இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?Sample
இயேசுவின் மரணம் ஏன் நல்ல வெள்ளி (பெரிய வெள்ளி) என்று அழைக்கப்படுகிறது?
இயேசுவின் மரணம் ஒரு துயர சம்பவம் என்று சிலர் நினைக்கலாம். நல்ல வெள்ளி என்ற வார்த்தையை கேட்ட உடனே அது ஒரு தவறான சொல்வழக்கு என்று நினைக்கத் தோன்றுகிறது. இயேசு அந்த குறிப்பிட்ட நாளிலே பாடுபட்டு மரித்திருப்பாரானால், ஏன் அது நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?
மற்றுமொரு கண்ணோட்டத்தில் நாம் பார்த்தால், இயேசுவின் மரணம் மனுக்குலத்தின் வரலாற்றிலே ஒரு மிகப்பெரிய சம்பவம். ஏனென்றால் அவருடைய மரணத்தினாலே நாம் இரட்சிக்கப்பட முடியும். பாவம் ஒன்று மட்டுமே நம்மையும் கடவுளையும் பிரித்து விடுகிறது. ஆனால் பாவம் மிகவும் அபாயமானது. இந்த உலக வாழ்வில் நம்மை கடவுளிடமிருந்து அது பிரிப்பது மட்டுமல்ல, நித்திய நித்தியமாகவும் அவரிடத்திலிருந்து பாவம் நம்மை பிரித்து விடுகிறது. பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறபடி “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23).
அப்படியென்றால் நமக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள பிளவு எப்படி இணைக்கப்பட முடியும்? நம்முடைய பாவங்கள் எப்படி அகற்றப்பட முடியும்? நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், நம்மால் நமது பாவத்தை அகற்றவே முடியாது. பூரணமாகிய கடவுளுடைய உயர்நிலைக்கும் நமக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஆனால் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அது என்ன? கடவுள் தாமாகவே இடைப்பட்டு நம்மை இரட்சிக்க முடியும். உண்மையில் அது தான் பெரிய வெள்ளி அன்று நடைபெற்றது! தம்முடைய சிலுவை மரணத்தினாலே, இயேசுவே நம்முடைய பாவங்களுக்கு ஏற்ற இறுதி பலியாக விட்டார். நம்முடைய பாவங்களுக்காக நாம் தான் மரிக்க வேண்டும் – ஆனால் நமக்கு பதிலாக இயேசு மரித்தார்.
ஆம், அதையே நல்ல வெள்ளி என்று அழைக்கிறோம். ஏனெனில் அன்று தான் நம்முடைய இரட்சிப்பு நிஜமானது. நடைபெற்றதெல்லாம் உண்மையில் மிகவும் நல்லவை – இயேசு தமது அன்பினிமித்தம் அதை நிறைவேற்றினார். நல்ல வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று சொல்வதில் உள்ள நல்ல என்ற ஆங்கில பதத்துக்கு பரிசுத்தம் என்ற அர்த்தமும் உண்டு. எனவே அந்த நாளை பரிசுத்த வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இன்னும் சிலர் கடவுளுடைய வெள்ளி என்ற பதத்திலிருந்து நல்ல வெள்ளி மருவி வந்தது என்றும் சொல்கின்றனர்.
“நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்“ என்று அப்போஸ்தலர் பவுல் 1 கொரிந்தியர் 15:3ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.
சிலுவையிலே அகோர பாடுகளும் கடவுளுடைய மன்னிப்பும் சேர்ந்து இருப்பதை நம்மால் காண முடியும். “நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தம் செய்யும்” என்பதை சங்கீதம் 85:10 பாடலாக பதிவு செய்கிறது. கடவுளுடைய சத்தியமும் கிருபையும் சிலுவையில் சந்தித்துக் கொண்டன. பாவத்துக்கு எதிரான கடவுளுடைய நியாயத்தீர்ப்பு, நியாயமாக நமக்குத்தான் தண்டனை அளித்திருக்க வேண்டும். ஆனால் இயேசு அந்த தண்டனையை தாமே ஏற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக மன்னிப்பு, இரக்கம், சமாதானத்தை நமக்கு அளித்திருக்கிறார்.
கடவுளுடைய கோபாக்கினையும், இரக்கமும் ஒன்றையொன்று சிலுவையில் சந்தித்த அற்புதமான நாள் பெரிய வெள்ளி. எனவே தான் பெரிய வெள்ளி மிகவும் இருட்டானது, அதே வேளையில் மிகவும் நல்லது.
இயேசு கிறிஸ்து நல்ல வெள்ளி தினத்தன்று சிலுவையில் பாடுகளை சகித்ததினால், அதைத் தொடர்ந்து அவரது மகிமையான உயிர்த்தெழுதல், நம்முடைய இரட்சிப்பு, கடவுளுடைய நீதி மற்றும் சமாதானத்தின் ஆட்சி, அத்தனையும் சாத்தியமாயிற்று. ”அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்தார்” என்று எபிரேயர் 12:2ல் வாசிக்கிறோம்.
மேற்கோள் :
“கடவுள் பக்தியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்வின் கோர முடிவல்ல சிலுவை, மாறாக இயேசுவோடு நமக்கு ஏற்படும் உறவின் துவக்கநிலையில் சிலுவை நம்மை சந்திக்கிறது” – டியட்ரிச் பான்ஹோஃபெர்.
ஜெபம் :
ஆண்டவரே, நீர் இலவசமாக அருளும் இரட்சிப்பை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும், என்றென்றும் உம்முடன் நித்திய ஐக்கியத்தை பெற்றுக் கொள்ளும் பெரிய வெள்ளி அனுபவத்தையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.
Scripture
About this Plan
இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டாரா? ஒரு சதித்திட்டத்தினால் அவர் பாதிக்கப்பட்டவரா? இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு யார் காரணம்? இயேசு கிறிஸ்துவின் மரணம் எப்படி நல்ல வெள்ளி என்று அழைக்கப்பட முடியும்? அது நல்லது என்றால், நாம் துக்கப்பட வேண்டுமா அல்லது கொண்டாட வேண்டுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு இந்த 7 நாட்கள் தியானத்திட்டத்தில் விடைகளைக் காணலாம்.
More