ரோமர் 7

7
திருமண வாழ்விலிருந்து உதாரணம்
1பிரியமானவர்களே, நீதிச்சட்டத்தைப் பற்றிய அறிவுள்ள உங்களுடனேயே நான் பேசுகின்றேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் வரையிலுமே நீதிச்சட்டம் அவன்மீது அதிகாரம் செலுத்துகின்றதென்று உங்களுக்குத் தெரியாதா? 2உதாரணத்துக்கு, திருமணமான ஒரு பெண் அவளுடைய கணவன் உயிரோடிருக்கும் வரைக்குமே, சட்டத்தினால் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்துபோனால் அந்த திருமணத்துக்குரிய சட்டங்களில் இருந்து அவள் விடுபடுகிறாள். 3எனவே தன் கணவன் உயிருடன் இருக்கையில் இன்னொருவருடன் வாழ்க்கை நடத்தினால் அவள் நடத்தை கெட்டவள் என அழைக்கப்படுவாள். ஆனால், அவளுடைய கணவன் இறந்த பின்னர் அவள் அந்தத் திருமணத்தின் சட்டத்திற்கு இப்போது உட்படாது இருப்பதால், அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தால் அவள் நடத்தை கெட்டவள் அல்ல.
4எனக்குப் பிரியமானவர்களே, அவ்விதமாகவே நீங்கள் கிறிஸ்துவின் உடல் ரீதியான மரணத்தின்#7:4 உடல் ரீதியான மரணத்தின் – கிரேக்க மொழியில் சரீரம் என்றுள்ளது. ஊடாக நீதிச்சட்டத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களானீர்கள். நீங்கள் வேறொருவருக்குச் சொந்தமாகி, அதாவது மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவருக்கு சொந்தமாகி, அதனால் நாம் இறைவனுக்கு கனி கொடுப்பதற்காகவே இது நடந்தது. 5ஏனெனில், நாம் நம்முடைய பாவ மனித இயல்பின்படி#7:5 பாவ மனித இயல்பின்படி – கிரேக்க மொழியில் மாம்சம் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த சொல், மனிதனுடைய பாவ நிலையைக் குறிக்கிறதாகவும், அநேக இடங்களில் ஆவியானவரை எதிர்த்து நிற்கிற சக்தியாகவும் குறிப்பிடப்படுகிறது. வாழ்ந்தபோது, நீதிச்சட்டத்தினாலே தூண்டி விடப்பட்ட பாவ ஆசைகளே நம்முடைய அங்கங்களில் செயலாற்றின. அதனால் மரணத்திற்கு ஏதுவான கனியே பிறப்பிக்கப்பட்டது. 6ஆனால் இப்பொழுதோ நாம் நம்மைக் கட்டி வைத்திருந்த நீதிச்சட்டத்திற்கு இறந்து, அதிலிருந்து விடுபட்டுள்ளோம். ஆகவே எழுதப்பட்ட பழைய சட்ட முறைமையின்படி இல்லாமல், ஆவியானவரின் புதிய வழியின்படி அவருக்குப் பணி செய்கின்றோம்.
நீதிச்சட்டமும் பாவமும்
7அப்படியானால் நாம் என்ன சொல்லுவோம்? நீதிச்சட்டம் பாவம் எனச் சொல்லலாமா? நிச்சயமாக இல்லை, எனினும், நீதிச்சட்டம் இல்லாதிருந்தால் பாவம் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்திருக்காது. “பிறருக்குரியவற்றில் ஆசைகொள்ளாதே”#7:7 யாத். 20:17; உபா. 5:21 என்று நீதிச்சட்டம் சொல்லாதிருந்திருந்தால், பிறருக்குரியவற்றில் ஆசைகொள்வது பாவம் என்று நான் அறியாதிருந்திருப்பேன். 8ஆனால் கட்டளையின் மூலமாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாவமானது எனக்குள்ளே எல்லாவிதமான தவறான ஆசைகளையும் தூண்டிவிட்டது. ஏனெனில் நீதிச்சட்டம் இல்லாதவிடத்து பாவம் உயிரற்றது. 9ஒரு காலத்தில் நீதிச்சட்டம் இல்லாதிருந்தபோது நான் உயிருள்ளவனாய் இருந்தேன். ஆனால் எப்போது நீதிச்சட்டம் வந்ததோ, அப்போது பாவம் உயிர் பெற்றது, நானோ உயிரற்றுப் போனேன். 10வாழ்வளிப்பதற்காக கொடுக்கப்பட்ட நீதிச்சட்டமே எனக்கு மரணத்தைக் கொண்டுவந்ததை நான் கண்டேன். 11ஏனெனில், நீதிச்சட்டத்தின் மூலமாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாவம் என்னை ஏமாற்றி, அந்த கட்டளையின் மூலமாக என்னைக் கொன்றது.#7:11 கொன்றது – இதன் அர்த்தம் என் ஆவிக்குரிய வாழ்வைக் கொன்றது என்பதாகும். 12எனவே நீதிச்சட்டம் பரிசுத்தமானது. கட்டளை பரிசுத்தமும், நியாயமும், நல்லதுமானது.
13அப்படியானால் நன்மையான ஒன்று, என் மரணத்துக்குக் காரணமாயிற்றா? இல்லவே இல்லை. உண்மையில் எது பாவம் என்பதை உணர்த்துவதற்காக பாவமே எனக்குள் மரணத்தை உருவாக்கியது. இதற்காக நன்மையான நீதிச்சட்டத்தை அது பயன்படுத்தியது. நீதிச்சட்டத்திலுள்ள கட்டளையின் மூலமாக பாவத்தின் அளவுகடந்த தன்மையை வெளிப்படுத்தவே இப்படிச் செய்தது.
14நீதிச்சட்டம் ஆவிக்குரியது என்பதை நாம் அறிவோம். ஆனால் நானோ பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்ட, ஆவிக்குரிய இயல்பில்லாத மனித இயல்புடையவன். 15நான் செய்கின்றதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் செய்ய விரும்புகின்றதைச் செய்யாமல், நான் வெறுக்கின்றதையே செய்கின்றேன். 16நான் செய்ய விரும்பாததை செய்வேனாயின், நீதிச்சட்டம் நல்லது என்பதை அங்கீகரிக்கிறேன். 17எனவே நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கின்ற பாவமே என்னை இப்படி நடக்கச் செய்கின்றது. 18அதாவது, என் ஆவிக்குரிய தன்மையற்ற மனித இயல்பில் நன்மை குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டுமென்ற விருப்பம் என்னில் இருந்தும், அதனை செய்ய இயலாத நிலையிலிருக்கிறேன். 19நான் செய்ய விரும்புகின்ற நன்மையை செய்யாமல் செய்ய விரும்பாத தீமையை தொடர்ச்சியாக செய்கின்றேன். 20நான் செய்ய விரும்பாததை நானே செய்தால், அப்படிச் செய்வது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கின்ற பாவமே அதைச் செய்கின்றது.
21எனக்குள்ளே இப்படியான ஒரு நியதி செயற்படுகின்றதைக் காண்கின்றேன். நான் நன்மை செய்ய விரும்பும் போதெல்லாம், தீமையும் என்னுள்ளே நெருங்கி இருக்கின்றது. 22என்னுடைய உள்ளான மனிதனில் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன். 23ஆனால் என் அங்கங்களில் வேறொரு நியதி செயற்படுவதைக் காண்கின்றேன். அது எனது மனதின் நியதிக்கு எதிராகப் போராடி, என் அங்கங்களில் செயற்படுகின்ற பாவ நியதிக்கு என்னை அடிமைப்படுத்துகிறது. 24பரிதாபகரமான மனிதன் நான்! இந்த மரண உடலில் இருந்து யார் என்னைத் தப்புவிப்பார்? 25நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எனக்கு விடுதலை கொடுக்கின்ற இறைவனுக்கு நன்றி!
எனவே நான் என் உள்ளத்தில் இறைவனுடைய நீதிச்சட்டத்திற்கு பணி செய்கின்றேன். ஆனால் என்னுடைய மனித இயல்பில் பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறேன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ரோமர் 7: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

ரோமர் 7 க்கான வீடியோ