ரோமர் 9

9
இஸ்ரயேலைப் பற்றிய பவுலின் துக்கம்
1இப்போது நான் சொல்வது பொய்யல்ல, என் மனசாட்சியும் பரிசுத்த ஆவிக்குள்ளாக என்னோடு சேர்ந்து எனக்கு சாட்சி பகருகிறது. கிறிஸ்துவுக்குள் இணைந்திருப்பதால் நான் சொல்லும் உண்மை என்னவெனில், 2என் இருதயத்தில் ஆழ்ந்த சோகமும் நீங்காத மனவேதனையும் உள்ளன. 3என்னுடைய பிறப்பினாலே எனக்குச் சொந்த இனத்தவராகவும், என்னுடைய சொந்த சகோதர சகோதரிகளாகவும் இருக்கும் யூத மக்கள் காப்பாற்றப்படுவதானது, நான் கிறிஸ்துவைவிட்டு சபிக்கப்பட்டு ஒதுக்கப்படுவதால் நிறைவேற்றப்படுமானால், அதற்கும் நான் தயார். 4இஸ்ரயேலர்#9:4 இஸ்ரயேலர் – பழைய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்தவரான, இஸ்ரயேல் என்ற பெயர் மாற்றம் பெற்ற யாக்கோபு எனப்பட்டவரது சந்ததியினர் அவர்களே என்பது இதன் பொருள். எனப்பட்ட இவர்களே, இறைவனின் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் என்ற உரிமை பெற்றவர்கள். இறைவனின் மகிமை பிரசன்னம், உடன்படிக்கைகள் என்பவை இவர்களுக்கே கிடைத்தன. மோசேயின் நீதிச்சட்டம், ஆலய வழிபாடுகள், இறைவாக்குறுதிகள் என்பவற்றையும் இவர்களே பெற்றார்கள். 5முற்பிதாக்களும் இவர்களுடையவர்களே, அந்த முற்பிதாக்களின் மனித சந்ததியிலேயே கிறிஸ்துவும் வந்தார். கிறிஸ்துவே அனைத்துக்கும் மேலான இறைவன், என்றென்றும் துதிக்கப்படுபவர். ஆமென்.
இறைவனுடைய தெரிந்தெடுத்தல்
6இதனால்#9:6 இதனால் – இஸ்ரயேலர் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் என்றும் மொழிபெயர்க்கலாம் இறைவனுடைய வார்த்தையிலுள்ள வாக்குறுதிகள் நிறைவேறாமல் போயின என்ற முடிவுக்கு வரலாகாது. காரணம், முற்பிதாவாகிய இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே உண்மையில் இஸ்ரயேலர்கள் அல்ல. 7அத்தோடு ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் அனைவருமே அவருடைய உண்மையான பிள்ளைகள் அல்ல. ஏனெனில், “ஈசாக்கின் ஊடாக வருவோரே உனது சந்ததி”#9:7 ஆதி. 21:12 என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது. 8எனவே ஆபிரகாமின் மனித சந்ததியில் பிறக்கின்றவர்கள் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல, மாறாக இறைவனின் வாக்குறுதியின்படி உருவானோரே ஆபிரகாமுடைய சந்ததியென எண்ணப்படுகிறார்கள். 9ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பி வருவேன். அப்போது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்”#9:9 ஆதி. 18:10,14 என்றல்லவா வாக்குறுதி சொல்லப்பட்டது.
10அதுமட்டுமல்ல, நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்ற ஒரே மனிதன் மூலமாக ரெபேக்காள் இரு பிள்ளைகளைக் கர்ப்பம் தரித்தாள். 11பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, அதாவது அவர்கள் நன்மை தீமை ஒன்றும் செய்வதற்கு முன்பே அவ்விருவரில் ஒருவரை இறைவன் தெரிவு செய்தார். இறைவன் எந்த நோக்கத்திற்காக தெரிவு செய்தாரோ அந்த நோக்கத்தை எந்த மனிதனதும் நல்ல செயல்களினால் நிறைவேற்றாமல், இறைவனின் அழைப்பினாலே நிறைவேற்றும்படியாக, 12“மூத்தவன் இளையவனுக்குப் பணி செய்வான்”#9:12 ஆதி. 25:23 என்று ரெபேக்காளுக்குச் சொல்லப்பட்டது. 13அதேபோல், “நான் யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தேன்”#9:13 மல். 1:2,3 என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
14ஆகவே நாம் என்ன சொல்லுவோம்? இறைவன் அநீதியுள்ளவரா? ஒருபோதும் இல்லை. 15ஏனெனில் இறைவன் மோசேயிடம்,
“நான் யார்மேல் இரக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது இரக்கமாயிருப்பேன்.
நான் யார்மேல் மன உருக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது மன உருக்கமாயிருப்பேன்”#9:15 யாத். 33:19
என்றார்.
16ஆகவே, ஒருவர் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வது, மனித விருப்பத்திலோ முயற்சியிலோ அல்ல, இரக்கமுள்ள இறைவனிலேயே தங்கியிருக்கிறது. 17ஏனெனில் இறைவன் பார்வோனிடம், “என்னுடைய வல்லமையை உன்னில் காண்பித்து, பூமியெங்கும் என்னுடைய பெயரை பறைசாற்றும் நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன்”#9:17 யாத். 9:16 என்று சொன்னதை வேதவசனம் கூறுகிறது. 18எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ, அவனுக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க விரும்புகிறாரோ, அவனைக் கடினமாக்குகிறார்.
19உங்களில் ஒருவன் என்னிடம், “அப்படியானால் இறைவன் ஏன் இன்னும் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறார்? இறைவனுடைய திட்டத்தை எதிர்க்க யாரால் முடியும்?” என்று கேட்கலாம். 20அப்படியானால் மனிதனே, இறைவனை எதிர்த்துப் பேசுவதற்கு நீ யார்? உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவனிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினாய்?”#9:20 ஏசா. 29:16; 45:9 என்று கேட்கலாமா? 21ஒரே களிமண்ணிலிருந்து ஒரு பாத்திரத்தை உயர்ந்த நோக்கத்திற்காகவும், மற்றொன்றை சாதாரண நோக்கத்திற்காகவும் உருவாக்குவதற்கு பாத்திரத்தை வனைபவனுக்கு உரிமை இல்லையா?
22அழிக்கப்படுவதற்கு தயார் செய்யப்பட்ட, அதாவது இறைவனின் கோபத்தை அனுபவிக்க தகுதி உடையவர்களை இறைவன் அதிக பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இறைவன் தமது கோபத்தைக் காட்டவும் தமது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பியதால் இப்படிச் செய்திருக்கலாம் அல்லவா? 23அத்துடன் இறைவன் முன்பே தன் மகிமைக்கென ஆயத்தம் செய்த மக்களுக்கு, அதாவது அவர் இரக்கம் செலுத்த விரும்புகின்ற மக்களுக்கு, தன் பெருநிறைவை வெளிப்படுத்தவும் இப்படிச் செய்திருக்கலாம் அல்லவா? 24நாமும்கூட யூதர்களிலிருந்து மாத்திரம் அல்ல, யூதரல்லாதவர்களில் இருந்தும் இப்படியாக அழைக்கப்பட்டவர்களாய் இருக்கின்றோம் அல்லவா? 25இதைப்பற்றியே ஓசியாவின் புத்தகத்திலே,
“நான் என்னுடைய மக்கள் அல்லாதவர்களை ‘என்னுடைய மக்கள்’ என்றும்;
அன்பில்லாத ஒருத்தியை ‘எனக்கு அன்பானவள்’ என்றும் அழைப்பேன்”#9:25 ஓசி. 2:23
என்று எழுதப்பட்டுள்ளது. 26மேலும்,
“ ‘நீங்கள் என்னுடைய மக்கள் அல்ல’ என்று எந்த இடத்தில் சொல்லப்பட்டதோ, அதே இடத்தில்,
அவர்கள் ‘வாழும் இறைவனின் பிள்ளைகள்’ என அழைக்கப்படுவார்கள்”#9:26 ஓசி. 1:10
என்றும் எழுதப்பட்டுள்ளது.
27இறைவாக்கினன் ஏசாயாவும் இஸ்ரயேலரைக் குறித்து,
“இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை கடற்கரையின் மணலைப் போல் இருந்தாலும்,
எஞ்சியுள்ள சிறு குழுவினர் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள்.
28கர்த்தர் பூமியின் மேல் தண்டனையை
தீவிரமாகவும் பூரணமாகவும் நிறைவேற்றுவார்.”#9:28 ஏசா. 10:22,23
29ஏசாயா மீண்டும்,
“எல்லாம் வல்ல கர்த்தர்
நமக்கு ஒரு சந்ததியை விட்டுவைக்காதிருந்தால்,
நாங்கள் சோதோமைப் போலும் கொமோராவைப் போலும் ஆகியிருப்போம்”#9:29 ஏசா. 1:9முற்றாக அழிந்திருப்போம் என்பது இதன் பொருள்.
என்று உரைத்திருக்கிறார்.
இஸ்ரயேலின் அவிசுவாசம்
30அப்படியானால் நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் அதைக் கண்டு அடைந்தார்கள். அது விசுவாசத்தின் மூலமாக வரும் நீதியே. 31ஆனால் நீதியை அடையும்படி நீதிச்சட்டத்தைக் கடைப்பிடித்த இஸ்ரயேலரோ, முயற்சித்தும் அதை அடையவில்லை. 32ஏன்? அவர்கள் அதனை விசுவாசத்தின் மூலமாகத் தேடாமல், நல்ல செயல்களினால் கிடைக்கும் என தேடி தடுக்கல்லில் தடுக்கி விழுந்தார்கள். 33இதைப்பற்றியே இப்படி எழுதப்பட்டுள்ளது:
“இதோ நான் சீயோனிலே இடறுவதற்கான ஒரு கல்லையும்
தவறுவதற்கான ஒரு கற்பாறையையும் வைக்கிறேன்.
அவரில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கத்துக்குள்ளாவதில்லை.”#9:33 ஏசா. 8:14; 28:16

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ரோமர் 9: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

ரோமர் 9 க்கான வீடியோ