YouVersion Logo
Search Icon

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?Sample

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?

DAY 3 OF 7

இயேசுவை கொன்றது யார்? 

வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், இயேசுவின் சிலுவை மரணத்திற்கான பொறுப்பு, யூத மத தலைவர்கள் மற்றும் எருசலேமில் இருந்த யூதர்கள் மேல் வைக்கப்படுகிறது. ஆனால் சமீப நாட்களாக இதைக் குறித்து, இயேசுவின் மரணத்திற்காக பொறுப்பை ரோமர்கள் மேலும், ரோம ஆளுநரான பொந்தியுபிலாத்துவின் மேலும் வேதஅறிஞர்கள் வைக்கிறார்கள். ஏனெனில் இயேசுவின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அறிந்த போதும், அவரை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்ததினால், இயேசுவின் மரணத்தில் பிலாத்துவுக்கும் பொறுப்பு இருக்கிறது. 

இயேசுவின் மரணத்துக்கு யூத தலைவர்களையும், மக்களையும் கூட பொறுப்பாக்க முடியும். ஏனெனில் அப்போஸ்தலர் 2:22-23 மற்றும் 4:10 ஆகிய வசனங்களில் அப்போஸ்தலர் பேதுரு தனது சொந்த யூத மக்கள், இயேசுவை சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்ததை குறிப்பிட்டு குற்றம் சாட்டுகிறார். மத்தேயு 27:25ம் வசனத்தில் “இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று” யூத மக்கள் சொன்னதாக வாசிக்கிறோம். 

தெய்வநிந்தனை பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு யூதனுக்கு மரண தண்டனை கொடுக்க யூதருக்கு அதிகாரம் இல்லாத காரணத்தால், தேசதுரோக குற்றம் சாட்டி, ரோமர்களைக் கொண்டே இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்ட விஷயத்தை, நான்கு சுவிசேஷங்களும் மறைமுகமாகவும், நேரடியாகவும் நமக்கு தெரிவிக்கின்றன. 

முழு மனுக்குலத்தின் பாவத்துக்கும், இயேசுவே பரிகாரம் செலுத்தித் தீர்க்க வேண்டும் என்பது பிதாவாகிய தேவனுடைய சித்தமாக இருந்தது என்பதையும் பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. “தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்” என்று பெந்தேகோஸ்தே நாளில் பேதுரு பிரசங்கம் செய்த நிகழ்வை அப்போஸ்தலர் 2:23ல் நாம் வாசிக்கிறோம். 

அப்போஸ்தலர் 14:35-36 வசனங்களில் இயேசு கெத்சமனே தோட்டத்தில் “சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று பிதாவை நோக்கி ஜெபிக்கிறார். இதையே “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்” என்று ஏசாயா தீர்க்கன் சொல்வதை ஏசாயா 53:10ல் வாசிக்கிறோம்.

மேலே நாம் தியானித்த எல்லா விஷயங்களையும் பார்க்கும் போது, இயேசு, உதவிகிடைக்காத “பாதிக்கப்பட்ட நபர்” இல்லை என்பதை வேதாகமம் உறுதி செய்கிறது. அவர் தாமாக முன்வந்து தமது ஜீவனை மனமுவந்து ஒப்புக்கொடுத்தார் (யோவான் 10:14-18).

முழு உலகத்தின் பாவத்துக்கும் பரிகாரியாக இயேசு சிலுவையில் மரித்தார் என்பது நிருபணமாகும் போது, யூதர்களோ ரோமர்களோ இயேசுவை சிலுவையில் அறையவில்லை; மாறாக நம்முடைய பாவங்களே இயேசுவை சிலுவையில் அறைந்தன. நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக, தமது சிலுவை மரணத்தினாலே இயேசு கிறிஸ்து விலைக்கிரயத்தைச் செலுத்தினார்.

இயேசு சிலுவையில் மரித்தார். அவரது மரணம் அகில உலகின் பாவத்துக்கும் ஏற்ற பலியாக அமைந்தது. ஆனால் அற்புதமான விஷயம் என்னவென்றால், மரணத்தால் அவரை கட்டுப்படுத்தி வைக்க இயலவில்லை. ஏனெனில் அவர் மரணத்தை வென்று, கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இப்போது யூதருக்கும், புறஇன மக்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும், யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து, அவரது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறார்களோ, அவர்கள் எல்லாருக்கும் பாவ மன்னிப்பு நிச்சயமாகவே உண்டு. 

மேற்கோள்: 

“குற்றமற்ற தேவஆட்டுக் குட்டிக்கு எதிராக, விரோதமும் வெறுப்பும் நிறைந்தவராய், கூச்சலிடும் கூட்டத்தினரோடு நீங்களும் நின்று கொண்டிருப்பதை காணும் வரைக்கும், உங்கள் பாவத்தின் அகோரமும் ஆழமும் எவ்வளவென்று முழுவதும் புரிந்து கொள்ள முடியாது” – சி.ஜெ.மஹெனே (C.J. Mahaney)

ஜெபம்

ஆண்டவரே, சிலுவையில் நான் இருக்க வேண்டிய இடத்தில், எனக்கு பதிலாக இயேசுவை நீர் அனுப்பியதற்காக நன்றி. என்னை நானே இரட்சிக்க முடியாது. நீர் ஒரு இரட்சகரை அனுப்பியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.

Day 2Day 4

About this Plan

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?

இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டாரா? ஒரு சதித்திட்டத்தினால் அவர் பாதிக்கப்பட்டவரா? இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு யார் காரணம்? இயேசு கிறிஸ்துவின் மரணம் எப்படி நல்ல வெள்ளி என்று அழைக்கப்பட முடியும்? அது நல்லது என்றால், நாம் துக்கப்பட வேண்டுமா அல்லது கொண்டாட வேண்டுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு இந்த 7 நாட்கள் தியானத்திட்டத்தில் விடைகளைக் காணலாம்.

More