YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 5

5
ஆட்டுக்குட்டியானவர்
1பின்பு அரியணையில் அமர்ந்திருப்பவரின் வலதுகையில் ஒரு புத்தகச் சுருள் இருப்பதை நான் கண்டேன். அது இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது. 2அப்போது “இந்த முத்திரைகளை உடைத்து, புத்தகச் சுருளைத் திறப்பதற்குத் தகுதியுள்ளவன் யார்?” என்று உரத்த குரலில் அறிவித்துக்கொண்டிருந்த வல்லமையுள்ள ஒரு இறைதூதனைக் கண்டேன். 3ஆனால் அந்தப் புத்தகச் சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கோ பரலோகத்திலோ பூமியிலோ அல்லது பூமியின் கீழோ உள்ள ஒருவராலும் முடியவில்லை. 4அந்தப் புத்தகச் சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே வாசிப்பதற்கோ, தகுதியுள்ளவர்கள் எவரும் காணப்படவில்லை என்பதால் நான் மிகவும் அழுதேன். 5அப்போது அந்த மூப்பர்களில் ஒருவன் என்னிடம், “அழாதே! இதோ, புத்தகச் சுருளையும் அதன் ஏழு முத்திரைகளையும் திறப்பதற்கு யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் வெற்றி பெற்றிருக்கின்றார்” என்றான்.
6பின்பு ஆட்டுக்குட்டியானவர் அந்த நான்கு உயிரினங்களாலும், இருபத்துநான்கு மூப்பர்களாலும் சூழப்பட்டு அரியணையின் நடுவில் கொல்லப்பட்ட தோற்றத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அவருக்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. இந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்பட்ட இறைவனுடைய ஏழு ஆவிகள். 7ஆட்டுக்குட்டியானவர் வந்து அரியணையில் அமர்ந்திருந்தவருடைய கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டார். 8அவர் அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டதும் அந்த நான்கு உயிரினங்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகக் கீழே விழுந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வீணையையும், தூபம் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள். அத்தூபம் பரிசுத்தவான்களின் மன்றாடல்களைக் குறிக்கின்றது.
9அந்த மூப்பர்கள் ஒரு புதிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:
“அந்தப் புத்தகத்தை எடுக்கவும்,
அதன் முத்திரைகளைத் திறக்கவும் நீர் தகுதியுள்ளவர்.
ஏனெனில் நீர் கொல்லப்பட்டீர்.
உம்முடைய இரத்தத்தினாலே எல்லா பின்னணியிலிருந்தும்,
எல்லா மொழியைப் பேசுகின்றவர்களிலிருந்தும், எல்லா நாட்டு மக்களிலிருந்தும், எல்லா பகுதியிலிருந்தும் மனிதர்களை இறைவனுக்கென்று விலை கொடுத்து வாங்கிக்கொண்டீர்.
10நீர் அவர்களை ஓர் அரசாகவும், நமது இறைவனுக்கு ஊழியம் செய்யும் மதகுருக்களாகவும் நியமித்திருக்கின்றீர்.
அவர்கள் பூமியின்மீது ஆளுகை செய்வார்கள்.”
11அதன்பின்பு நான் பார்த்தபோது, அரியணையையும் அந்த உயிரினங்களையும் மூப்பர்களையும் சுற்றிக் காணப்பட்ட இறைதூதர்களின் குரலைக் கேட்டேன். அவர்கள் எண்ணிக்கையில் ஆயிரங்கள் ஆயிரங்களாகவும், இலட்சங்கள் இலட்சங்களாகவும் இருந்தார்கள். 12அவர்கள் உரத்த குரலில்:
“கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும்,
செல்வத்தையும், ஞானத்தையும், வலிமையையும், மாண்பையும், மகிமையையும், துதியையும் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்!”
என்று பாடினார்கள்.
13பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின் கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும்,
“அரியணையில் அமர்ந்திருக்கின்றவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும்
துதியும், மாண்பும், மகிமையும், வல்லமையும்
என்றென்றைக்கும் உண்டாவதாக!”
என்று பாடுவதைக் கேட்டேன். 14அதற்கு, அந்த நான்கு உயிரினங்களும், “ஆமென்” என்று சொல்ல, அந்த மூப்பர்களும் பணிவுடன் விழுந்து வழிபட்டார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in