2 பேதுரு 3

3
கர்த்தருடைய வருகையின் நாள்
1அன்புக்குரியவர்களே, இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். உங்கள் நினைவுகளை தூண்டி நினைவூட்டவே இந்த இரண்டு கடிதங்களையும் எழுதினேன். 2கடந்த காலத்தில் பரிசுத்த இறைவாக்கினர்களால் பேசப்பட்ட வார்த்தைகளையும், நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமானவர் உங்களுடைய அப்போஸ்தலர்கள் மூலமாய் கொடுத்த கட்டளைகளையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
3முதலாவதாக, கடைசி நாட்களில் ஏளனக்காரர்கள் வந்து ஏளனம் செய்து, தங்கள் தீய ஆசைகளின்படி நடந்துகொள்வார்கள். 4“திரும்பி வருவதாக அவர் வாக்குறுதி செய்தாரே, அது எங்கே? நம்முடைய முற்பிதாக்கள் மரணித்த காலத்திலிருந்து, படைப்பின் ஆரம்பத்தில் இருந்தது போலவேதான் எல்லாம் நடைபெறுகிறது” என்று சொல்வார்கள். 5ஆனால் அவர்கள் வெகு காலத்திற்கு முன்பே, இறைவனுடைய வார்த்தையாலே வானங்கள் உண்டாகின என்பதையும், பூமியானது தண்ணீரிலிருந்து பிரிந்தும், தண்ணீராலும் உண்டாக்கப்பட்டது என்பதையும் கவனிக்கத் தவறுகிறார்கள். 6இந்தத் தண்ணீரினாலேயே அப்போது இருந்த உலகம் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. 7தற்காலத்து வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்பில் இடப்படுவதற்காகவே ஒதுக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பின் நாளில் இறைபக்தியற்றவர்கள் அழிக்கப்படும் வரைக்கும் வைக்கப்பட்டிருக்கின்றன.
8என் அன்புக்குரியவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருடங்களைப் போலவும், ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைப் போலவும் இருக்கின்றன என்ற உண்மையை கவனிக்காமல் இருந்துவிட வேண்டாம். 9கர்த்தர் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கின்றார் என்று சிலர் சொல்கின்றபடி அவர் தாமதிக்காமல், ஒருவரும் அழிந்து போவதை விரும்பாமல் எல்லோரும் மனந்திரும்புதல்#3:9 மனந்திரும்புதல் – கிரேக்க மூலமொழியில் இந்த சொல்லின் அர்த்தம் பாவத்தைவிட்டு மனம் வருந்தி, மனந்திரும்பி இறைவனிடம் திரும்பு என்பதாகும். அடைய வேண்டும் என விரும்பியே உங்களைக் குறித்து பொறுமையாய் இருக்கின்றார்.
10ஆனால், கர்த்தருடைய நாள் ஒரு திருடனைப் போல் வரும். வானங்கள் பேரிரைச்சலுடன் மறைந்தொழிந்து போகும், வானில் உள்ளவை எல்லாம் நெருப்பினால் எரிந்து அழிந்து போகும், பூமியும் அதில் உள்ளவை யாவும் தீக்கிரையாகும்.
11இவ்விதமாக யாவும் அழியப் போவதனால், நீங்கள் எப்படிப்பட்ட மக்களாய் வாழ வேண்டியவர்கள் என சிந்தியுங்கள். நீங்கள் பரிசுத்தமும் இறைபக்தியுமுள்ளவர்களாய் வாழ்ந்து, 12இறைவனுடைய நாள் விரைவாய் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள். அந்த நாளில் வானங்கள் எரிந்து அழிந்து போகும், வானில் உள்ளவை எரிந்து உருகிப் போகும். 13ஆனால் நாமோ, இறைவனுடைய வாக்குறுதியின்படி நீதி குடிகொண்டிருக்கும், புதிய வானங்களுக்காகவும், புதிய பூமிக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
14ஆகையால் அன்புக்குரியவர்களே, நீங்கள் இவைகளுக்காகக் காத்திருக்கின்றபடியால், அவர் முன்பாக குற்றமற்றவர்களாகவும், தவறற்றவர்களாகவும், சமாதானமுள்ளவர்களாகவும் காணப்படும்படி முயற்சி செய்யுங்கள். 15அத்தோடு, கர்த்தருடைய பொறுமை நமக்கு மீட்பு என்பதாக எண்ணுங்கள். அன்புச் சகோதரன் பவுலும், இறைவன் அவனுக்குக் கொடுத்த ஞானத்தின்படியே இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறான். 16அவன் தன்னுடைய எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக் குறித்து சொல்லியிருக்கின்றான். அதில் புரிந்துகொள்ள கடினமான சில காரியங்களும் அடங்கியிருக்கின்றன. அதனால் அறிவில்லாதவர்களும் உறுதியற்றவர்களும், மற்ற வேதவசனங்களுக்கு தவறான விளக்கமளிப்பது போல் இவற்றுக்கும் விளக்கமளித்து தங்களுக்கு அழிவை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
17ஆகையால் என் அன்புக்குரிய நண்பர்களே! இதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கின்றபடியால், சட்டத்தை மீறுகின்றவர்களின் தவறுகளினால் வழிவிலகிப் போய், உங்கள் உறுதியான நிலையிலிருந்து விழாதபடி கவனமாயிருங்கள். 18நம்முடைய ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிகின்ற அறிவிலும், கிருபையிலும் வளர்ச்சி அடையுங்கள்.
அவருக்கே இப்போதும், எப்போதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 பேதுரு 3: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்