வாழ்க்கையின் உக்கிராணத்துவம்மாதிரி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 ல் 4 நாள்

நல்ல மேலாளர்களின் ஆரோக்கியமான மனப்பான்மை 

சங்கீதம் 31:15 சொல்கிறபடி நம்முடைய காலங்கள் ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது. எனவே கடவுள் நம்மிடம் கொடுத்துள்ள ஒவ்வொரு நாளையும் நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.

“இன்று“ என்னப்படும் நாள் இருக்கு மட்டும் (எபிரேயர் 3:13) கடவுள் நமக்கு கொடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். இந்த கருத்தை “உக்கிராணத்துவம்” என்று அழைக்கிறோம்.

நாம் நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எபேசியர் 5:16 சொல்கிறது. நாம் ஞானத்தோடும் பக்தியோடும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, நன்மை செய்ய வேண்டும். அப்படி ஆர்வத்தோடும், நல்ல முறையிலும் நாம் செய்வதே, நேரத்தை நமதுடையதாக்க நாம் செலவிடும் பணமாகக் கருத முடியும். இப்படிச் செய்தால் நமது நேரத்தின் சிறந்த நிர்வாகிகளாக நாம் மாறி விடுவோம்.

கீழ்க்கண்ட விதத்தில் நேரத்தை நாம் முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் – முதலாவது ஆண்டவர், மற்றவர்களும் (வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், குடும்பம், நண்பர்கள்) நானும் இரண்டாவது. கடவுள் ஏற்படுத்திக் கொடுத்துள்ள முன்னுரிமையின்படி நாம் நமது நேரத்தை கையாண்டால், நம்முடைய வாழ்க்கை மிகுந்த திருப்தியுடையதாக விளங்கும். ஏனெனில், நாம் மிகவும் முக்கியமான நமது உறவுகள் மற்றும் நாம் யாரை நேசித்து கவனிக்கிறோமோ அவர்களின் மேல் முழு கவனம் செலுத்துகிறோம்.

கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனித்துவத்துடன் உருவாக்கியிருக்கிறார். இயற்கையான நமது தாலந்துகளும், நமது ஆவிக்குரிய வரங்களும் கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே இவைகளை பயன்படுத்தி எவ்விதங்களில் கடவுளுடைய இராஜ்ஜியத்தை கட்டி எழுப்ப முடியும் என்ற வழிகளை நாம் தேட வேண்டும். 

ஆனால் இதில் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் கடவுள் நம்மை எப்படியாக உருவாக்கியிருக்கிறார் என்பதையே அநேகர் இன்னும் கண்டு பிடிக்காது இருக்கிறார்கள். திறமைகளும், தாலந்துகளும் புதைந்து கிடக்கின்றன, ஆனால் பெரும்பாலும் அவைகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதில்லை. அல்லது அவைகள் சிறப்பானவைகள் என்று கூட நாம் சிந்திக்காமல் ஒதுக்கி வைக்கிறோம். கடவுள் நம்மிடம் கொடுத்துள்ள ஆற்றல் வளங்களை அநேகர் இன்னும் பயன்படுத்தத் துவங்கவேயில்லை. அது ஒரு தவறான நிர்வாகியைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் ஒரு சிறந்த நிர்வாகி, தன்னிடம் எது கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நன்கு அறிந்து, அவற்றை சிறப்பாக பயன்படுத்துகிறான். 

இயற்கையாக தாலந்துகளுடன் நாம் பிறந்திருக்கிறோம் என்பது மட்டுமல்லாமல், நமக்கு ஆவிக்குரிய வரங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. கடவுளுடைய இராஜ்ய விரிவாக்கப் பணிக்காக பரிசுத்த ஆவியானவரால் இந்த ஆவிக்குரிய வரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. மனிதர்கள் பிறக்கும் போதே பல்வேறு தாலந்துகளுடன் பிறக்கின்றனர், ஆனால் ஆவிக்குரிய வரங்கள் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றன. கடவுள் கொடுக்கும் இந்த ஆவிக்குரிய வரங்களை வாஞ்சித்து பெற்றுக் கொள்கிறவர்கள் இவ்வுலகில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலே உள்ளனர் என்ற உண்மையும் கவலையளிக்கிறது. 

சாத்தானுடைய மிகப்பெரிய தந்திர உபாயங்களில் மிக முக்கியமானது, நம்மிடம் உள்ள பொருட்கள் மூலமாகத்தான் நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது என்ற சிந்தையை தோற்றுவிக்கிறான். அவனுடைய இந்த ஏமாற்றுத்தனத்தினால், பொருட்களே பிரதானம் என்ற ஒரு தங்கக் கன்றுக்குட்டி சிலையை மனிதர்களின் வாழ்வில் உருவாக்கி வைத்துள்ளான். ஆனால் பணத்தைக் கொண்டு ஒருநாளும் மகிழ்ச்சியை நாம் வாங்க முடியாது என்பதை மறந்து போகக்கூடாது. பணம் நித்திய வாழ்வையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் நமக்கு ஒருநாளும் கொடுக்க இயலாது.

நம்முடைய ஆஸ்திகள் எல்லாமே கடவுளுக்கு உரியது. நம்முடைய பணம் நம்முடையதல்ல, தனது பணத்தை கடவுள் நம்மிடம் கொடுத்து வைத்துள்ளார். எனவே மிகுந்த ஜாக்கிரதையுடனும், ஞானத்துடனும் நித்தியத்துக்கான முதலீடுகளை செய்ய வேண்டும். நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து ஒரு பகுதியை நாம் கடவுளிடமே திருப்பிக் கொடுப்பதின் மூலம் கடவுளே எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர் என்பதை நாம் அங்கிகரிக்கிறோம்.

மேற்கோள் : “உன்னுடைய நேரம், தாலந்து மற்றும் ஆஸ்தியை நித்தியத்துக்காக முதலீடு செய்யும் போது, உன்னுடைய முதலீடுகளுக்கு ஏற்ற தெய்வீக வருமானம் நிச்சயம் கிடைக்கும்” – டோனி எவான்ஸ்.

ஜெபம் : ஆண்டவரே, என்னிடம் நீர் ஒப்புவித்துள்ள நேரம், தாலந்து மற்றும் ஆஸ்திகளுக்கு ஏற்ற, ஒரு நல்ல நிர்வாகியாக நான் செயல்பட எனக்கு உதவி புரியும். ஆமென்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம். இதில் பணமும் அடங்கும். இந்த வாழ்க்கையும் நம்மிடம் உள்ள அனைத்தும் நமக்கு சொந்தமானவை அல்ல, அவை கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை, அவைகளைக் குறித்த கணக்கை நாம் கடவுளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த 7 நாட்கள் தியானத் திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இதுவே வாழ்க்கையின் உக்கிராணத்துவம்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய 
http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.