2 கொரி 9

9
1எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் இந்தப் பணியைக் குறித்து, நான் உங்களுக்கு எழுத அவசியமில்லை. 2ஏனெனில், உங்கள் ஆர்வம் எனக்குத் தெரியும். அதனால் மக்கெதோனியாவில் உள்ளவர்களுக்கு உங்களைக் குறித்துப் பெருமையாக சொன்னேன். அகாயாவிலுள்ள நீங்கள் கடந்த ஒரு வருடமாக ஆயத்தமாக இருக்கின்றீர்கள் என்று சொன்னபோது உங்கள் ஆர்வம் அவர்களில் அநேகரை உற்சாகப்படுத்தித் தூண்டியிருக்கிறது. 3இந்த விடயத்தில் நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமையாய்ப் பேசியது வெறும் வார்த்தைகளாயிராமல், நான் அவர்களுக்குச் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாய் இருப்பதற்கு இந்த சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். 4இல்லையென்றால், மக்கெதோனியாவில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் என்னுடன் வந்து உங்களை ஆயத்தமற்றவர்களாகக் கண்டால், உங்களில் இந்தளவு நம்பிக்கை வைத்ததற்காக நாங்கள் வெட்கித் தலைகுனிய நேரிடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை, அதுபோல நீங்களும் வெட்கித் தலைகுனிவீர்கள். 5எனவே, கட்டாயத்துக்காக கொடுத்ததாக இராமல், தாராள மனதுடன் கொடுக்கப்பட்டதாக காணப்படும்படி இந்தச் சகோதரர்கள் உங்களிடம் வந்து, நீங்கள் கொடுப்பதாக வாக்குறுதியளித்த நன்கொடையை ஆயத்தப்படுத்தும்படி இவர்களை முன்னதாக அனுப்புவது அவசியம் என்று நான் எண்ணினேன்.
தாராள மனதுடன் கொடுப்பவர்
6கொஞ்சமாய் விதைக்கிறவன் கொஞ்சமாக அறுவடை செய்வான், தாராளமாய் விதைக்கிறவன் தாராளமாய் அறுவடை செய்வான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 7எனவே, கட்டாயத்தின் பேரிலோ, விருப்பமில்லாமலோ கொடுக்காமல், ஒவ்வொருவனும் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். சந்தோஷமாய் கொடுக்கின்றவனிடம் இறைவன் அன்பாயிருக்கிறார். 8இறைவன் எல்லா கிருபையையும் உங்களுக்கு முழுநிறைவாய்க் கொடுக்க ஆற்றலுடையவராய் இருக்கின்றார். அதனால் நீங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் நிறைவுள்ளவர்களாக எல்லா நல்ல செயல்களிலும் பெருகுவீர்கள். 9இதைப்பற்றி வேதவசனத்தில்,
“இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது கொடைகளைத் தாராளமாய் கொடுத்திருக்கிறான்;
அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது”#9:9 சங். 112:9
என்று எழுதப்பட்டிருக்கின்றதே.
10விதைக்கிறவனுக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் கொடுக்கின்ற இறைவன், உங்களுக்கு விதையை கொடுத்து அதை பெருகச் செய்து, உங்கள் நீதியின் அறுவடையையும் பெருகச் செய்வார். 11நீங்கள் எல்லாவிதத்திலும் தாராளமாய்க் கொடுக்கின்றவர்களாகும்படி அவர் உங்களை எல்லாவற்றிலும் வளமுள்ளவராக்குவார். அதன்படி, எங்கள் மூலமாக செய்யப்படும் உங்களது தாராள செயலானது, அநேகர் இறைவனுக்கு நன்றி செலுத்த ஏதுவாக அமையும்.
12எனவே உங்களது இந்த உதவிப் பணியானது இறைவனுடைய மக்களின் தேவைகளைச் சந்திப்பதற்காக மட்டுமல்லாது, அதனால் அதிகமானவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தி, நன்றி பெருகவும் காரணமாக அமையும். 13ஏனெனில் நீங்கள் அறிவித்த கிறிஸ்துவின் நற்செய்திக்கேற்ப கீழ்ப்படிவுள்ளவர்களாகத் தாராள மனதுடன் கொடுப்பதில், நீங்கள் அவர்களோடும் மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டும் இருக்கின்றீர்கள். உங்களுடைய இந்த உதவிப் பணியின் மூலமாக உங்கள் பெருந்தன்மையை நிரூபித்திருப்பதற்காக அவர்கள் இறைவனுக்கு மகிமை செலுத்துவார்கள். 14அத்துடன், அவர்கள் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில், இறைவன் உங்களுக்குக் கொடுத்த அளவுகடந்த கிருபைக்காக உங்களுக்காக மன்றாடுவார்கள். 15அளவிட முடியாத இறைவனுடைய அன்பளிப்புக்காக அவருக்கு நன்றி உரித்தாகட்டும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரி 9: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்