ரோமர் 8

8
ஆவியானவரின் வழியாக வாழ்வு
1ஆகவே, இப்போது கிறிஸ்து இயேசுவுடன் இணைந்து இருக்கின்றவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை. 2நீங்கள் கிறிஸ்து இயேசுவுடன் இணைந்து வாழ்வளிக்கும் பரிசுத்த ஆவியானவரின் சட்டத்தினால் பாவம் மற்றும் மரணம் என்னும் சட்டத்தின் அதிகாரத்தில் இருந்து விடுதலை அடைந்துள்ளீர்கள். 3பாவ மனித இயல்பினால் பலவீனமுற்ற நீதிச்சட்டத்தினால் செய்ய முடியாததை இறைவன் செய்து முடித்தார். எப்படியெனில் பாவத்தின் தண்டனையை நீக்குகின்ற பலியாக தன் சொந்த மகனை பாவ மனித இயல்புள்ள மனித சாயலில் அனுப்பியதன் ஊடாக பாவ மனித இயல்பிலுள்ள பாவத்திற்கு தண்டனைத்தீர்ப்பை வழங்கிவிட்டார். 4பாவ மனித இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழியில் வாழும் எம்மில் நீதிச்சட்டத்திற்கு ஏற்ற நீதி நிறைவேற்றப்படவே இப்படிச் செய்தார்.
5பாவ மனித இயல்பின்படி வாழ்கின்றவர்கள், தங்கள் மனதை பாவ மனித இயல்புக்கு உரியவற்றில் பதித்திருக்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியின்படி வாழ்கின்றவர்களோ ஆவியின் காரியங்களில் தங்கள் மனதைப் பதித்திருக்கிறார்கள். 6பாவ மனித இயல்பில் மனதைப் பதித்தால் விளைவது மரணம், ஆவியில் மனதை பதித்தாலோ விளைவது வாழ்வும் சமாதானமும் ஆகும். 7பாவ மனித இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனம் இறைவனுடன் பகைமை கொண்டுள்ளது. அது இறைவனின் சட்டத்திற்கு அடங்கி நடப்பதில்லை, அப்படி நடக்கவும் இயலாதிருக்கிறது. 8இவ்வாறு பாவ மனித இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றவர்களால் இறைவனைப் பிரியப்படுத்த முடியாது.
9ஆனால் இறைவனின் ஆவியானவர் உங்களில் குடியிருப்பது உண்மையெனில், நீங்கள் பாவ மனித இயல்புக்கு கட்டுப்பட்டிராமல் ஆவியானவரின்#8:9 ஆவியானவரின் – கிரேக்க மொழியில் ஆவி என்றுள்ளது கட்டுப்பாட்டிலே இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவனோ கிறிஸ்துவுக்கு உரியவனே அல்ல. 10கிறிஸ்து உங்களில் இருந்தால், உங்கள் உடல் பாவத்தின் காரணமாக இறந்திருந்தாலும், ஆவியோ நீதியின் காரணமாக உயிர் பெற்றதாயிருக்கும். 11இயேசுவை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவனுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து எழுப்பிய அவர், உங்களில் குடிகொண்டிருக்கும் தமது பரிசுத்த ஆவியானவர் மூலமாய் உங்கள் மரணத்துக்குரிய சரீரத்துக்கு உயிர் கொடுப்பார்.
12ஆகையால் பிரியமானவர்களே நாம் கடனாளிகளே, ஆனால் நம்முடைய பாவ மனித இயல்புக்கு#8:12 பாவ மனித இயல்புக்கு – மாம்சம் என்ற அர்த்தத்தைக் கொண்ட இச்சொல்லுக்கு கிரேக்க மொழியில் ஒருவரின் தவறான ஆசைகள் என்பது பொருள். கட்டுப்பட்டு வாழும்படியாக அந்த பாவ மனித இயல்பிற்குக் கடனாளிகள் அல்ல. 13ஏனெனில் பாவ மனித இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் இறந்து போவீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு உங்கள் உடலின் பாவ மனித செயல்களை முற்றாக நிறுத்தி கொன்றொழித்தால் வாழ்வீர்கள்.
14ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுகின்றவர்களே இறைவனுக்கு உரிய பிள்ளைகளாக இருக்கின்றார்கள். 15நீங்களோ உங்களை திரும்பவும் பயமடையச் செய்யும் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், உங்களை தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கின்ற ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள். அவராலே, “அப்பா, பிதாவே” என்று சத்தமிட்டுக் கூப்பிடுகின்றோம். 16நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்று பரிசுத்த ஆவியானவரே நம்முடைய ஆவியோடு சாட்சி அளிக்கின்றார். 17நாம் இப்போது இறைவனுடைய பிள்ளைகளாய் இருப்பதனால் சொத்துரிமை உடையவர்களாயும் இருக்கின்றோம். நாம் இறைவனுடைய சொத்துக்கு உரிமை உடையவர்களாயும் கிறிஸ்துவோடு சக சொத்துரிமைக்காரர்களாயும் இருந்து, அவருடைய பாடுகளில் பங்குகொள்கின்றபடியால் நாம் அவருடைய மகிமையிலும் பங்குகொள்வோம்.
வரப்போகும் மகிமை
18தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள், நம்மில் வெளிப்படப் போகின்ற மகிமையோடு ஒப்பிடத்தக்கவையல்ல என்றே நான் எண்ணுகிறேன். 19இறைவனுடைய பிள்ளைகள் வெளிப்படுத்தப்படுவதைக் காண, படைப்பானது ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றது. 20ஏனென்றால், படைப்பானது பயனற்ற விரக்தி நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அது தனது சொந்த தெரிவினால் அப்படி ஆகவில்லை, அதை அந்த நிலைக்கு ஆளாக்கியவரினால் அவ்வாறு ஆயிற்று. 21படைப்பானது சிதைவுக்கு அடிமைப்பட்ட நிலையிலிருந்து விடுதலையடைந்து, இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திர நிலையை அடையும் என்ற முன் எதிர்பார்ப்பினால் அப்படி செய்யப்பட்டது.
22நாம் அறிந்தபடி, இதுவரை முழு படைப்பும் பிரசவ வேதனைப்பட்டுப் புலம்புகிறது. 23படைப்பு மட்டுமல்லாது பரிசுத்த ஆவியானவரின் முதற்பலனைப் பெற்றிருக்கின்ற நாமும், சரீர மீட்பின் மூலமாக தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாகும்படி ஆவலோடு காத்திருந்து எமக்குள்ளே புலம்பித் தவிக்கிறோம். 24இந்த எதிர்பார்ப்போடு நாம் மீட்கப்பட்டோம். எமது முன் எதிர்பார்ப்பு இப்போதே தெரிகின்றதெனில் அது முன் எதிர்பார்ப்பு அல்ல. ஒருவரும் இப்போதே தெரிகின்ற ஒன்றை பின்பு வரும் என்று எதிர்பார்த்திருப்பதில்லை. 25ஆனால் நம்மிடம் காணப்படாத ஒன்றை நாம் எதிர்பார்த்திருந்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம்.
26அவ்விதமாகவே ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கின்றார். நாம் எதற்காக மன்றாட வேண்டும் என்று நாம் அறியாதிருக்கின்றபடியால், வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஆழ்ந்த பெருமூச்சோடு, ஆவியானவர் தாமே நமக்காகப் பரிந்து மன்றாடுகின்றார். 27பரிசுத்த ஆவியானவர் இறைவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி, பரிசுத்தவான்களுக்காகப் பரிந்து மன்றாடுகின்றபடியால் எமது மனதை ஆராய்ந்தறியும் இறைவன், ஆவியானவருடைய மனதையும் அறிந்திருக்கிறார்.
28அத்தோடு இறைவனின் நோக்கத்தின்படி அழைக்கப்பட்டு, அவரில் அன்பாயிருக்கின்றவர்களின் நன்மைக்காக அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன என்று அறிந்திருக்கிறோம். 29ஏனென்றால் தாம் முன்பே அறிந்தவர்களைத் தம்முடைய மகனின் சாயலுக்கு ஒத்திருக்கும்படி இறைவன் முன்குறித்திருக்கிறார். இறைவனின் அநேக பிள்ளைகள் மத்தியிலே கிறிஸ்து முதற்பேறானவராய் இருக்கும்படி இப்படிச் செய்தார். 30அவர் முன்குறித்தவர்களை அழைத்திருக்கிறார், இப்படி அழைத்தவர்களை நீதிமான்களாய் ஆக்கியிருக்கிறார்; நீதிமான்களாய் ஆக்கியவர்களை மகிமைப்படுத்தியிருக்கிறார்.
வெற்றி மேல் வெற்றியடைபவர்கள்
31ஆகையால், இவைகளைப்பற்றி நாம் என்ன சொல்வோம்? இறைவன் நம் சார்பாக இருந்தால் நமக்கு எதிராய் இருப்பவர் யார்? 32தமது சொந்த மகனைக்கூட விட்டுவைக்காமல் அவரை நம் எல்லோருக்காகவும் ஒப்படைத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்கு கிருபையாக வழங்காதிருப்பது எப்படி? 33இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக யார் குற்றம் சுமத்த முடியும்? இறைவனே அவர்களை நீதிமான் என்று தீர்ப்பளித்துவிட்டாரே! 34அவர்களைக் குற்றவாளிகளென்று தீர்ப்பவன் யார்? மரணித்தவரும், அதிலும் மேலாக உயிருடன் எழுப்பப்பட்டவருமான கிறிஸ்து இயேசு, இறைவனுடைய வலது பக்கத்தில் இருந்து நமக்காக பரிந்து மன்றாடுகிறாரே. 35கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? துன்பமா, வேதனையா, துன்புறுத்தலா, பஞ்சமா, நிர்வாணமா, ஆபத்தா, கொடூர வன்முறையா?
36“உமக்காக நாங்கள் நாள்தோறும் கொல்லப்படுகிறோம்;
கொல்லப்படும் செம்மறியாடுகளைப் போல் எண்ணப்படுகிறோம்”#8:36 சங். 44:22
என்று எழுதியிருக்கிறதே.
37ஆனாலும் இவை எல்லாவற்றிலும், நம்மீது அன்பு வைத்தவரின் மூலமாய் நாம் வெற்றி மேல் வெற்றி அடைகின்றோம். 38ஏனெனில் மரணமோ வாழ்வோ, வானவர்களோ ஆளுகையோ, நிகழ்காரியமோ வருங்காரியமோ, வல்லமைகளோ, 39வானத்திலோ ஆழத்திலோ அல்லது படைக்கப்பட்டவைகளில் உள்ள வேறு எதுவுமோ நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிலிருக்கும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்ற உறுதி எனக்குண்டு.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ரோமர் 8: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

ரோமர் 8 க்கான வீடியோ