2 கொரி 8

8
கர்த்தருடைய மக்களுக்கான உதவிப் பணி
1பிரியமானவர்களே, மக்கெதோனியாவிலிருக்கின்ற திருச்சபைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கின்ற கிருபையை நீங்கள் அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். 2அவர்கள் கடுமையான துன்பத்தினால் சோதிக்கப்படுகையில் நிறைவான மனமகிழ்ச்சியுடனும், கொடிய வறுமையின் மத்தியில் பெருகி வழியும் தாராள மனதுடனும் கொடுத்தார்கள். 3அவர்கள் தங்களால் இயலுமான அளவு கொடுத்ததுமல்லாமல், சுயவிருப்பத்தோடு அதற்கு அதிகமாயும் கொடுத்தார்கள் என்பதற்கு நானே சாட்சி. 4அத்தோடு, பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் இந்த உதவிப் பணியில் பங்குகொள்ளும் பாக்கியம் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என அவர்கள் எங்களிடம் மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். 5நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக, அவர்கள் முதலில் கர்த்தருக்கும் அதன்பின்பு இறைவனுடைய சித்தத்தின்படி எங்களுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். 6எனவே உங்களிடம் இந்த அன்பின் உதவிப் பணியை தொடங்கிய தீத்து, மீண்டும் உங்களிடமே திரும்பி வந்து அதை நிறைவு செய்யும்படி நாங்கள் அவனை ஊக்குவித்தோம். 7இப்பொழுதோ நீங்கள் விசுவாசத்திலும், பேச்சிலும், அறிவிலும், முழுநிறைவான ஆர்வத்திலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் சிறந்து விளங்குவதுபோலவே, தாராளமாய் கொடுப்பதிலும் சிறந்து விளங்குங்கள்.
8இதை ஒரு கட்டளையாக நான் உங்களுக்குச் சொல்லாமல், உதவி செய்வதில் மற்றவர்கள் எவ்வளவு ஆவலாய் இருக்கின்றார்கள் என்பதை உங்களுக்குக் காண்பித்து, உங்கள் உண்மையான அன்பைக் கண்டறியவே இதைச் சொல்கின்றேன். 9நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் செல்வந்தராய் இருந்தபோதும் அவருடைய ஏழ்மையின் மூலமாக நீங்கள் செல்வந்தர்களாகும்படி அவர் ஏழையாகினார்.
10எனவே, இந்த விடயத்தில் இதுவே நான் உங்களுக்குக் கொடுக்கும் சிறப்பான ஆலோசனை; இது உங்களுக்கு நன்மை தரும். ஒரு வருடத்துக்கு முன்பு இந்த வேலையை நீங்கள் தொடங்கி, அதை மிகுந்த ஆர்வத்துடன் செய்ய ஆரம்பித்தீர்கள். 11எனவே, இந்த வேலையை செய்து முடியுங்கள். இதைத் தொடங்குவதற்கு உங்களுக்கிருந்த ஆர்வத்தைப் போலவே, உங்களிடம் இருப்பதைக் கொடுத்து அதைச் செய்து முடியுங்கள். 12கொடுப்பதற்கு ஆவல் இருக்குமானால், ஒருவனிடம் என்ன இருக்கின்றதோ அதன்படி அவன் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும். அவன் தன்னிடம் இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை.
13மற்றவர்களின் கஷ்டத்தைப் போக்க அந்த பாரத்தை உங்கள் மீது நாங்கள் சுமத்த விரும்பவில்லை. ஆனால், எல்லோரும் சமநிலையில் இருப்பதையே விரும்புகிறோம். 14இக்காலத்தில் உங்களுடைய நிறைவு மற்றவர்களின் தேவைகளுக்கு உதவுவது போல், அவர்களுடைய நிறைவும் உங்கள் தேவைக்கு உதவும், இதுவே சமநிலை ஒழுங்கு. 15“அதிகமாய் சேர்த்தவனிடம், தேவைக்கதிகமாக இருந்ததில்லை. கொஞ்சமாய்ச் சேர்த்தவனிடம் குறைவாய் இருக்கவுமில்லை”#8:15 யாத். 16:18 என்று வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.
கொரிந்துவில் தீத்து
16எனக்கு உங்கள் மீது ஏற்பட்ட அதே கரிசனையை தீத்துவின் இருதயத்திலும் ஏற்படுத்திய இறைவனுக்கு நன்றி! 17ஏனெனில் தீத்து எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதுமன்றி, தன்னுடைய சுயவிருப்பத்தின்படி அதிக ஆர்வத்துடன் உங்களிடம் வருகின்றான். 18நற்செய்தியை பிரசங்கிப்பதில் எல்லாத் திருச்சபைகளின் மத்தியிலும் பெயர் பெற்றவனாகிய மற்றொரு சகோதரனையும் அவனுடன் அனுப்புகிறோம். 19அதுமட்டுமல்ல, கர்த்தருடைய பெயர் மகிமைப்படவும் எங்கள் நல்லெண்ணத்தை காண்பிக்கவும் செய்யப்படும் இந்த அன்பின் உதவிப் பணியில் எங்களுடனே நன்கொடையை எடுத்துச் செல்வதற்காக, திருச்சபைகளினால் அவன் நியமிக்கப்பட்டிருக்கிறான். 20தாராள மனதுடன் கொடுக்கப்படும் இந்த நன்கொடையை நாங்கள் கையாளும்போது, அதைக் குறித்து யாரும் எங்களைக் குறை சொல்லாதபடி, 21நாங்கள் கர்த்தருடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதருடைய பார்வையிலும் நேர்மையுள்ளவர்களாகச் செயல்பட முயற்சிக்கிறோம்.
22மேலும் நாங்கள், வேறொரு சகோதரனையும் அவர்களுடன் அனுப்புகிறோம். அவன் ஆர்வமுள்ள ஒருவன் என்பதை பலவிதங்களில் நிரூபித்திருக்கிறான். அவன் உங்களைப்பற்றி அதிக நன்னம்பிக்கையுடன் இருப்பதனால், இப்பொழுது அவன் இன்னும் அதிக ஆர்வமுள்ளவனாய் காணப்படுகிறான். 23தீத்துவைப் பொறுத்தவரை, அவன் உங்கள் நலனுக்காகப் பணி செய்யும் என்னுடைய பங்காளியும் சக ஊழியனுமாய் இருக்கின்றான். எங்கள் மற்றைய சகோதரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் திருச்சபையின் பிரதிநிதிகளும் கிறிஸ்துவுக்கு மகிமையுமாய் இருக்கின்றார்கள். 24ஆகவே, இவர்களுக்கு உங்களுடைய அன்பை நிரூபித்துக் காட்டி, நாங்கள் உங்களைப்பற்றி கொண்டிருக்கும் பெருமிதத்தை திருச்சபைகள் அனைத்தும் கண்டுகொள்ளத்தக்கதாக வெளிப்படுத்துங்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரி 8: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்