YouVersion Logo
Search Icon

திருமணம் கனத்துக்குரியதுSample

திருமணம் கனத்துக்குரியது

DAY 5 OF 5

நாள் 5: கணவனும் மனைவியும் தங்களுக்கு தேவனளித்த பங்கையும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வது திருமணத்தை கனப்படுத்துகிறது

திருமணத்தில் கணவன் மனைவியின் பங்கையும் பொறுப்பையும் இன்று உலகமும் கலாச்சாரமும் தீர்மானிக்கிறது. ஆனால் தேவனுடைய வார்த்தை கற்பிக்கும் பங்கு மற்றும் பொறுப்புகள், உலகின் எந்த கலாச்சாரத்திற்கும் பொருந்தும். எனவே, தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதியாகமத்தில், ஏதேன் தோட்டத்தை பராமரிக்கவும்,பாதுகாக்கவும் தேவன் ஆதாமை அழைக்கிறார். தேவன் ஏவாளைப் படைத்தபோது, அவளுக்கு இன்னொரு தோட்டத்தை கொடுக்கவில்லை, ஆனால் ஆதாமுக்கு ஏற்றதுணையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றார். பாவத்தின் விளைவால் முதல் திருமணம் தோல்வியடைந்து, தன் படைப்பின் நோக்கத்தை இழந்தது. ஆனால் கடைசி ஆதாமாகிய இயேசு கிறிஸ்து, பாவத்தால் விழுந்த மனிதனை தூக்கியெடுத்து, திருமணத்திலிருந்து எதிரி திருடியதை மீட்டெடுத்தார்.

திருமணத்தில் கணவன், மனைவியின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து பவுல் தனது நிருபங்களில் தெளிவுபடுத்துகிறார்.

கணவனின் பங்கு: தன் மனைவியிடம் இயேசுவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். பின்வரும் வழிகளில் இதைச் செய்யலாம்:

தேவைகளை சந்திப்பவர்: கணவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விசாரிக்க அழைக்கப்படுகிறார் (1 தீமோத்தேயு 5:8). கணவன், வீட்டிலிருந்தே பிள்ளைகளை கவனிக்கிறவராகவும், மனைவியை வெளியே அனுப்பி குடும்பத்தின் தேவைகளை சந்திப்பவராகவும் இருப்பது சரியானதல்ல. அதை ரோல் ரிவர்சல்(role reversal)என்று உலகம் அழைக்கிறது – தேவன் எப்போது அதை மாற்றினார்?

பாதுகாவலர்: கணவன் தன் மனைவியை உணர்ச்சிப்பூர்வமாக, உடல் ரீதியாக, ஆவிக்குரியரீதியாக பாதுகாக்க அழைக்கப்படுகிறார் (1 பேதுரு 3:7). வார்த்தைகள் அல்லது செயல்களினால் அவளை துஷ்பிரயோகம் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். அவர் தனது பொறுப்புகளை செய்யாமல், மனைவிக்கு மனஅழுத்தத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தக்கூடாது.

ஆசாரியர்: கணவன் தன் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக அழைக்கப்படுகிறார். (எபேசியர் 5:26,27). அவரே தன் குடும்பத்தில் ஆவிக்குரிய சூழலை உருவாக்கவும் அதை பராமரிக்கவும் வேண்டும். குடும்ப வரைமுறைகளை அமைத்து, தெய்வீகமற்ற செயல்களை சரிசெய்ய தயாராக இருக்க வேண்டும்.

காதலன்-கணவனின் அன்பும் சேவையும் முதலாவதாக வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். உண்மையான அன்பை குடும்பத்திற்கு வெளிப்படுத்தி இயேசுவின் அன்பை காட்டவேண்டும்.

மனைவியின்பங்கு: இயேசுவுக்கு கீழ்ப்படிவது போல கணவனுக்கு கீழ்ப்படிய அழைக்கப்படுகிறார்.

கீழ்ப்படிதல் (submission)- கீழ்ப்படிதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே சில பெண்களின் மனம் புண்படுகிறது. கீழ்ப்படிதல், பெண்களை ஆண்களைவிட தாழ்வாக ஆக்குகிறது என்று நினைப்பது சரி இல்லை! கீழ்ப்படிதல் என்றால் தன் கணவனுக்கு தேவன் கொடுத்த தலைமைப் பொறுப்பை ஒப்புக் கொண்டு அதை ஏற்றுக்கொள்வதாகும் (எபேசியர் 5:22, 23). மனைவி தன் சுயவிருப்பத்தின்படி செயல்படாமல், தன் கணவனின் தலைமைத்துவத்தின் கீழ் செயல்படுவதே இதன் பொருள் ஆகும்.

மதிப்புமற்றும் மரியாதை- மனைவி தன் கணவனை மேன்மையாக கருதுவதே இதன் பொருள். கணவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை மதித்து நடக்க வேண்டும் (எபேசியர் 5:33; 1 பேதுரு 3:1,2). மதிப்பும் மரியாதையும் முதலில் இருதயத்தில் தொடங்க வேண்டும்; மேலும் வார்த்தைகளாலும் தன் கணவனை மதிக்கவேண்டும்.

ஏற்ற துணை– மனைவி தன் கணவனுக்கு உறுதுணையாக நின்று, ஆதரித்து,தேவனுடைய எண்ணத்தின்படி தன் கணவன் உருவாக உதவ வேண்டும். தேவனோடு தனக்குள்ள அனுதின உறவின்படி தன் கணவனுக்கு தெய்வீக ஞானத்தையும், ஆலோசனையையும் தர வேண்டும். தன் கணவன் சம்பாதித்து கொண்டு வருவதை ஞானமாய் நிர்வகிக்க வேண்டும். (நீதிமொழிகள் 31:10-27)

காதலி: மனைவியின் அன்பும் சேவையும் முதலாவதாக வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் (தீத்து 2:4)

ஜெபம்: அன்புள்ள பரலோகத் தகப்பனே, உமது உதவியின்றி எங்களால் இந்த பொறுப்பை நிறைவேற்ற முடியாது என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தேவனுக்கேற்ற கணவன் மனைவியாக செயல்படுவதற்கு உமது ஞானம் தேவை. ஆவியானவரே, எங்கள் குடும்பத்திற்கு எது சரி, எது சிறந்தது என்பதை பகுத்தறிய கூடிய ஞானத்தை வழங்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

Day 4

About this Plan

திருமணம் கனத்துக்குரியது

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்க வேண்டும் என்று எபிரெயர் 13:4ல் தேவனுடைய வார்த்தை கூறுகிறது.இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை நமக்கு என்ன பொருள்படுகிறது? இது ஏன் முக்கியம் என்றும், திருமணத்தை தேவன் நினைத்தபடி எப்படி கனப்படுத்த வேண்டும் என்றும் இந்த 5 நாள் தியானத்தில் ஆழ்ந்து பார்க்கவும். இந்த தியானம் உங்கள் திருமணத்தை வளப்படுத்தும் என்றும், உங்களை ஒருவருக்கொருவர்டமும் தேவனிடமும் இன்னும் நெருக்கமாக கொண்டு வரும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம்.

More