YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 6

6
முத்திரைகள்
1நான் பார்த்துக்கொண்டிருக்கையில், ஆட்டுக்குட்டியானவர் அந்த ஏழு முத்திரைகளில் முதலாவது முத்திரையைத் திறந்தார். அப்போது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, இடி முழக்கத்தைப் போன்ற குரலில், “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். 2அப்போது அங்கே எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை நிற்பதைப் பார்த்தேன். அதில் அமர்ந்திருந்தவன் ஒரு வில்லை பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் வெற்றி பெறுவதற்காக, ஒரு வெற்றி வீரனாக புறப்பட்டுச் சென்றான்.
3ஆட்டுக்குட்டியானவர் இரண்டாவது முத்திரையைத் திறந்தபோது, இரண்டாவது உயிரினம், “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். 4அப்போது இன்னொரு குதிரை வெளியே வந்தது, அது கருஞ்சிவப்பு நிறமுடையதாய் இருந்தது. அதில் அமர்ந்திருந்தவனுக்கு பூமியிலிருந்து சமாதானத்தை நீக்கி விடுவதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது. மனிதர்கள் தாங்களே ஒருவரையொருவர் கொன்று விடும்படி அந்த வல்லமை அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவனுக்குப் பெரிய வாள் ஒன்றும் கொடுக்கப்பட்டது.
5ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது, மூன்றாவது உயிரினம், “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். நான் பார்த்தபோது, அங்கே எனக்கு முன்பாக இதோ ஒரு கறுப்புக் குதிரை நின்றது. அதில் அமர்ந்திருந்தவன் தன் கையிலே தராசு ஒன்றைப் பிடித்துக் கொண்டிருந்தான். 6அப்போது மனிதனின் குரலில், “ஒரு நாட் கூலி பணத்துக்கு ஒரு கிலோ கிராம் கோதுமை, ஒரு நாட் கூலி பணத்துக்கு#6:6 ஒரு நாட் கூலி பணத்துக்கு – கிரேக்க மொழியில் ஒரு தினாரி என்றுள்ளது. இது அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு நாணயம். மூன்று கிலோ கிராம் வாற்கோதுமை. ஆனால் எண்ணெயையும் திராட்சை ரசத்தையும் சேதமாக்கி விடாதே!” என்று சொல்வதைக் கேட்டேன். அந்தக் குரல் அந்த நான்கு உயிரினங்களின் நடுவிலிருந்து வந்தது போலிருந்தது.
7ஆட்டுக்குட்டியானவர் நான்காவது முத்திரையைத் திறந்தபோது, நான்காவது உயிரினத்தின் குரலை நான் கேட்டேன். அது, “வா” என்று சொன்னது. 8அப்போது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நிற்பதைப் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயரிடப்பட்டிருந்தது. பாதாளம் அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும், பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை கொல்வதற்கு அவற்றுக்கு வல்லமை கொடுக்கப்பட்டது.
9ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையைத் திறந்தபோது, இறைவனுடைய வார்த்தையின் காரணமாகவும், சாட்சிகளாய் வாழ்ந்ததன் காரணமாகவும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன். 10அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமும் சத்தியமும் உள்ளவரான ஆண்டவராகிய கர்த்தாவே, பூமியில் குடியிருக்கின்றவர்களை எவ்வளவு காலத்துக்கு நீர் நியாயம் தீர்க்காமலும், எங்கள் இரத்தத்தை சிந்திய அவர்களைப் பழிவாங்காமலும் இருப்பீர்?” என்று கூக்குரலிட்டார்கள். 11அப்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வெண்ணிற ஆடை கொடுக்கப்பட்டது. அத்துடன், இன்னும் சிறிது காலம் அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஏனெனில், அவர்களுடைய சக ஊழியர்களும் சகோதரர்களுமானவர்களில் அவர்களைப் போலவே கொல்லப்பட வேண்டியவர்களின் முழு எண்ணிக்கை நிறைவாகும் வரை அவர்கள் பொறுத்திருக்கும்படி சொல்லப்பட்டது.
12ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையைத் திறப்பதை நான் பார்த்தேன். அப்போது பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வேளையில், சூரியன் கறுப்புக் கம்பளியைப் போல் கறுத்தது, சந்திரன் இரத்தம் போல் சிவப்பானது. 13பலத்த காற்றினால் அத்தி மரம் அசைக்கப்படும்போது, பழுக்காத அத்திக் காய்கள் வந்து விழுவது போல வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன. 14புத்தகச் சுருள் ஒன்று சுருட்டப்படுவது போல வானம் சுருட்டப்பட்டு மறைந்து போனது. ஒவ்வொரு மலையும், தீவும் அவைகளுக்குரிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டன.
15அப்போது பூமியில் உள்ள அரசர்களும், இளவரசர்களும், படைத் தலைவர்களும், செல்வந்தர்களும், வலிமையுள்ளவர்களும், அடிமைகளும், சுதந்திரக் குடிமக்களுமாகிய ஒவ்வொருவரும் குகைகளிலும் மலைகளின் நடுவே கற்பாறைகளிலும் ஒளிந்துகொண்டார்கள். 16அவர்கள் அந்த மலைகளையும், கற்பாறைகளையும் பார்த்து, “நீங்கள் எங்கள்மேல் விழுங்கள்.#6:16 ஓசி. 10:8. அரியணையில் அமர்ந்திருக்கின்றவருடைய பார்வையிலிருந்தும், ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்! 17அவருடைய கோபத்தின் பெரிதான நாள் வந்துவிட்டது. அதை யாரால் தாங்க முடியும்?” என்று சொன்னார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in