YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 8

8
ஏழாவது முத்திரையும் தூபகிண்ணமும்
1ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையைத் திறந்தபோது, பரலோகத்தில் சுமார் அரைமணி நேரம் அமைதி நிலவியது.
2அப்போது, இறைவனுக்கு முன்பாக நிற்கும் ஏழு இறைதூதர்களை நான் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
3இன்னொரு இறைதூதன் வந்து பலிபீடத்தின் அருகே நின்றான். அவன் தங்க தூபகிண்ணம் ஒன்றை வைத்திருந்தான். அரியணைக்கு முன்பாக இருக்கின்ற தங்கத்தினாலான பலிபீடத்தின் மீது, பரிசுத்தவான்கள் அனைவருடைய மன்றாடல்களைச் சேர்த்து தூபம் காட்டும்படி அவனுக்குப் பெருமளவு நறுமணத்தூள் கொடுக்கப்பட்டது. 4அந்த இறைதூதனுடைய கையிலிருந்து தூபத்தின் புகை எழுந்து, பரிசுத்தவான்களுடைய மன்றாடல்களுடன் சேர்ந்து, இறைவனுக்கு முன்பாக மேல்நோக்கிச் சென்றது. 5பின்பு அந்த இறைதூதன், தூபகிண்ணத்தை பலிபீடத்திலிருந்த நெருப்பினால் நிரப்பி பூமியின் மேல் அந்த நெருப்பை வீசினான். அப்போது இடிமுழக்கத்தின் சத்தங்களும், பேரிரைச்சல்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன.
எக்காளங்கள்
6பின்பு ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு இறைதூதர்களும் அவற்றை ஊதுவதற்கு ஆயத்தமானார்கள்.
7முதலாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது, இரத்தம் கலந்த ஆலங்கட்டியும் நெருப்பும் தோன்ற, அவை பூமியின் மேல் வீசப்பட்டன. பூமியின் மூன்றில் ஒரு பங்கு எரிந்து போனது, மரங்களில் மூன்றில் ஒரு பங்கும் எரிந்து போனது, பசுமையான புற்கள் அனைத்துமே எரிந்து போயின.
8இரண்டாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது, தீப்பற்றி எரிகின்ற பிரமாண்டமான மலை போன்ற ஒன்று கடலில் வீசப்பட்டது. கடலில் மூன்றிலொரு பங்கு இரத்தமாக மாறியது. 9கடலில் வாழும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இறந்து போனது. கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கும் அழிந்து போனது.
10மூன்றாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து ஒரு பெரிய நட்சத்திரம், ஒரு தீப்பந்தத்தைப் போல் எரிந்து கொண்டு விழுந்தது. அது இவ்வாறாக ஆறுகளின் மூன்றில் ஒரு பங்கின் மேலும், நீரூற்றுகளின் மேலும் விழுந்தது. 11அந்த நட்சத்திரத்தின் பெயர் கசப்பு என்பதாகும். தண்ணீரின் மூன்றிலொரு பங்கு கசப்பாக மாறியது. கசப்பாக மாறிய அந்தத் தண்ணீரினால் மனிதர்களில் பலர் இறந்து போனார்கள்.
12நான்காவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது சூரியனில் மூன்றில் ஒரு பங்கும், சந்திரனில் மூன்றில் ஒரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கும் பாதிப்படைந்தன. இதனால், அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருளடைந்தது. பகலின் மூன்றிலொரு பங்கும், இரவின் மூன்றிலொரு பங்கும் வெளிச்சம் இல்லாமல் போனது.
13பின்பு நான் பார்த்தபோது, நடுவானத்திலே பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு உரத்த சத்தமிட்டு, “ஐயோ! ஐயோ! மற்ற மூன்று இறைதூதர்களினால் ஊதப்படப் போகின்ற எக்காள சத்தங்களினால், பூமியில் குடியிருக்கின்றவர்களுக்கு ஐயோ பேரழிவு வரப் போகின்றதே!” என்று சொல்வதைக் கேட்டேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in