2 கொரி 7

7
1ஆகையால் அன்பானவர்களே, இந்த வாக்குறுதிகள் நமக்கு இருக்கின்றபடியால், நம்முடைய உடலையும், ஆவியையும் அசுத்தப்படுத்துகின்ற எல்லாவற்றிலுமிருந்தும், நம்மைத் தூய்மையாக்கிக்கொண்டு, இறைபயத்துடன் பரிசுத்தத்தில் நிறைவடைவோம்.
பவுலின் மனமகிழ்ச்சி
2உங்கள் இருதயங்களில் எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் ஒருவருக்கும் தீமை செய்யவில்லை. நாங்கள் ஒருவரையும் கெடுக்கவில்லை. நாங்கள் ஒருவரையும் சுரண்டி வாழவுமில்லை. 3நான் உங்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. நான் முன்பே உங்களுக்கு சொன்னபடி உங்களுடன் வாழவும், மரணிக்கவும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்குமளவுக்கு, நீங்கள் எங்கள் இருதயத்தில் இடம்பெற்றிருக்கிறீர்கள். 4உங்களைக் குறித்து எனக்கு அதிக நிச்சயம் உண்டு. உங்களைக் குறித்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். உற்சாகத்தில் நான் நிறைந்திருக்கிறேன். அத்தோடு, எங்களது எல்லாத் துன்பங்களின் மத்தியிலும் என் மனமகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
5நாங்கள் மக்கெதோனியாவை வந்து சேர்ந்தபோதும் எங்கள் உடலுக்கு ஓய்வு இல்லாதிருந்தது. வெளியே போராட்டங்கள், உள்ளத்திலோ பீதி என திரும்பிய பக்கமெல்லாம் துன்பங்களே எங்களைச் சூழ்ந்திருந்தன. 6ஆனால் சோர்ந்து போனவர்களை ஆறுதல்படுத்துகின்ற இறைவன், தீத்துவின் வரவால் எங்களை ஆறுதல்படுத்தினார். 7அவனது வருகையால் மட்டுமல்ல, உங்களால் அவனுக்குக் கிடைத்த உற்சாகத்தினாலும் ஆறுதலடைந்தோம். என்னைப் பார்க்க நீங்கள் கொண்டிருக்கும் ஏக்கத்தையும், உங்கள் மனவேதனையையும், என்னைப் பற்றிய உங்கள் கரிசனையையும் அவன் எங்களுக்குச் சொன்னான். அதைக் கேள்விப்பட்டு நான் சொல்லொணா மகிழ்ச்சி அடைந்தேன்.
8நான் எழுதிய கடிதம் உங்களை மனவேதனைப்படுத்தியிருந்தாலும், அப்படி எழுதியது குறித்து நான் வருத்தப்படவில்லை. எனது கடிதம் சிறிது காலத்துக்கு மாத்திரமே உங்களுக்கு வேதனை தந்தது. முதலில் அது எனக்கு வருத்தமாக இருந்தாலும், 9இப்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மனவேதனைப்பட்டதற்காக அல்ல, இறைவனின் எண்ணப்படி உங்கள் மனவேதனையானது, உங்களை மனந்திரும்புதலுக்கு#7:9 கிரேக்க மூலமொழியில் மனந்திரும்புதலுக்கு என்ற சொல்லின் அர்த்தம் பாவத்தைவிட்டு மனம் வருந்தி, மனந்திரும்பி இறைவனிடம் திரும்பு என்பதாகும். இட்டுச் சென்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன். எங்களால் உங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 10ஏனெனில் இறைவனுக்கேற்ற துக்கம் வேதனையாக இராமல், மனந்திரும்புதலை உருவாக்கி, நம்மை மீட்புக்குள் வழிநடத்துகிறது. ஆனால் உலகத்துக்குரிய துக்கமோ மரணத்தை உருவாக்கும். 11இறைவனுக்குரிய இந்தத் துக்கம் உங்களில் எத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனப் பாருங்கள். உங்கள் தூய்மையை நிரூபிப்பதற்காக எந்தளவு ஆர்வம், எந்தளவு கோபம், எந்தளவு எச்சரிக்கை, எந்தளவு ஏக்கம், எந்தளவு அக்கறை, எந்தளவு தண்டனை! இவ்வாறு இவ்வனைத்திலும் நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து இருக்கின்றீர்கள். 12எனவே நான் உங்களுக்கு எழுதினாலும், அந்தத் தீமையைச் செய்தவனுக்காகவோ, தீமையினால் பாதிக்கப்பட்டவனுக்காகவோ எழுதவில்லை. எங்களைக் குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கறை எத்தகையது என்பதை, இறைவனுக்கு முன்பாக நீங்களே அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். 13இவை எல்லாவற்றினாலும் நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம்.
நாம் ஆறுதலடைந்ததோடு, தீத்து உங்களால் தன் ஆவியில் உற்சாகமடைந்து மகிழ்ச்சியாய் இருக்கின்றான் என்பதைக் கண்டு நாங்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தோம். 14உங்களைக் குறித்து அவனிடம் நான் பெருமையாகச் சொல்லி இருந்தவைகளைக் குறித்து, நான் வெட்கித் தலைகுனியும்படி நீங்கள் வைக்கவில்லை. அத்தோடு, நாங்கள் உங்களுடன் பேசிய அனைத்தும் உண்மையாக இருந்தது போல, உங்களைக் குறித்து தீத்துவுக்கு முன்பாக நாங்கள் பெருமையாகப் பேசியதும் உண்மையாயிற்று. 15நீங்கள் எவ்விதம் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவனை வரவேற்றீர்கள் என்பதை அவன் நினைக்கும்போது, உங்கள் மீதுள்ள அவனது அன்பு மென்மேலும் பெருகுகிறது. 16உங்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரி 7: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்