்தியை மதிப்பீடு செய்வோம்.
More