உயிருள்ள நம்பிக்கை: உயிர்தெழுதல் நாளுக்கு முன்மாதிரி
“ஏன் என்னை கைவிட்டீர்?”
இயேசு சிலுவையில் தொங்குவதை நீங்கள் நேரடியாக பார்ப்பதாக சற்று கற்பனை செய்துப் பாருங்கள். தன் மணிக்கட்டிலும் கணுக்காலிலும் உள்ள ஆணிகளில் தாங்கி தன்னை மேலே உந்தி மட்டுமே அவர் சுவாசிக்க முடியும்.
அந்த நாள் முடிவடையும் வேளையில், அவருக்கு எஞ்சி இருந்த கொஞ்ச பெலனையும் கொண்டு, மீண்டும் தன்னையே உந்தி உயர்த்தி, சத்தமாக, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்?” என்று சொல்கிறார்.
உண்மையாக சொல்லப்போனால், "நீர் எங்கே இருக்கிறீர்? ஏன் என்னை கைவிட்டீர்?" என்று தேவனிடம் நாம் கேட்டிருக்கும் சூழ்நிலைகள் இருந்திருக்கின்றன.
நாம் தனிமையாக, கவலையாக, அல்லது கைவிடப்பட்டவராக உணரும் போது என்ன செய்ய வேண்டும்?
இயேசு சிலுவையிலிருந்து பேசிய வார்த்தைகள் சங்கீதம் 22-ல் இடம்பெறுகின்றன. இது தாவீது ராஜா எழுதிய ஒரு தீர்க்கதரிசன புலம்பல். பல விதங்களில், இது இயேசுவைப் பற்றிய சங்கீதம், ஆனால் நாம் தனிமையாக உணரும்போது செய்ய வேண்டிய மூன்று காரியங்களை அது நமக்கு காட்டுகிறது:
1. உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி தேவனிடம் உண்மையாக இருங்கள்.
உண்மையாக இருக்கும் போது தான் உறவுகள் ஏற்படுகின்றன. தேவனால் கைவிடப்பட்டவராக நீங்கள் உணர்ந்தால், அவரிடம் அப்படியே சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை தேவனிடம் கேளுங்கள், அவரது பதில்களை கேட்க உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்துங்கள்.
2. எப்படியும் தேவனுக்கு மகிமை கொடுங்கள்.
தேவன் ஆராதனைக்குரியவர் என்ற உண்மையை நம் உணர்வுகள் மாற்றுவதில்லை. அனேக நேரங்களில், நாம் ஆராதனை மூலம் தான் நம் கவலைக்கான தீர்வை அறிகிறோம். தேவன் யார் என்பதில் நாம் கவனம் செலுத்தும் போது, நம் சூழ்நிலை மாறாவிட்டாலும் கண்ணோட்டம் மாறுகிறது.
3. தேவனுடைய வாக்குத்தத்தங்களை அவருக்கு நினைவுப் படுத்துங்கள்.
சங்கீதம் 22-ல் தாவீது தேவனிடம் இப்படியாக சொல்லுகிறார், “நீர் யார் என்று நான் அறிவேன். உம் நற்குணத்திலிருந்து மாறாதவராக நீர் இருப்பதால், இதற்கு முன் உம் மக்களை நீர் விடுவித்ததுப் போல, என்னை விடுவியும்.” தேவனுக்கு அவருடைய வாக்குத்தத்தங்களை நினைவுப்படுத்துவது ஒரு விசுவாசத்தின் செயல் மட்டும் அல்ல, அது தேவனுடைய நற்குணம் நம்பக்கூடியது என்று நாம் நினைவுக்கூறவும் உதவுகிறது.
இறுதியாக, இயேசு சிலுவையில் அறையப்படும் போது தான் அவருடைய நம்பிக்கைத் தன்மை மனித உருவெடுத்தது. நாம் தேவனுடன் நித்திய உறவை அனுபவிக்கவே இயேசு மனமுவந்து, தனிமையாக சிலுவையில் பாடுப்பட்டார். சங்கீதம் 22-ன் தீர்க்கதரிசனம் இயேசுவில் நிறைவேறுகிறது. அவர் தேவனிடமிருந்து பிரிவை சகித்துக் கொண்டதால், நாம் அதனைக் கடந்து செல்ல தேவையில்லை.
இயேசு உங்களுக்காக செய்த உச்சக்கட்ட தியாகத்தைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்: இயேசுவே, உம்மிடமிருந்து நித்திய காலமாக பிரிந்திருப்பதிலிருந்து என்னை மீட்டதற்காக நன்றி. நான் பிதாவிடமிருந்து பிரிந்திருக்கக் கூடாது என்பதற்காக நீர் அதனை சகித்துக்கொண்டீரே, நன்றி. இன்று, உம் தியாகத்தின் மகத்துவத்தை நான் அமர்ந்திருந்து சிந்திக்க எனக்கு உதவும், உமக்கு உகந்த மகிமையை உமக்கு கொடுக்க எனக்கு உதவும். நான் எப்படி உணர்ந்தாலும், நீர் மட்டுமே என் ஆராதனைக்கு தகுதி உடையவர், எனவே, இன்று, நான் உம்மை ஆராதிக்க தேர்ந்தெடுக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இருள் உங்களை சூழும் போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மூன்று நாட்களும், உயிர்த்தெழுதல் சம்பவத்தில் மூழ்கி, கைவிடப்பட்டவராக, தனிமையாக, மதிப்பற்றவராக நீங்கள் உணரும் போது, நம்பிக்கையை எப்படி பற்றிக் கொள்வது என்று கண்டறியுங்கள்.
More