YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 4

4
பரலோகத்தில் அரியணை
1இதற்குப் பின்பு நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக பரலோகத்திலே ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட எக்காளத்தைப் போல் தொனித்த அந்தக் குரல் என்னுடனே பேசுவதைக் கேட்டேன். “இங்கே மேலே வா, இதற்குப் பின் நிகழப்போவதை, நான் உனக்குக் காண்பிப்பேன்” என்று அக்குரல் ஒலித்தது. 2உடனே நான் ஆவிக்குள்ளானேன். அங்கே எனக்கு முன்பாக பரலோகத்தில், ஒரு அரியணை இருந்ததைக் கண்டேன். அதன்மீது ஒருவர் அமர்ந்திருந்தார். 3அதில் அமர்ந்திருந்தவர் படிகக்கல் போலவும், மாணிக்கக்கல் போலவும் தோற்றமுடையவராக இருந்தார். அரியணையைச் சுற்றி, மரகதம் போன்ற ஒரு வானவில் பிரகாசித்தது. 4அந்த அரியணையைச் சுற்றி இன்னும் இருபத்துநான்கு அரியணைகள் இருந்தன. அவைகளின் மீது இருபத்துநான்கு மூப்பர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் வெண்ணிற ஆடை அணிந்தவர்களாக, தங்கள் தலைகளில் தங்கக் கிரீடங்களை சூடியிருந்தார்கள். 5அந்த அரியணையிலிருந்து மின்னல்களும், பேரிரைச்சல்களும், முழக்கத்தின் சத்தங்களும் வந்துகொண்டிருந்தன. அரியணைக்கு முன்பாக ஏழு தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. இவைகளே இறைவனுடைய ஏழு ஆவிகள். 6அத்துடன், அரியணைக்கு முன்பாக பளிங்கு போன்ற கண்ணாடிக் கடல் ஒன்று இருந்தது.
அதன் நடுவிலே அரியணையைச் சுற்றி நான்கு உயிரினங்கள் இருந்தன. அவற்றின் முன்பக்கமும் பின்பக்கமும் கண்களால் நிறைந்திருந்தன. 7முதலாவது உயிரினம் சிங்கத்தைப் போலவும், இரண்டாவது உயிரினம் எருதைப் போலவும், மூன்றாவது உயிரினம் மனித முகம் போன்ற முகத்தை உடையதாகவும், நான்காவது உயிரினம் பறக்கின்ற கழுகைப் போலவும் இருந்தன. 8இந்த நான்கு உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஆறு சிறகுகள் உடையனவாகவும், அவை கண்களால் நிறைந்தனவாகவும் இருந்தன. அவற்றின் சிறகுகளின் கீழேயும்கூட கண்கள் இருந்தன. இரவும் பகலும் இடைவிடாமல் அவை இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தன:
“ ‘எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தர்
பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,’#4:8 ஏசா. 6:3
இவரே இருந்தவரும், இருக்கின்றவரும், வரப் போகின்றவருமானவர்.”
9அந்த அரியணையில் அமர்ந்திருக்கின்றவரும், என்றென்றும் வாழ்கின்றவருமாகிய அவருக்கு அந்த உயிரினங்கள், மகிமை, கனம் நன்றி செலுத்தும் போதெல்லாம், 10இருபத்துநான்கு மூப்பர்களும் அரியணையில் அமர்ந்திருக்கின்றவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கின்றவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் தங்கள் கிரீடங்களை அரியணைக்கு முன்பாகக் கழற்றி வைத்து:
11“எங்கள் இறைவனாகிய கர்த்தாவே,
மகிமையையும் மாண்பையும்
வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்கு நீர் தகுதியுள்ளவரே.
ஏனெனில், நீரே எல்லாவற்றையும் படைத்தீர்.
உம்முடைய சித்தத்தினாலேயே, அவை எல்லாம் படைக்கப்பட்டு உயிர் வாழ்கின்றன,”
என்று பாடினார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in