2 பேதுரு 1

1
1இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் அப்போஸ்தலனும் ஆகிய சீமோன் பேதுரு,
நம்முடைய இறைவனும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நீதியினால் எங்களைப் போன்ற விலைமதிப்பற்ற விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதுகின்றதாவது:
2இறைவனையும், நம்முடைய ஆண்டவர் இயேசுவையும் அறிவதன் மூலமாக உங்களுக்கு கிருபையும் சமாதானமும் பெருகுவதாக.
இறைவனுடைய அழைப்பின் நிச்சயம்
3அவர் தமது மகிமையினாலும் மேன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார். அழைத்தவரைப்பற்றி எமக்கு இருக்கும் அறிவின் மூலமாக நம்முடைய வாழ்க்கைக்கும் இறைபக்திக்கும் தேவையான எல்லாவற்றையும் அவருடைய இறைவல்லமை நமக்கு அளித்திருக்கிறது. 4இப்படி எமக்கு அளிக்கப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே இறைவனுடைய அதிமேன்மையான, உயர்மதிப்புடைய வாக்குறுதிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகளின் மூலமாக இந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொண்டு, தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
5இந்தக் காரணத்தினால், அதிக ஊக்கத்துடன் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பையும், நற்பண்புடன் அறிவையும், 6அறிவுடன் சுயகட்டுப்பாட்டையும், சுயகட்டுப்பாட்டுடன் விடாமுயற்சியையும், விடாமுயற்சியுடன் இறைபக்தியையும், 7இறைபக்தியுடன் சகோதர பாசத்தையும், சகோதர பாசத்துடன் அன்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 8இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, இவை நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உங்கள் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவும் பலனற்றவர்களாகவும் ஆகிவிடாதபடி உங்களைக் காத்துக்கொள்ளும். 9ஆனால் இந்தப் பண்புகள் இல்லாத ஒருவரோ, தனது முந்திய பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதை மறந்து போய், குறும்பார்வை குறைபாடுள்ளவராக அதாவது, அவர் பார்வையற்றவராக இருக்கின்றார்.
10ஆகையால் பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும், கிருபையினால் தெரிவு செய்யப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள உறுதியாக இருங்கள். இவற்றை நீங்கள் செய்துவந்தால், ஒருபோதும் தடுக்கி வீழ்ந்துவிட மாட்டீர்கள். 11நம்முடைய ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய அரசுக்குள் கௌரவமான வரவேற்பைப் பெற்றுக்கொள்வீர்கள்.
வேதவசனத்தின் இறைவாக்கு
12நீங்கள் இப்போது சத்தியத்தில் உறுதிப்பட்டவர்களாகவும், இவற்றை அறிந்தவர்களாகவும் இருக்கின்றீர்கள். ஆனாலும் நான் இவற்றை உங்களுக்கு தொடர்ந்தும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பேன். 13கூடாரமாகிய இந்த உடலில் நான் வாழும் வரை, உங்களுக்குள் அந்த நினைவை மீட்டெழுப்புவதே சரியென்று நான் எண்ணுகிறேன். 14ஏனெனில் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, விரைவாக நான் இந்தக் கூடாரத்தைவிட்டுச் செல்வேன் என்று அறிந்திருக்கிறேன். 15ஆகவே என்னுடைய மறைவுக்குப் பின்னர் நீங்கள் இவற்றை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்படி எல்லாவிதத்திலும் நான் முயற்சி செய்யப் போகின்றேன்.
16நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்தும், அவருடைய வருகையைக் குறித்தும் நாங்கள் உங்களுக்கு அறிவித்தபோது தந்திரமாய் திட்டமிட்ட புனைகதைகளை நாங்கள் பின்பற்றாமல், அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாகவே பேசினோம். 17“இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்”#1:17 மத். 17:5; மாற். 9:7; லூக். 9:35 என்ற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு ஒலித்தபோது பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் மாண்பும் மகிமையும் பெற்றுக்கொண்டார்.
18அவரோடு பரிசுத்த மலையில் நாங்கள் இருந்தபோது பரலோகத்திலிருந்து வந்த அந்த குரலைக் கேட்டோம். 19எங்களிடம் இன்னும் பல உறுதியான இறைவாக்குகள் உள்ளன. பொழுது புலர்ந்து உங்கள் இருதயங்களில் விடிவெள்ளி உதிக்கும் வரை இருளான இடத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தைப் போல அந்த வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தினால் நலன் பெறுவீர்கள். 20எல்லாவற்றிற்கும் மேலாக, வேதவசனத்திலுள்ள எந்த இறைவாக்கும் ஒருவருடைய சுயமான பொருள் விளக்கம் அல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டும். 21ஏனென்றால் இறைவாக்கு ஒருபோதும் மனித விருப்பத்தின்படி உண்டானது அல்ல. இறைவனுடைய மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரினால் உந்தப்பட்டு பேசினார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 பேதுரு 1: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்