2 பேதுரு 2

2
போலி போதகர்களும் அவர்களின் அழிவும்
1முற்காலத்தில் மக்கள் மத்தியில் போலி இறைவாக்கினர்கள் இருந்தது போலவே, உங்கள் மத்தியிலே இப்போது தவறான போதனைகளை செய்பவர்கள் இருப்பார்கள். அழிவுக்குரிய பிழையான கொள்கைகளை அவர்கள் இரகசியமாய் புகுத்தி, தங்களை விலை கொடுத்து மீட்ட எல்லாம் வல்ல கர்த்தரை மறுதலித்து விரைவில் தங்கள் மீது அழிவை வருவித்துக்கொள்வார்கள். 2அநேகர் அவர்களுடைய ஒழுக்கக்கேடான நடத்தையைப் பின்பற்றுவதனால் சத்தியவழிக்கு அவதூறு ஏற்படும். 3பேராசை கொண்ட இவ்வாறான போலி போதகர்கள், புனையப்பட்ட கதைகளைச் சொல்லி உங்களிடம் தங்களுக்குச் சுயலாபம் தேடுவார்கள். அவர்களுக்குரிய தண்டனை நீண்ட காலமாகவே ஆயத்தமாயிருக்கிறது, அவர்கள்மீது வரவிருக்கும் அழிவு உறங்கிக் கொண்டிருக்கவில்லை.
4பாவம் செய்த வானவர்களை இறைவன் தப்ப விடாமல் நரகத்திற்குள் தள்ளி, இருளின் சங்கிலிகளால் கட்டி, நியாயத்தீர்ப்புக்காக வைத்து, 5இறைபக்தியற்ற மக்களின் மீது அவர் வெள்ளத்தை வரச் செய்தபோது, முற்காலத்தில் இருந்த உலகத்தையும் தப்பித்துக்கொள்ள விடாதவராய், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் ஏழு பேர்களையும் அதிலிருந்து காப்பாற்றி, 6சோதோம், கொமோரா பட்டணங்களுக்குத் தண்டனைத்தீர்ப்பு வழங்கி, அவற்றைச் சுட்டெரித்து சாம்பலாக்கினார். இறைபக்தியற்றவர்களுக்கு நிகழப்போவதை காண்பிப்பதற்காக அந்தப் பட்டணங்களை முன்னுதாரணமாக வைத்து, 7அக்கிரமக்காரர்களின் நடத்தையினாலே மனமொடிந்து போன நீதிமானாயிருந்த லோத்தைக் காப்பாற்றினார். 8அந்த நீதிமான் நாளுக்குநாள் அவர்களில் தான் கண்டதும் கேட்டதுமான அநியாயச் செயல்களினாலே தன் நீதியான உள்ளத்தில் வேதனையடைந்தான். 9இறைபக்தியுள்ள மனிதரை சோதனைகளிலிருந்து காப்பாற்றவும், அநியாயக்காரர்களை நியாயத்தீர்ப்பின் தண்டனைக்கு உட்படுத்தவும் கர்த்தர் அறிந்திருக்கிறார். 10விசேடமாக பாவ மனித இயல்புக்குரிய சீர்கெட்ட ஆசையின்படி நடந்து அதிகாரத்தை அலட்சியம் செய்கின்ற இவர்கள், துணிகரமும் அகந்தையும் உள்ளவர்கள்; வானவர்களை பழித்துரைத்துப் பேசவும் பயப்படுவதில்லை. 11ஆனால், இவர்களைவிட வலிமையும், அதிக வல்லமையுமுள்ள இறைதூதர்கள்கூட வானவர்களுக்கு எதிராகக் கர்த்தர் முன்னிலையில் அவதூறாக தீர்ப்பு சொன்னதில்லை. 12ஆனால் இவர்களோ பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்காகவே பிறந்திருக்கின்ற, அழிவை எதிர்நோக்கியிருக்கும் புத்தியில்லாத மிருகங்களைப் போல புரியாத விடயங்களில் அவதூறு பேசுகின்றார்கள். அழிவுக்குரிய மிருகங்களைப் போல் இவர்களும் அழிந்து போவார்கள்.
13பகலின் வெளிச்சத்தில் சிற்றின்பக் களியாட்டத்தில் ஈடுபடுவதை இன்பமாக எண்ணுகின்ற இவர்கள், தங்கள் சிற்றின்பக் களியாட்டத்துக்காக உங்களுடைய விருந்துகளில் கலந்துகொள்ளும் அழுக்கும், கறையுமாயிருக்கின்றபடியால் தாங்கள் செய்த தீமைக்கேற்ற தீமையைப் பெறுவார்கள். 14இவர்கள் பாவத்தில் திருப்தி காணாத, தகாத உறவு நிறைந்த கண்களுடன் உறுதியற்றவர்களை தம்வசப்படுத்திக்கொள்ளும் பேராசையில் தேர்ச்சி பெற்ற இருதயத்தையுடைய சபிக்கப்பட்ட பிள்ளைகள் ஆவர். 15இவர்கள் நேர்வழியைவிட்டு விலகி நடந்து, அநீதியான கூலியைப் பெற ஆசைப்பட்ட பேயோரின் மகன் பிலேயாமின் வழியைப் பின்பற்றினார்கள். 16அவனுடைய மீறுதல் கண்டிக்கப்பட்டது. வாய் பேசாத ஒரு கழுதை மனிதக் குரலில் பேசி, அந்த இறைவாக்கினனின் புத்தியீனத்தைத் தடுத்தது.
17இவர்கள் தண்ணீர் இல்லாத நீரூற்றுகளும், புயல் காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்களுமாய் இருக்கின்றார்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. 18ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்பவரிடத்திலிருந்து இப்போது தப்பிப் பிழைத்து வந்த மக்களை இப்படிப்பட்டவர்கள் பெருமையான வீண் வார்த்தைகளைப் பேசி, அவர்களது உடலின் காம ஆசைகளைத் தூண்டிவிட்டு, அவர்களைத் தம் வசப்படுத்திக் கொள்கின்றார்கள். 19தாங்களே சீர்கேட்டிற்கு அடிமைகளாக இருந்துகொண்டு, இவர்கள் மற்றவர்களுக்கு விடுதலையை தருவதாக வாக்குறுதி கொடுக்கின்றார்கள். ஒருவன் எதனால் வெற்றி கொள்ளப்பட்டிருக்கின்றானோ, அதற்கே அவன் அடிமையாக இருக்கின்றான். 20நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டதன் மூலமாக உலகத்தின் சீர்கேட்டுக்குத் தப்பிய இவர்கள், மீண்டும் அதில் அகப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டால், இவர்களின் ஆரம்ப நிலைமையைவிட முடிவு மோசமாயிருக்கும். 21இவர்கள் நீதியின் வழியை அறிந்த பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளைகளை விட்டுத் திரும்பிப் போவதைவிட நீதியின் வழியை அறியாதவர்களாகவே இருந்திருந்தால் அதிக நலமாய் இருந்திருக்கும். 22“நாய் தான் வாந்தி எடுத்ததையே மீண்டும் தேடிப் போகின்றது,”#2:22 நீதி. 26:11 மற்றும், “நீரால் கழுவப்பட்ட ஒரு பன்றி, மீண்டும் சேற்றில் புரளும்படி போகின்றது” என்ற பழமொழிகள் இவர்களுக்கு உண்மையாகப் பொருந்தும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 பேதுரு 2: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்