YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 7

7
முத்திரையிடப்பட்டவர்கள் 1,44,000
1இதற்குப் பின்பு, பூமியின் நான்கு மூலைகளிலும் நான்கு இறைதூதர்கள் நிற்கக் கண்டேன். அவர்கள் நிலத்தின் மீதோ, கடலின் மீதோ, மரத்தின் மீதோ காற்று வீசி அவைகளைச் சேதப்படுத்தாதபடி பூமியின் நான்கு திசை காற்றுகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். 2வேறொரு இறைதூதன் கிழக்கிலிருந்து வருவதைக் கண்டேன். வாழும் இறைவனுடைய முத்திரையை அவன் வைத்துக் கொண்டிருந்தான். நிலத்தையும் கடலையும் சேதப்படுத்துவதற்கு வல்லமை கொடுக்கப்பட்டிருந்த நான்கு இறைதூதர்களையும் அவன் உரத்த குரலில் அழைத்து, 3“நமது இறைவனுடைய ஊழியர்களின் நெற்றிகளில் நாங்கள் முத்திரையிடும் வரை நிலத்தையோ, கடலையோ, மரங்களையோ அழிக்க வேண்டாம்” என்றான். 4அப்போது முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதை நான் கேட்டேன். இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்தும் முத்திரையிடப்பட்டவர்கள் 1,44,000 பேர்:
5யூதா கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
ரூபன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
காத் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
6ஆசேர் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
நப்தலி கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
மனாசே கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
7சிமியோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
லேவி கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
இசக்கார் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
8செபுலோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
யோசேப்பு கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
பென்யமீன் கோத்திரத்திலிருந்து, 12,000 பேரும் முத்திரையிடப்பட்டார்கள்.
வெண்ணிற ஆடை அணிந்த பெரும் கூட்டத்தினர்
9இதற்குப் பின்பு நான் பார்த்தபோது எனக்கு முன்பாக எவராலும் எண்ண முடியாத அளவுக்குப் பெரும் திரளான மக்கள் கூட்டத்தினர் நின்று கொண்டிருந்தார்கள். எல்லா இடங்களையும் பின்னணிகளையும் நாடுகளையும் மொழிகளையும் சேர்ந்தவர்களாகிய அவர்கள், அரியணைக்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வெண்ணிற ஆடை அணிந்தவர்களாய் தங்கள் கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்தவர்களாகவும் நின்று கொண்டிருந்தார்கள். 10அவர்கள் உரத்த குரலில்:
“இரட்சிப்பானது அரியணையில் அமர்ந்திருக்கும் எங்கள் இறைவனுக்கும்,
ஆட்டுக்குட்டியானவருக்குமே உரியது”#7:10 இரட்சிப்பானது அரியணையில் அமர்ந்திருக்கும் எங்கள் இறைவனிடமிருந்தும் ஆட்டுக்குட்டியானவரிடமிருந்துமே கிடைக்கிறது என்றும் மொழிபெயர்க்கலாம்.
என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். 11அப்போது அரியணையைச் சூழ்ந்தும், மூப்பர்கள் மற்றும் நான்கு உயிரினங்களைச் சூழ்ந்தும் நின்று கொண்டிருந்த எல்லா இறைதூதர்களும், அரியணைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு, 12அவர்கள் சொன்னதாவது:
“ஆமென்!
துதியும், மகிமையும்,
ஞானமும், நன்றியும், மாண்பும்,
வல்லமையும்,
பலமும் எங்கள் இறைவனுக்கே என்றென்றும் உண்டாவதாக.
ஆமென்!”
13அப்போது, அந்த மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து, “வெண்ணிற ஆடை அணிந்திருக்கிறார்களே, இவர்கள் யார்? இவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான்.
14அதற்கு நான், “ஐயா, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.
அப்போது அந்த மூப்பர் என்னிடம், “கொடிய உபத்திரவத்தின் மூலமாக வந்தவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவி, வெண்மையாக்கியவர்கள். 15அதனாலேயே,
“இவர்கள் இறைவனுடைய அரியணைக்கு முன்னிருந்து,
அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு ஊழியம் செய்கின்றார்கள்.
அரியணையில் அமர்ந்திருக்கிற அவர்,
அவர்களுடன் குடியிருந்து அவர்களுக்கு பாதுகாப்பாய் இருப்பார்.
16அவர்கள் இனியொருபோதும் பசியாயிருக்க மாட்டார்கள்,
இனியொருபோதும், அவர்கள் தாகமாயிருக்கவும் மாட்டார்கள்.
வெயிலோ, எந்தக் கடுமையான வெப்பமோ,
அவர்களைத் தாக்காது.#7:16 ஏசா. 49:10
17ஏனெனில், அரியணையின் நடுவிலிருக்கின்ற ஆட்டுக்குட்டியானவரே
அவர்களின் மேய்ப்பராயிருக்கிறார்.
‘அவர் அவர்களை வாழ்வு தரும் தண்ணீர் ஊற்றுகளுக்கு வழிநடத்திச் செல்வார்.’#7:17 ஏசா. 49:10
‘இறைவன் அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்து விடுவார்’ ”#7:17 ஏசா. 25:8
என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in